Published : 10 Sep 2017 01:28 PM
Last Updated : 10 Sep 2017 01:28 PM
சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என்று கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பதில் புது உச்சத்தை எட்டியிருக்கும் நம் காலத்துக்கு காந்தி உண்மையில் வழிகாட்டக் கூடும். சுதந்திர இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலை அவர் எதிர்கொள்வதற்கு சுதந்திர இந்தியாவில் அவர் அதிக நாட்கள் வாழவில்லை என்றாலும் பிரிட்டிஷ் இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார் என்பது அவருக்குள்ள முதன்மையான தகுதி.
ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது!
1909-ல், காந்தியின் தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தில் குஜராத்தியில் அவர் எழுதிய புத்தகம் ‘இந்திய சுயராஜ்ஜியம்’. காந்தியின் அன்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தின் பிரதிகளைக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு வரவழைக்க முயன்றார். எனினும், இந்தியாவில் அந்தப் புத்தகத்தின் பிரதிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்தப் புத்தகம் குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரிகளால் படித்துப்பார்க்கப்பட்டது. தேசத்துரோகக் கருத்துகளை உள்ளடக்கியிருப்பதாகக் கருதி அந்த நூல் தடைசெய்யப்பட்டது. இது குறித்து காந்தி இந்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பிய கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவற்றைச் செயல்படுத்தவும், அதனால் யாருக்கும் உடல்ரீதியிலான துன்பத்தை அவர் ஏற்படுத்தாதவரை, அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து” என்று அந்தக் கடிதத்தில் காந்தி எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி எழுதியது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கிறது.
தனது நம்பிக்கையே அறுதியானதல்ல…
ஒருவர் தான் நம்பும் கொள்கை, கருத்து போன்றவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவையே அறுதியானவை என்றும் நம்புவதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது என்று காந்தி கருதினார். தான் கொண்ட கொள்கை, கருத்து போன்றவற்றின் மேல் முழுமையான புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள்தான் அவற்றுக்கு மாறுபாடான கருத்துகளைக் கண்டால் அஞ்சி, மாற்றுக் கருத்தை ஒடுக்க முயல்கிறார்கள். ஒருவருடைய கொள்கை உறுதியானது, உண்மையானது, அறம்சார்ந்தது என்றால் அவர் மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையேயில்லை. உண்மையில் மாற்றுக் கருத்துகளுடன் உறவாடுவதே ஒரு கருத்தையோ கொள்கையையோ மேலும் செறிவாக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். எந்த வகைக் கருத்தினரும் தாங்கள் சொல்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாதென்று காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்திவந்தார்.
“நாம் எல்லோருமே பிழைகள் செய்யக் கூடியவர்களாகையால் நம் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டிவருகிறது. இதைப் போன்ற பெரிய நாட்டில் உண்மையாகவும் நாணயமாகவும் கருத்துக்கள் கொண்டுள்ள எல்லோருக்கும் இடம் இருக்க வேண்டும். ஆகவே, குறைந்தபட்சம் நம் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் நாம் செய்ய வேண்டுவது எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்வதும் அதை ஏற்க முடியாவிட்டாலும், நம் கருத்தை நாம் மதிப்பதுமாகும். செம்மையான பொது வாழ்வுக்கு இன்றியமையாத சாதனங்களில் இது ஒன்றாகையால் சுயராஜ்ஜியத்துக்கு நமக்குள்ள தகுதியையும் இதுவே காட்டும். நாம் தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால் நம்மால் நம்மிடையே எழும் தகராறுகளை சமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாதாகையால் எப்போதும் மூன்றாம் மனிதன் தீர்ப்புக்கு , அதாவது அந்நியர் ஆதிக்கத்திற்கு அடங்கியே இருக்க வேண்டியிருக்கும்” (யங் இந்தியா,17-4-1924) என்று காந்தி எழுதினார்.
உண்மையான ஜனநாயகம்
நம் எதிர்த் தரப்பு சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ள சித்தமாக இல்லாவிட்டால் ஜனநாயகம் வளர்ந்து ‘பருவம்’ எய்துவதே சாத்தியமல்ல என்று காந்தி கருதினார். உண்மையில், எதிர்த் தரப்புக்குச் செவிமடுக்கும்போதுதான் நம் தரப்புக்கு நியாயம் பிறக்கிறது என்கிறார் காந்தி. “நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமல்போகும். இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும் செய்யவும் துணிய வேண்டும். ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக்கொள்ளவும், முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்” (ஹரிஜன், 31-5-1942) என்றும் எழுதுகிறார். எவ்வளவு ஜனநாயகம் மிக்கவராக இருந்திருக்கிறார் காந்தி! கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி காந்தி முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியது இன்னும் புரட்சிகரமாகவே இருக்கிறது.
புண்படுத்துவதற்கான உரிமை
மக்களின் மனது புண்படுகிறது; மதநம்பிக்கை புண்படுகிறது என்றெல்லாம் கூறி இன்று படைப்புகளும் கருத்துகளும் தடைசெய்யப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன. உண்மையில், உலக வரலாற்றில் எல்லாப் புரட்சிகளும் புண்படுத்துவதில்தான் ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே மக்கள் திரள் கொண்டிருக்கும் பழமைவாதக் கருத்துகளைப் புண்படுத்தினால்தானே புதுமையும் புரட்சியும் பிறக்கும். இந்து மதத்தின் கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர், கூடவே இடதுசாரிகள், பிற தலித்திய சிந்தனையாளர்கள் போன்றோர் இந்துக்களின் மனதைக் கடுமையாகப் புண்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, தங்களைத் தீவிர இந்துக்களாக நம்பிய விவேகானந்தரும் காந்தியும்கூட இந்து மதத் தீவிரப் பற்றாளர்களின் மனங்களைப் புண்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தவில்லை என்றால் இந்துமதச் சீர்திருத்தங்கள் எப்படி நிகழ்ந்திருக்கும்? இன்று நாம் முன்பைவிட சற்றேனும் மேலான ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்றால் மேற்குறிப்பிட்டவர்களைப் போன்றோர் நம்மைப் புண்படுத்தியதும் அடிப்படைக் காரணமல்லவா? ஆகவே, புரட்சிக்கு (மனதை) புண்படுத்துதல் அடிப்படை ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
புண்படுத்துதலைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே, 1922-ல், காந்தி எழுதியதைப் பார்க்கும்போது அவர் காலத்தில் உள்ளவர்களிடமிருந்து மட்டுமல்ல, நம் காலத்தில் உள்ள பலரிடமிருந்தும் பல மைல்தூரம் அவர் முன்னே இருந்தது நமக்குப் புரிய வரும். “பேச்சு சுதந்திரம் என்பதற்கு ஒருவர் பேச்சினால் மனம் புண்ணானாலும் அதைத் தடுக்காது விடுவது என்றுதான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவதோடு நில்லாமல், விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போதுதான் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்… மக்கள் கூட்டங்களில் கூடி புரட்சிகரமான திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அனுமதிக்கப்படும்போதுதான் கூட்டம் கூடும் சுதந்திரம் உண்மையில் மதிக்கப்பட்டதாகும்” (யங் இந்தியா,12-1-1922).
காந்திக்கு உண்மையான அஞ்சலி
பூரண சுயராஜ்ஜியத்துக்குக் கருத்துச் சுதந்திரம் மிக இன்றியமையாதது என்று காந்தி உறுதியாக நம்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு குறிப்பிடத்தக்க இடமளிக்கப்பட்டதில் காந்தியின் பங்களிப்பும் இருக்கிறது என்றாலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான காலனிய காலத்துச் சட்டங்கள் பல நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பிடித்துவிட்டது, இன்னும் அப்படியே இருப்பது நம் ஜனநாயகத்துக்கு அழகல்ல. பிரிவுகள் 153, 153A, 295, 295A, 298, 499, 500, 505, 124ஏ போன்றவை அப்படிப்பட்ட சட்டப்பிரிவுகள். இவை திருத்தப்படுவதும் அல்லது நீக்கப்படுவதும்தான் காந்திக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தரப்பு என்று கிட்டத்தட்ட எதுவுமே இல்லாதது பேராபத்து! சமீப காலத்தில் தமிழ்நாட்டிலும் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளுக்காக தடை, முட்டுக்கட்டை, வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்திய அளவில் இன்னும் மோசம். மறுபடியும் நெருக்கடிநிலை காலத்துக்கோ ஆங்கிலேயர் காலத்துக்கோ இந்தியா போய்விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.
காந்தி விரும்பியது பரிபூரண கருத்துச் சுதந்திரம். “நீ கூறுவதை முற்றிலும் நான் மறுக்கிறேன். ஆனால், இதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காப்பதற்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்ற வால்டேருடைய புகழ்பெற்ற வாசகங்களுக்கு இணையான கருத்துக்கள்தான் காந்தியுடையவையும்.
இடதுசாரிகளின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும்போது அவர்களுடன் சற்றும் உடன்படாத வலதுசாரிகளும், வலதுசாரிகளின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும்போது அந்தத் தடைக்கு எதிராக இடதுசாரிகளும் போராடும் காலம் வருமென்றால் அதுதான் காந்தி கனவுகண்ட இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தின் பொற்காலமாக இருக்கும். அது நிச்சயம் தற்காலம் இல்லை!
-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT