Published : 25 Oct 2017 10:14 AM
Last Updated : 25 Oct 2017 10:14 AM
ஆ
ரம்பக் காலம் தொட்டே திராவிட இயக்கம் சாமானிய மக்களிடம், ஏழை – எளியோரிடம் தன்னுடைய கொள்கைகளைக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. கட்சி அரசியல் என்பதைத் தாண்டி, தமிழ் மக்களை அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதில் திராவிட இயக்கம் ஆற்றிய பணியே அதன் நூற்றாண்டு சாதனைகளில் முக்கியமானது என்று சொல்லலாம். நூறாண்டுகளுக்கு முன்பே இடஒதுக்கீடு போன்ற ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டுசென்று அதை அரசியல் உரையாடலாக மாற்றி, மிக விரைவில் சாதிக்கவும் முடிந்தது என்றால், கருத்துருவாக்கத் தளத்தில் திராவிட இயக்கம் தொடர்ந்து செலுத்திவந்த கவனம்தான் காரணம்.
பெரியார் இந்தத் தளத்தை வெகுவாக விஸ்தரித்தார். பெரியாரியர்கள் சுவரெழுத்தைக்கூட ஒரு வலிய ஆயுதமாக்கினர். மயிலாடுதுறை ‘சுவரெழுத்துச் சுப்பையா’ ஒரு உதாரணம். கரித்துண்டு அல்லது கொஞ்சம் தார். இதுதான் இவர் ஆயுதம். ‘சக்தியுள்ள சாமியின் கோயிலுக்கு சாவியும், பூட்டும் ஏன்?’ இவ்வளவுதான். சுவரில் இப்படி எழுதப்படும் ஒரு வரி அவ்வளவு வலிமையாக மக்களிடம் போய்ச் சேர்ந்தது.
தமிழகத்தில் ஒரு அரசியல் இயக்கமாக திமுக உருவெடுத்ததும் இந்தப் பணி மேலும் உத்வேகம் பெற்றது. பொதுக்கூட்டங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, சினிமா என்று வாய்ப்புள்ள வடிவங்களில் எல்லாம் கொள்கைகளைக் கொண்டுசென்றாலும், வாசிப்பது ஒரு முக்கியமான விஷயம் என்று திரும்பத் திரும்பப் பொதுவெளியில் வலியுறுத்தப்பட்டது. படித்தவர்களிடமே வாசிப்புப் பழக்கம் குறைவாகவுள்ள சமூகம் இது. மேலும், அந்நாட்களில் படிக்காதவர்கள் அல்லது பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள் அதிகம். எப்படி வாசிப்பை அவர்களிடம் கொண்டுசெல்வது?
கிராமங்கள்தோறும், நகரின் முக்கியமான சந்திப்புகள்தோறும் திறந்தவெளி வாசக சாலைகள், படிப்பகங்கள் திறக்கப்பட்டன. தேநீர்க் கடைகளும், முடிதிருத்தும் நிலையங்களும்கூடப் படிப்பகங்கள் ஆயின. மரத்தடியும்கூட திறந்தவெளி வாசகச் சாலைகள் ஆயின. படித்தவர்கள் சத்தமாக வாசிக்க, ஏனையோர் கூடி நின்று கேட்டார்கள். விவாதித்தார்கள். ஒருபுறம் பத்திரிகைகளில், அரசியலமைப்புச் சட்ட மாற்றம் உள்ளிட்ட ஆழமான விஷயங்களைப் பற்றி நீளமான கட்டுரைகளை வெளியிட்டுவந்தாலும், மறுபக்கம் சாமானிய மக்களிடம் தம் கொள்கைகளைக் கொண்டுசேர்க்கப் பல்வேறு உத்திகளைக் கையாண்டது திமுக. சித்திர விளக்கக் கதைகள் அதில் முக்கியமான வடிவம். நாட்டிலேயே முதன்முதலில் தேர்தல் அறிக்கையை சித்திர விளக்கக் கதைத் தொகுப்பாக வெளியிட்ட பெருமை திமுகவுக்கு உண்டு. ‘முரசொலி’ அதைச் செய்தது. எளியோருக்குத் தன் கொள்கைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில், திமுக வெளியிட்ட ‘எது கொள்கையில்லாக் கட்சி?’ சித்திர விளக்கக் கதைத் தொகுப்பு மிகப் பிரபலமான ஒன்று.
திராவிட இயக்கம் சமூக நீதி சார்ந்து கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கியது எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவுக்கு முக்கியமானது தமிழ்ச் சமூகத்தில் சமூக நீதிக்கான அரசியல் உரையாடல்களை உருவாக்கியது. ஏனென்றால், கதையாடல்கள், உரையாடல்களின் வழியாகவே ஒரு சமூகம் தன் சிந்தனையை வளர்த்தெடுத்துக்கொள்கிறது. தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்கிறது!
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT