Published : 25 Oct 2017 10:16 AM
Last Updated : 25 Oct 2017 10:16 AM
தி
ராவிட இயக்க ஆய்வாளரும் நீதிக் கட்சி, திமுகவின் வரலாற்றாசிரியருமான க.திருநாவுக்கரசு, திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்த்தெடுத்த வாசிப்புக் கலாச்சாரத்தை முழுதாக அறிந்தவர். அதன் பெருமைகளை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுபவர். வாசிப்பு இயக்கத்தின் வரலாற்றை இங்கே நினைவுகூர்கிறார்.
திராவிட இயக்கத்தின் தொடக்கக் கால இதழ்களின் வரலாற்றைச் சொல்லலாமா?
திராவிட இயக்கம் என்று சொன்னால், அதை நான் நான்கு பிரிவுகளாகப் பார்க்கிறேன். முதலாவது 1916-ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம். அது நடத்திய ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் பெயரால், அதை நீதிக் கட்சி என்று சொல்கிறோம். இரண்டாவது, 1925-ல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம். மூன்றாவதாக, 1944-ல் நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பெயர் மாற்றமடைந்த திராவிடர் கழகம். நான்காவது, அண்ணாவுக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக தோன்றிய திமுக. இந்த நான்கு இயக்கங்களுக்குமே பத்திரிகைகள் ஒரு பெரும் ஆயுதம். பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே பிராமணர்கள் கைகளில் இருக்கின்றன. பிராமணியத்துக்கு எதிரான திராவிட இயக்கத்தின் குரல் அழுத்தப்படுவது என்பது தொடக்கம் முதலாகவே நடக்கிறது. இதுதான் திராவிட இயக்கம் பத்திரிகைகளில் செலுத்தும் கவனத்துக்கான மையம்.
நீதிக் கட்சி ‘ஜஸ்டிஸ்’ என்கிற ஆங்கில ஏட்டையும் ‘திராவிடன்’ என்கிற தமிழ் ஏட்டையும் ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற தெலுங்கு ஏட்டையும் நடத்தியது. இவையெல்லாம் படித்தவர்களுக்கான நாளிதழ்களாகவே இருந்தன. பெரியாரால் 1925 மே 2 அன்று தொடங்கப்பட்ட ‘குடிஅரசு’ வந்ததும்தான் சாமானிய மொழி வருகிறது. நான் ‘குடிஅரசு’ தொடங்கப்பட்ட நாளையே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட நாளாகக் கூறிவருகிறேன். முதலில் ‘பிரார்த்திக்கிறேன், இறைவனை இறைஞ்சுகிறேன்’ என்றெல்லாம் பணிவாகவும் இறை நம்பிக்கை உடையவராகவும்தான் பெரியாரின் எழுத்துகள் ஆரம்பிக்கின்றன. படிப்படியாகவே அது மாறுகிறது. பாரதிதாசன், ஜீவானந்தம், குத்தூசி குருசாமி என்று ‘குடிஅரசு’ ஒரு புது எழுத்தாள மரபை உருவாக்குகிறது. 1934 வாக்கில் ‘குடிஅரசு’ தடைசெய்யப்பட்டபோது ‘புரட்சி’ என்கிற ஏடும், ‘ரிவோல்ட்’ என்கிற ஆங்கில ஏடும் தொடங்கப்பட்டன. கூடவே, நான்கு மாதக் காலம் வரை ‘பகுத்தறிவு’ எனும் ஏடும் வந்தது. இவற்றையெல்லாம் பார்த்து, ‘முன்னேற்றம்’, ‘சமதர்மம்’, ‘புதுவை முரசு’, ‘நகரதூதன்’ என்றெல்லாம் தொடங்கினார்கள். பலதும் நின்றுவிட்டன. பழைய பாரம்பரியத்தில் வருவது என்றால், நீதிக் கட்சிக்காகத் தொடங்கப்பட்டு, இன்று திராவிடர் கழகத்தால் கொண்டுவரப்படும் ‘விடுதலை’ ஒன்று. கலைஞரின் ‘முரசொலி’ மற்றொன்று!
ஒருகட்டத்தில் 1,250 ஏடுகள் வந்தன என்று எழுதியிருக்கிறார் அ.மா.சாமி. அவையெல்லாம் என்னவாயிற்று?
உண்மைதான். பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசையில் பதிவுசெய்து பாதியிலேயே விட்டுவிடுபவர்களும் உண்டு. பெயர் பதிவோடு நிறுத்திவிடுபவர்களும் உண்டு. என் அனுபவத்தில் 400 ஏடுகளைப் பார்த்திருக்கிறேன். ஏன் நிறுத்திவிட்டார்கள் என்றால், அடிப்படையில் இந்த இயக்கம் சாமானியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இயக்கம். சாதி, மதம், பல சமயங்களில் அரசாங்கம் இப்படி எல்லாவற்றையும் எதிர்த்து பத்திரிகை நடத்துவது சாமானிய விஷயமா? ஆனால் ஒன்று, திராவிட இயக்க ஏடுகள் வெறுமனே அவற்றின் கருத்துகளை மட்டும் அல்ல; பல ஒத்த சிந்தனையாளர்களை, கருத்துகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தன. இங்கர்சால், பெர்னாட்ஷா முதல் புலே, அம்பேத்கர் வரை பட்டியலிடலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை முதலில் தமிழில் வெளியானது ‘குடிஅரசு’ பத்திரிகையில்தானே!
