Published : 11 Jul 2014 08:31 AM
Last Updated : 11 Jul 2014 08:31 AM
‘உலகெங்கும், அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதை 2015-க்குள் உறுதிப் படுத்த வேண்டும்’ என்ற தன்னுடைய புத்தாயிரமாண்டு இலக்கு நிறைவேறாது என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை நிறைவேற்ற உலக நாடுகள் ஒத்துழைத்துச் செயல்படுவது தொடர்பாக முடிவுசெய்ய பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில் இந்தத் தகவலை ஐ.நா. வெளியிட்டிருக்கிறது.
அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை ஐ.நா. மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தாலும், உலகில் 5.8 கோடி சிறுவர், சிறுமியர் இன்னமும் தொடக்கக் கல்வியைக்கூட எட்ட முடியாத நிலையில் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தக் கல்வித் திட்டத்துக்கு நிதி தருவதாக முதலில் ஒப்புக்கொண்ட வளர்ந்த நாடுகள், 2011 முதலே தங்களுடைய பங்களிப்பைக் குறைத்துக் கொண்டுவிட்டன. இரு பெரிய கொடையாளர்கள் தங்களுடைய பங்கில் 30%-ஐக் குறைத்துவிட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பும் குறைந்துவிட்டது. 2007-ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதே இலக்கின் முதல் படி ஆட்டம் கண்டது. அடுத்தடுத்து, நிதி வரவு குறைந்தது, இலக்கை நோக்கிய பயணம் கொஞ்சம்கொஞ்சமாக முடங்கிப்போனது.
பிரஸ்ஸல்ஸ் மாநாடு, ஏற்கெனவே பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவும், கல்வி யின் தரத்தைக் கூட்டவும் முயற்சிகள் எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. கூடவே, நிதி பங்களித்தவர்களின் கடந்த கால வாக்குறுதியை நிறை வேற்றவும் வலியுறுத்தியிருக்கிறது. பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் பங்கேற்ற கொடையாளர் நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி தங்களுடைய பங்கை அளிக்க முயற்சிகள் எடுப்பதாக வாக்குறுதி தந்தனர். மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற 60 வளரும் நாடுகள், ஆரம்பக் கல்விக்குத் தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டுள்ளன. இந்த மாநாட்டின் மிக முக்கியமான அம்சம் இது. மாநாட்டின் இன்னொரு பயன், மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் கல்விக்கு அது கொடுத்திருக்கும் முக்கியத்துவம். பள்ளி செல்லாக் குழந்தைகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் மாற்றுத்திறனாளிகள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. வெறும் வறுமை மட்டுமே சிறுவர்கள் படிக்காமல் இருப்பதற்கான காரணம் அல்ல என்பதற்கான உதாரணம் இந்த அறிக்கை.
உலக மக்கள்தொகையில், சுமார் 15 சதவீதத்தினர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகள் என்று உலகச் சுகாதார அமைப்பும் உலக வங்கியும் சுட்டிக்காட்டுகின்றன. இத்தனை கணிசமான எண்ணிக்கையில் இருப்போரின் கல்வித் தேவை களைப் பூர்த்திசெய்வது அரசுகளின் கடமை என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள். மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் பள்ளிகளில் சேரவும், படிப்பை முடிக்கவும் சிறப்பு முயற்சிகளும் சிறப்புத் திட்டங்களும் சிறப்பு ஒதுக்கீடுகளும் அவசியம். பிரஸ்ஸல்ஸ் மாநாடு இதையும் வலியுறுத்தி யிருக்கிறது.
ஒருபுறம் இந்த நவீன காலத்திலும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிப்படுத்தும் இலக்கையே சென்றடைய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், மறுபுறம் இலக்கை நோக்கிய பயணத்தை விடாமல் தொடர்கிறோம் என்ற ஆறுதல் கிடைக்கிறது. முன்னேறுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT