Published : 20 Oct 2017 10:02 AM
Last Updated : 20 Oct 2017 10:02 AM

டெங்கு மரணங்கள்: இல்லாமல் போன முன்னெச்சரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இருக்கிறது மாடம்பாக்கம் ஊராட்சி. சுமார் ஆயிரம் குடியிருப்புகள் கொண்ட பஞ்சாயத்து இது. ஆனால், தேடினாலும் ஒரு குப்பைத் தொட்டியைக்கூட பார்க்க முடியாது. குப்பைகளை சாலையோரங்களிலும் ஏரி, வாய்க்கால் போன்றவற்றிலும்தான் கொட்டுகிறார்கள். கழிவு நீர் வடிகாலும் மழை நீர் வடிகாலும் கிடையாது. அப்படியே சாலையோரம் விட்டுக்கொள்கிறார்கள்.

டெங்குவால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுச் சுகாதார நெருக்கடி நிலை கோரிக்கைகள் எழுந்துள்ள சூழலில் இதுவரை இந்தப் பகுதியில் கொசு ஒழிப்புக்காக அரசு தரப்பிலிருந்து ஒருவர்கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், இதே நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட 633 ஊராட்சிகளிலும் டெங்கு ஒழிப்புக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்கிறது மாவட்ட நிர்வாகம். இவ்வளவு அபாயகரமான சூழலிலும் தமிழகக் கிராமப் பகுதிகளில் பொதுச் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம்தான் மாடம்பாக்கம்!

தமிழகத்தில் சுமார் 10,000 கிராமப் பஞ்சாயத்துக்களில் நிதிநிலை இருப்பு பூஜ்ஜியம். குறிப்பாக, கடந்த 2016, அக்டோபர் மாதத்திலிருந்து மாதம்தோறும் வர வேண்டிய பராமரிப்பு பணி நிதி வரவில்லை. பல கிராமங்களில் பஞ்சாயத்துச் செயலர்கள் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியும் கைக்காசு செலவழித்தும் ஓராண்டாக சமாளித்துவந்தார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ. 4,000 கோடியை மறுத்துவிட்டது மத்திய அரசு. கொசு அழிப்பு மருந்துகள், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள், புகை மருந்து அடிக்க டீசல், மண்ணெண்ணைய் வாங்க பணம் இல்லை. பெரும்பாலான பஞ்சாயத்துக்களில் கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான் இயந்திரங்களும், கையால் புகை பரப்பும் இயந்திரங்களும் இல்லை.

நிதி இல்லாத கிராமப் பஞ்சாயத்துக்களின் நிலை இது என்றால் நிதி இருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் நிதியைக் கொசுக்களை ஒழிப்பதற்காகச் செலவிட்டும் கொசுக்களும் டெங்கு காய்ச்சலும் குறையவில்லை. காரணம் ஊழல். அடிப்படையில் புகை அடித்துக் கொசுவை அழிக்க பைரித்ரின் (Pyrethrin) வகை மருந்தும், தேங்கும் தண்ணீரில் கலந்து கொசுவை அழிக்க டெமபோஸ் (Temefos) வகை மருந்தும் பயன்படுத்தப்பட வேண்டும். இவற்றைப் பயன்படுத்தவும் சரியான முறைகள் இருக்கின்றன.

கொசு ஒழிப்பு மருந்திலும் கலப்படம்

ஆனால், தமிழகத்தில் மேற்கண்ட கொசு அழிப்பு மருந்துகளையே உபயோகிப்பதில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தமிழக அரசு பயன்படுத்தும் டெமபோஸ் வகை மருந்தை வைத்து சோதனை மேற்கொண்டது. அந்த மருந்தை கலக்க வேண்டிய விகிதத்தைவிட அதிகமாகவே ஒரு சோதனைக் குழாயில் கலந்து அதில் கொசுவின் லார்வா புழுக்களை விட்டது. சில நிமிடங்களிலேயே இறக்க வேண்டிய அவை இரண்டு மணிநேரத்துக்கு மேலாகியும் இறக்காமல் சுறுசுறுப்பாகவே இயங்கின. இதிலிருந்தே அரசு பயன்படுத்தும் மருந்துகளின் தரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளலாம்.

“மாநகராட்சி தொடங்கி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பைத்திரின், டெமிபாஸ், அபேட் உள்ளிட்ட உண்மையான கொசு ஒழிப்பு மருந்துகளை வாங்குவது கிடையாது. இவை கிலோ ரூ.600 தொடங்கி 700 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இங்கு பளீச்சிங் பவுடரும் சுண்ணாம்புத் தூளும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த போலி மருந்துக்கு கிலோ ரூ. 1,200 முதல் ரூ.1,600 வரை கணக்கு எழுதுகிறார்கள். இதனால் கொசுக்கள் ஒழிப்பு சாத்தியம் இல்லை” என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர்.

கிராமங்களின் நிலை இது என்றால் நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பிரச்சினை கடும் குளறுபடியில் இருக்கிறது. போர்க்கால நடவடிக்கையாக 15 நாட்களுக்கு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்த நாட்களிலேயேகூட ஆமை வேகம்தான். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி தினசரி காலை 6.30 மணிமுதல் 10.30 மணிக்குள்ளாகவும், மதியம் 2.30 மணி முதல் 5 மணிக்குள்ளாகவும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் 24 மணி நேரமும் குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பதை சகஜமாகக் காண முடிகிறது.

கொசு மருந்தால் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படும் என்ற குரலும் இன்னொரு பக்கம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான கொசு மருந்தையே அரசு ஒழுங்காக அடிக்காத சூழலில் மாற்று வழிகளையெல்லாம் சுத்தமாக அரசு பரிசீலிப்பதே இல்லை.

இறந்தது எத்தனை பேர்?

டெங்கு ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் பாதிப்புதான். தமிழகத்தில் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை டெங்கு பாதிப்புகளுக்குள்ளான கடந்த ஆறாண்டு புள்ளிவிவரம் அரசிடம் உள்ளது. அதன் அடிப்படையில் பருவ மழை தொடங்கும் முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியிருந்தால் பாதிப்புகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் அதிகார நாற்காலி விளையாட்டுகளில் மும்முரமாக இருந்துவிட்டு உயிரிழப்புகள் உச்சத்தை அடைந்த பின்பு அமைச்சரவையைக் கூட்டியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

தமிழகத்தில் தினசரி 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், கடந்த அக்டோபர் 10-ம் தேதி ‘40 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்கள்’ என்று தமிழக அரசின் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்தார். ஆனால் மூன்று நாட்கள் கழித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்த அறிக்கையில்‘டெங்கு காய்ச்சலால் 18 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு பிரச்சினை என்றில்லை, கடந்த ஓராண்டாகவே தமிழக ஆட்சியாளர்களுக்கு நீட் தேர்வு உட்பட மக்களை நேரடியாக பாதிக்கும் அனைத்து விஷயங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களைச் சொல்வதில் எவ்விதத் தயக்கமும் சங்கடங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. கொசுவை அழிக்க சாணத்தைச் தெளிக்கச் சொல்லிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் மரணங்கள் ஆட்சியாளர்களுக்கு சகஜமாக போய்விட்டது. ஆனால், இவர்களேதான் சென்னையில் சுகாதாரக் கேடு பரப்புவதாகச் சொல்லி 20 ஆயிரம் கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, ரூ.12.5 லட்சம் அபராதத்தை விதித்துள்ளார்கள். டெங்கு பரவலுக்கும் டெங்கு மரணங்களுக்கும் பிரதான பொறுப்பாளியான அரசு, செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருந்துவிட்டு இப்போது மக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது! அடிப்படை அறத்தில் மேலும் மேலும் இந்த அரசு வீழ்ந்துகொண்டிருப்பதை உயிர் வேதனையுடன் மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

-டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு:

sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x