திமுக சார்ந்தே எவ்வளவோ ஏடுகள் வந்தபோது, ‘முரசொலி’ மட்டும் எப்படி நீடித்தது?
1942-ல் அது தொடங்கப்பட்டபோது துண்டறிக்கை ஏடாகவே இருந்தது. 1948-ல் வார இதழாகி நின்றது. அப்புறம் 1954-ல்தான் தொடங்கி மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. 1960-ல் நாளேடானது. திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக இருந்தது ‘நம் நாடு’. 1953-ல் தொடங்கப்பட்ட அது 1970-ல் நின்றுபோனது. அண்ணா தொடங்கிய ‘திராவிட நாடு’ ஏட்டை நாளிதழாக மாற்ற வேண்டும் என்று நினைத்து தனியார் நிறுவனமாக்க முயன்று, பங்குகள் எல்லாம் சேர்த்துகூட அந்த முயற்சியில் தோற்றார். இப்படி எவ்வளவோ பட்டியலிடலாம். ‘முரசொலி’ மட்டும் எப்படி நீடித்தது என்றால், மூன்று விஷயங்கள், 1. கலைஞர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை இதில் போட்டுக்கொண்டே இருந்தார். 2. அவருடைய அபாரமான எழுத்துத் திறனும் நிர்வாகத் திறனும். 3. தன்னுடைய எழுத்துகளோடு மட்டும் அல்லாமல், அண்ணா, சிற்றரசு, மதியழகன் என்று ஏனைய தலைவர்களின் எழுத்துகளுக்கும் செய்திகளுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு, ‘கழக கெஸட்’ என்ற பெயரை உருவாக்கியது. கலைஞருக்கும் சங்கடம் ஏற்படாமல் இல்லை. அண்ணா காலத்திலேயே நிறுத்திவிடுவதாகச் சொன்னார். ‘முரசொலி’யை ஒருநாளும் நிறுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புகூட நிறுத்திவிடுகிறேன் என்றார் கலைஞர். அப்போதுதான் திமுக தலைவர்கள் எல்லோரும் நிதி திரட்டி, அதற்கென ஒரு அறக்கட்டளையை உருவாக்கி தொடர்ந்து வர வழிவகுத்தார்கள்.
திராவிட இயக்க ஏடுகளின் - இதழ்களின் பெரிய பங்களிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
அவை நடத்திய வாசிப்பு இயக்கம். திராவிடர் இயக்கம் இது ஒன்றுக்காகவே அவ்வளவு பெருமைப்படலாம். ஏழை எளிய மக்கள், படிப்பறிவற்றவர்களிடம் அரசியலைக் கொண்டுசெல்ல, சமூக நீதித் தத்துவத்தைக் கொண்டுசெல்ல அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் மன்றங்கள், படிப்பகங்கள் திறக்கப்பட்டன. ஒரு சின்ன கொட்டகை. திராவிட இயக்க ஏடுகள் வரும். பெரியார், அண்ணா புத்தகங்கள் இருக்கும். அவ்வளவுதான். அதுவும் இல்லாத ஊர்களில் தேநீர்க் கடைகள், முடிதிருத்தும் கடைகள் படிப்பகங்களாகச் செயல்பட்டன. படிப்பகத்தில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு தோழரும் ஒவ்வொரு இதழை வாங்கிக் கொடுப்பார்கள். பலர் கூலித் தொழிலாளியாக இருப்பார்கள், பெரிய படிப்பும்கூட இருக்காது. அப்படிப்பட்டவர்கள்தான் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் சிலரைச் சுழற்சி முறையில் அன்றாடம் வாசித்துக் காட்ட அனுப்புவார்கள். பெரும்பாலும் இந்தப் பணியை இளம் ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் வாசிக்க பத்துப் பேர் சுற்றி நின்றுகொண்டு கேட்பார்கள். பூங்காக்களில், தெருமுக்குகளில், மரத்தடியில் நின்று படிப்பார்கள் – விவாதிப்பார்கள். இன்று அந்தத் தீவிர வாசிப்பு, ஆழ்ந்த வாசிப்பு, ஆழ்ந்த எழுத்து மரபு சரிந்துவிட்டது. அதைத் தூக்கி நிறுத்த வேண்டும்.
திராவிட இயக்கம், திமுக எதிர்கொள்ளும் பெரும் சவால் என்று எதைச் சொல்வீர்கள்?
சித்தாந்தரீதியிலான சரிவு. இன்றைக்கு அதிமுக இவ்வளவு சிதைந்து சின்னாபின்னமாகியிருப்பதற்கு சிந்தாந்த அடிப்படையற்றுப் போனதே காரணம். திமுக நிற்கிறது என்றால், அதற்கும் சித்தாந்த பலமே காரணம். ஆனால், முன்பிருந்த சித்தாந்த பலம் இன்றில்லை. காலத்துக்கேற்ப வியூகம் மாற வேண்டும். சித்தாந்த பலத்தை வளர்த்தெடுக்க வாசிப்பு மரபை வளர்த்தெடுக்க வேண்டும்.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT