Published : 25 Jul 2014 09:08 AM
Last Updated : 25 Jul 2014 09:08 AM
ராமானுஜனைப் பற்றி உருவாகியிருக்கும் ஒரு தொன்மத்தைப் பற்றிய அலசல்.
கணித மேதை சீனிவாச ராமானுஜன் இடைநிலை (இண்டர்மீடியட்) தேர்வில் கணக்குப் பாடத்தில் தோற்றுப்போனாரா? அவர் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு?
தொடக்கத்திலிருந்தே இதைப் பற்றிப் பல குழப்பங்கள் நிலவிவந்திருக்கின்றன. 1919 மார்ச் மாதத்தில் இங்கிலாந்திலிருந்து ராமானுஜன் திரும்பியபோது ‘மதராஸ் டைம்ஸ்' நாளேடு (6 ஏப்ரல் 1919) வெளியிட்ட கட்டுரையில், ‘டிசம்பர் 1907-ல் ஃபர்ஸ்ட் எக்ஸாமினேஷன் இன் ஆர்ட்ஸ் பரீட்சையில் தனித் தேர்வராக அமர்ந்து எல்லாப் பாடங்களிலும் தோற்ற பெருமை இவருக்கு உண்டு - இதற்குக் காரணம், அவருடைய உடல்நலக் குறைவே என்பதில் ஐயமில்லை' என்று எழுதியது. ராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய சென்னைத் துறைமுகக் கழகத்திலுள்ள கோப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது என்ற குறிப்பும் இக்கட்டுரையில் உள்ளது. (எஃப்.ஏ. அல்லது இண்டர்மீடியட் என்பது பள்ளியிறுதி அல்லது மெட்ரிகுலேஷனுக்குப் பிறகும், இளங்கலை அல்லது பி.ஏ-வுக்கும் இடையில் அமையும் இரண்டாண்டுப் படிப்பு.)
ஸ்நோ ஏற்படுத்திய குழப்பம்
ராமானுஜனின் புரவலராகவும் கணிதவியல் தோழராகவும் விளங்கிய ஜி.எச். ஹார்டியின் இளம் நண்பர் சி.பி. ஸ்நோ, ‘ஆங்கிலப் பாடத்தில் தோற்றதால் மேதையாக இருந்தாலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராமானுஜன் நுழைய முடியவில்லை' என்று ஹார்டியின் ‘ஒரு கணிதவியலாளனின் மன்னிப்பு' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். ராமானுஜன் தோற்றது கணக்கிலா ஆங்கிலத்திலா என்ற குழப்பத்தோடு, பள்ளியிறுதியினையும் இடைநிலைத் தேர்வினையும் ஸ்நோ குழப்பிவிடுகிறார்.
ராமானுஜனின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராபர்ட் கானிகல், நான்கு முறை இடைநிலைத் தேர்வை எழுதி, கணக்கைத் தவிர பிற பாடங்கள் எல்லாவற்றிலும் அவர் தோற்றதாகச் சொல்கிறார். ராமானுஜன் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம், தனித்தேர்வராக எஃப்.ஏ. எழுதிக் கணக்கில் மட்டும் நூறு மதிப்பெண் பெற்று, பிற பாடங்களிலெல்லாம் அவர் தோற்றார் என்கிறது.
தொன்மத்தின் ஊற்றுக்கண்
1967-ல் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்திய நூலகவியலின் தந்தை எனப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் ஒரு பாடமாக 1922-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டு முறைகளை ஆராய்ந்திருக்கிறார். அப்போது பழைய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தையும் பார்வையிட்டிருக்கிறார். ராமானுஜன் ‘கணக்கிலே மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றார். பிற பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதே அவர் தேர்ச்சி பெறாததற்குக் காரணம். இதுதான் உண்மைக் கதை' என்கிறார்.
இருப்பினும், இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கணித மேதை ராமானுஜன் கணக்கில் தோற்றார் என்றால்தானே, ஒரு துன்பியல் நாடகம் போல் அமைந்த மேதையின் வாழ்வின் சிறந்த அங்கமாக அது அமைய முடியும்! ராமானுஜனின் தோல்வி என்ற தொன்மத்தின் ஊற்றுக்கண் இதுதான். வெள்ளை காலனியாதிக்கம் இந்தியாவின் அறிவாற்றல் மரபைக் குலைத்தது என்ற தேசியக் கருத்தியலும் இந்தத் தொன்மத்துக்கு உரம்சேர்த்தது.
இருக்கட்டும். உண்மையில் ராமானுஜன் கணக்கில் தேறினாரா இல்லையா? அவர் பெற்ற மதிப்பெண்தான் என்ன? இதற்கான விடை மிகத் தற்செயலாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. அதனை ஆங்கிலத்தில் எழுதி ‘எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி', 13 பிப்ரவரி 1988 இதழில் வெளியிட்டேன். பெரிதும் கவனிக்கப்படாமல்போன அந்தக் கட்டுரையின் சாரம் இனி…
‘நியு இந்தியா'வின் கேலி
1917-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ராமானுஜனுக்கு மதிப்புறு பி.ஏ. பட்டம் வழங்கியது. அப்போது சுயாட்சிப் போராட்டத்தில் முனைப்பாக இருந்த அன்னி பெசன்ட்டின் ‘நியு இந்தியா' (25 ஏப்ரல் 1917) நாளேடு, ஆங்கிலேய அரசைக் கேலிசெய்து பின்வருமாறு எழுதியது.
‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எஸ். ராமானுஜ னுக்கு பி.ஏ. பட்டம் வழங்கியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் எஃப்.ஏ-யில் அவர் தேறியிரா விட்டால்தான் என்ன? அது ராமானுஜனின் குற்றமல்லவே; அந்தப் பழி அவரைச் சேராது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தங்களது எஃப்.ஏ-வுக்கு அவர் தகுதியுள்ளவர் என்று நினைக்கவில்லை!
இந்தக் கட்டுரை அரசின் கவனத்துக்கு வந்தது. உடனே, பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் பறந்தது. அன்றைய பதிவாளர் பிரான்ஸிஸ் டியூபெரி பதிலளித்தார்.
‘எஸ். ராமானுஜன் 1903-ல் மெட்ரிகுலேஷனில் தேறி, நான்காண்டுகளுக்குப் பிறகு, 1907-ல் எம்.ஏ. தேர்வைத் தனித் தேர்வராக எழுதித் தோல்வியுற்றார். அவருடைய பதிவேடு வருமாறு:
பிறந்த நாள்: 1888 (ஜூன்)
தந்தை பெயர்: சீனிவாச அய்யங்கார், மிராசுதாரர்
மெட்ரிகுலேசன்: 1903, கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளி
1907 ஃபர்ஸ்ட் எக்ஸாமினேஷன் இன் ஆர்ட்ஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் (பதிவு எண்:1198):
பாடம் | அதிகபட்ச மதிப்பெண் | தேர்வு பெற குறைந்தபட்ச மதிப்பெண் | பெற்ற மதிப்பெண் |
ஆங்கிலம் | 200 | 70 | 38 |
சமஸ்கிருதம் | 100 | 35 | 34 |
கணக்கு | 150 | 45 | 85 |
உடலியல் | - | - | - |
வரலாறு | - | - | - |
பெரும்பாலும் உடலியல், வரலாறு ஆகிய பாடங்களை அவர் எழுதியிருக்க மாட்டார் எனலாம்.'
ராமானுஜன் கணக்கில் தோற்கவில்லை. மனித வாழ்வுக்கு உண்மைகள் மட்டுமல்ல, தொன்மங்களும் வேண்டும். ராமானுஜன் கணக்கில் தோற்றார் என்ற தொன்மம் எத்தனை ஆவணங்களைக் கொண்டு அழித்தாலும் தொடர்ந்து தளிர்க்கும் என்று நம்பலாம்.
ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றுப் பேராசிரியர், ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: chalapathy@mids.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT