Published : 08 May 2023 06:15 AM
Last Updated : 08 May 2023 06:15 AM
“எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவுக்கு எங்களுடய பணிகள் இருக்கும்” என்று 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், தன்னுடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் சமாதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மக்களிடம் அப்படியான ஒரு மனநிலையை திமுக ஆட்சி ஏற்படுத்தியிருக்கிறதா எனும் கேள்விக்கு விடை தேட வேண்டிய தருணம் இது.
‘தேர்தலின் கதாநாயகன்’: வெறும் சம்பிரதாயமாகப் பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள், தமிழ்நாட்டில் 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கின. அப்போது ‘தேர்தலின் கதாநாயகன்’ எனும் அளவுக்குத் திமுகவின் தேர்தல் அறிக்கை பேசுபொருளானது.
அதன்பிறகான காலங்களிலும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகளுக்குப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக சந்தித்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை உற்றுக் கவனிக்கப்பட்டது. 505 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை அது.
அவற்றில், ஓராண்டிலேயே 80% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், பெயரளவுக்குச் சில வாக்குறுதிகளை மட்டும்தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது என எதிர்க்கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் விமர்சிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் இப்படியான குற்றச்சாட்டுகள் இயல்புதான். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த ஆட்சிக்கும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் உண்டு என்பதையும் மறக்கக் கூடாது. ஆனால், எத்தனை வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், நிறைவேற்றியிருந்தாலும் ‘கதாநாயகன்’ போலத் தனித்துத் தெரியும் வாக்குறுதிகளில் எப்போதும் மக்களின் கவனம் குவிந்திருக்கும்.
சாத்தியமற்ற வாக்குறுதிகள்: திமுகவின் வாக்குறுதி களில் முக்கியமான 104 அறிவிப்புகளில் உள்ளூர்ப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம், பால் விலை குறைப்பு, கரோனா நிவாரணநிதியாக ரூ.4,000, பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு40% இடஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்படப் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களாக மாறியிருப்பதைத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அதேவேளையில், நடைமுறைச் சாத்தியம் இல்லாதவாக்குறுதிகள்தான் திமுக அரசை இப்போது துரத்திக்கொண்டே இருக்கின்றன. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று அதைச் சுருக்குவது ஓர் உதாரணம். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி சார்ந்தும் இதே நிலைதான்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி, சட்டச் சிக்கல் நிறைந்த நீட் தேர்வு ரத்து விவகாரம், சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல், கரும்பு டன்னுக்கு ரூ.4,000 ஆதார விலை, டீசல் விலை ரூ.3 குறைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைவேற்றக் கடினமானவையாக இருந்தபோதும், அவற்றை வாக்குறுதிகளாக அறிவித்திருந்தது திமுக.இப்போது அதற்கான விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
பல்டி அடிக்கிறதா அரசு? திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசும்; ஆளுங்கட்சியாக இன்னொன்றைச் செய்யும் என்பது எதிர்க்கட்சிகள் வைக்கும் மற்றொரு முக்கியக் குற்றச்சாட்டு. அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு அதைப் பல மடங்கு உயர்த்தியது.
கரோனா பரவலின்போது ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு சீரடையும்வரை, சொத்து வரி உயர்வு இருக்காது என்று தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டுவராத நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டது.
அதேபோல் மின்சாரப் பயன்பாட்டை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கிடும் நடைமுறைக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் கணக்கிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லிவந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசாததோடு, மின் கட்டணங்களைக் கணிசமாக உயர்த்தியிருப்பதும் நடுத்தர மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை-சேலம் விரைவுச் சாலை திட்டத்தை எதிர்த்துப் போராடிய வேளாண் குடிமக்களுக்குத் துணையாக நின்ற திமுக, இன்று அத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டுகிறது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் போன்றவற்றைத் திமுக அரசு ஆட்சிக்குவந்த பிறகு எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலைச் சட்டத்தைப் பல மாநில பாஜக அரசுகளே இன்னும் நடைமுறைப்படுத்தாத நிலையில், தமிழ்நாட்டில் அச்சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, கடும் எதிர்ப்பு காரணமாகத் திரும்பப் பெற்றது, அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த, தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கைவிடுத்து முன்பு நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆட்சிக்குவந்த பின்னர் அவர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளுவது; முந்தைய அதிமுக அரசு மீது ஊழல் புகார்களை அள்ளி வீசிவிட்டு, இன்றைக்கு அது தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது; திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி வழங்கிவிட்டு, எதிர்ப்புகளுக்குப் பின்னர் திரும்பப் பெற்றது என முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்டதில் திமுக அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகள்: ஒரு முதலமைச்சராகத் தன்னுடைய கடமையையும் பணிகளையும் மு.க.ஸ்டாலின் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்பது அவருடைய செயல்பாடுகளில் தெரிகிறது. ஆனால், அவரது மேம்பட்ட நோக்கங்கள் நிறைவேற வேண்டுமென்றால், அமைச்சர்கள் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம்.
புதிதாக அமைச்சர்கள் ஆகியிருக்கும் பலர் சுதந்திரமாகச் செயல்பட, முதலமைச்சர் அனுமதித்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அது ஒட்டுமொத்த ஆட்சிக்கும் வலுசேர்க்கும். அப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலர் இந்த அரசில் இருக்கிறார்கள்.
ஆனால், அதையும் தாண்டி மூத்த அமைச்சர்கள் சிலர் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆட்படுகிறார்கள். மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களால் பயனடைவோர் குறித்து கொச்சையான வகையில் அமைச்சர்கள் சிலர் கருத்துகளை வெளியிட்டனர்.
வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் அரசுக்குப் பெற்றுத்தர வேண்டிய நற்பெயரையும், இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் தடுத்துவிடுகின்றன. அமைச்சர்களின் இத்தகைய பேச்சுக்களும் செயல்பாடுகளும் ஒட்டுமொத்தமாக அரசுக்குத் தலைமையேற்கும் முதலமைச்சருக்குத்தான் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
கடந்த அக்டோபரில் திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பேச்சு அதை உறுதிப்படுத்தியது. அமைச்சர்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காகப் பேசப்படும்போதுதான், அது அரசுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும். தவறும்பட்சத்தில் ஆட்சியும் கட்சியும் எதிர்மறையாகவே அணுகப்படும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் திமுக அரசு மீது மக்களிடம் நிலவிய அபிமானம், அரசின் சிலசெயல்பாடுகளால் ஒருவித அதிருப்தியாக மாறியிருக்கிறதோ என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது. எனவே, திமுக அரசு மேலும் அதிருப்திக்கு இடம் கொடுக்காமல் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம், இதுவரை பெற்ற நன்மதிப்பை முழுமையாகத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in
To Read in English: Two years of DMK rule: Promise, performance and pitfalls
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT