Published : 06 May 2023 08:16 PM
Last Updated : 06 May 2023 08:16 PM

வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 7 - ‘கட்டாயப் பதிவு’ அவசியத்தை சொல்லும் அதிர்ச்சி சம்பவங்கள்!

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழிற்சாலைகள் சட்டத்தில் 65ஏ சட்டத் திருத்தத்தை, கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு நிறைவேற்றியது. தொழிலாளர்களின் வேலை நேரம், மிகை நேர வேலை, அதற்கான ஊதியம், மிகை நேர வேலையை ஈடுகட்டுவதற்கான விடுமுறை, பணியின்போது விட வேண்டிய ஓய்வு நேரம் ஆகிய வகை இனங்களில் இதுவரை தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை முழுமையாக இழப்பதற்கு இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இந்த சட்டத் திருத்தத்தால் தொழிலாளர்களுக்கு நேரக்கூடும் விளைவுகளை பட்டியலிட்டு எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டன. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தரப்பு கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அந்த சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்றது. இதேபோல், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்களது நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.

இதுதொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகரும், கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் கூடுதல் செயலாளருமான ஆர்.கீதா கூறுகையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையை கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 2006-ம் ஆண்டு ஓஎம்ஆர் பகுதியில் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்து ஏரியில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பத்திரிகைகளில் வெளிவந்தது.

அதே ஆண்டு ஏகாட்டூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் பெண் குழந்தையும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இப்பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைக்காக RDT எனும் அமைப்பு பள்ளிக்கூடம் நடத்தி வந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தச் சம்பவம் குறித்து எங்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் சிகிச்சைக்காக முதலில் ஒரு தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தையின் நிலையைப் பார்த்த மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை.

அதன்பிறகு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காவல் துறையினர், தவறுதலாக பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினர்களை எல்லாம் கைது செய்தனர். எமது கூட்டமைப்பும், துளிர் எனும் நிறுவனமும் சேர்ந்து காவல் துறை ஐஜி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி, அந்த கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.

தொழிலாளர் நலன், ஊதியம் சார்ந்த விஷயங்கள் என்றால் தொழிலாளர் நலத்துறையை அணுகுவது சரியாக இருந்திருக்கும். ஆனால், இது குழந்தைகள் சார்ந்த குற்றவியல் சம்பவமாக இருந்ததால், நாங்கள் குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினோம். அந்த சமயத்தில், குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையத்துக்கு டாக்டர் சாந்தா சின்ஹா பொறுப்பு வகித்தார். அவர் உடனடியாக, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்பின்னர், தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை, ஆய்வு நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். எங்களது தரப்பிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஓர் ஆய்வை நடத்தினோம்.

இந்த ஆய்வுக்குப் பின்னர், யுனிசெஃப் முன்னிலையில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர், செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அனைத்து புலம்பெயரும் தொழிலாளர்களையும் முதலில் கட்டாயப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்குப் பின்னர், அத்தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பராமரிப்பு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அந்த செயல்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

ஆர்.கீதா

பெரும்பாலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை தருபவர்கள், தொழிலாளர்களை லேபர் கேம்ப்களிலேயே தங்குமாறு கூறுகின்றனர். அந்த இடங்களில், எந்தவிதமான அடிப்படை வசதிகளோ, கதவுகளோ, பொருட்களை வைப்பதற்கான வசதியோ இல்லாமல் தகர கொட்டகையாகவே உள்ளன. இப்படியான சூழலில், தங்கியிருந்ததால் தான் ஏகாட்டூர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கதவுடன் கூடிய குடியிருப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதவிர தொழிலாளர் நலச் சட்டங்கள், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்டவைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள்தான் அந்த செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவைத்தவிர, அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சம், துறை அளவிலான குழு (Inter Departmental Committee), மாநில அளவிலான குழு (Inter State Committee) இருக்க வேண்டும். இந்த செயல்திட்டம் வெளியிடப்பட்டது, இதே திமுக ஆட்சியில்தான். அந்தசமயத்தில், தா.மோ. அன்பரசன்தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்த செயல்திட்டத்தை அவர்தான் சட்டமன்றத்தில் படித்தார்.

ஆனால், 2012ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், இந்த செயல்திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதன்பிறகுதான், 2014ல் மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடக்கிறது. இந்த மவுலிவாக்கம் விபத்துக்குப் பிறகு, நாங்கள் மாநில அளவில் ஒரு போராட்டத்தை நடத்தினோம். கடந்த திமுக ஆட்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் தொடர்பாக உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினோம்.

இதனைத்தொடர்ந்து அரசு சில ஆணைகளைப் பிறப்பித்தது. அதன்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சில தங்குமிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் அவர்களுக்கு இலவச மருத்துவ வசதி தரப்படவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இன்ஸ்யூரன்ஸ் அமல்படுத்தும் ஒப்பந்ததாரரின் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவச மருத்துவ வசதி கிடைக்கிறது. புலம்பெயரும் தொழிலாளர்கள் லேபர் கேம்பிலேயே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கிறது.

புலம்பெயரும் தொழிலாளர்கள் பதிவு செய்தலைப் பொறுத்தவரை, நலவாரியங்களில் அவர்கள் பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால், முதலாளிகளின் ஒப்புதலோடு அந்த பதிவு நடைபெற வேண்டும் என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காரணம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படைக் குறைந்தபட்ச ஊதியம் என்று எதுவும் வழங்கப்படுவது இல்லை. அப்படியிருக்கும்போது, முதலாளிகள் எப்படி முன்வந்து தன்னிடம் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பதிவு செய்வார்கள்? செய்யமாட்டார்கள். இதுதான் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசாணையில் இருந்த மிக முக்கியமான சிக்கல்.

அதுபோலத்தான், அந்த குழந்தைகளுக்கான காப்பகங்கள் அமைக்க வேண்டும். எஸ்எஸ்ஏவை அமல்படுத்தி, அக்குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியில் கல்வி கொடுக்க வேண்டும் என்பவையெல்லாம் கொண்டு வரப்பட்டன. ஆனால், மாநில அளவிலான இன்டர் ஸ்டேட் கமிட்டி அமைக்கப்படவில்லை. இந்த குழு அமைத்தால், ஒடிஸா மாநில குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், ஒடிஸா அரசே அந்த குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளலாம். அந்த குழந்தைகளுக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்துவிடலாம். அக்குழந்தைகள் தங்களது தாய்மொழியான ஒரியாவிலேயே கற்பதால், இங்கிருந்து அங்கு சென்றபிறகு கூட அவர்களது கல்வியைத் தொடரலாம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பக் கூடியவர்கள்தான். இதன்மூலம் அவர்களுக்கு ஒருவகையான முன்னேற்றமும் வரும். அந்த குழந்தைகளும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறமாட்டார்கள். நாங்கள் இதில் இன்னொரு உண்மை அறியும் ஆய்வையும் (Fact Finding) மேற்கொண்டோம். ஒரு 3-4 குழந்தைகள் இறப்பு சம்பவங்கள் புலம்பெயரும் தொழிலாளர்கள் பணிசெய்யும் இடங்களிலேயே நிகழந்துள்ளது. அதாவது, இந்த சம்பவம் பள்ளத்தில் விழுந்தும், தண்ணீரில் விழுந்தும் என்பன உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பான ஆய்வறிக்கையையும் அரசிடம் கொடுத்தோம்.

இதுபோன்ற பணிகளை எல்லாம் செய்திருந்தாலும், தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்திருக்கிறது. எனவே பழைய செயல் திட்டத்தை அமல்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயப்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. அண்மையில், நாங்கள் நடத்திய உண்ணாவிரதத்தின்போதுகூட இந்த கோரிக்கைகளைத்தான் முன்வைத்தோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கென்று உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது? என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதேநேரத்தில், தற்போது கட்டுமான வாரியத்தின் சார்பில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பணியிடங்களுக்கேச் சென்று வாரியப் பதிவுகள் செய்யப்படுகிறது. இது வரவேற்கத்தக்க நல்ல முயற்சி. நாங்கள் கோருவது, அவர்களை பொதுவாக தொழிலாளர்களாக பதிவு செய்யுங்கள். அவ்வாறு பதிவு செய்து, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

இந்தப் பதிவு எதற்கு அவசியமாகிறது என்றால், மவுலிவாக்க கட்டிட விபத்து நடந்த சமயத்தில், கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்கப்பட்டதை உடனிருந்து மூன்று நாட்கள் பார்த்தோம். முதல் நாள் தான் இரண்டு மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு மெதுவாக தோண்டி உடல்கள் எடுக்கப்பட்டன. அடுத்த நாட்களில் இருந்து 10 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கட்டிட இடுபாடுகள் தோண்டப்பட்டன. இதனால் அங்கிருந்த உடல்கள் எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த கட்டிட இடுபாடுகளில் இருந்து முதல்நாள் மட்டும் 61 உடல்கள் எடுக்கப்பட்டன. காயமடைந்த 27 பேரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், விபத்தில் இறந்துபோனவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களால் அடையாளம் காணமுடியவில்லை. யாருடைய உடல் என்றே தெரியவில்லை? அங்கு வந்த பலர், தன்னுடைய கணவர் இறந்துவிட்டார், அவரது உடல் எங்கே? என்று கேட்டனர். உடல்கள் முழுமையாக கிடைக்காததே இந்த குளறுபடிக்கு காரணம். உண்மையில் இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

எனவேதான், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டாயப் பதிவு என்பது அவசியமாகும். எந்தவொரு மனிதனுக்கும் அவனுக்கான அங்கீகாரம் இருந்தால் மட்டுமே இறந்துபோனால்கூட அடையாளம் காணமுடியும். அதேபோல், 2011ல் உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறோம்" என்று அவர் கூறினார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக தமிழக அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்:

  • மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் 1979 ஐ தமிழகத்தில் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
  • கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்களின் விதிகள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1996, 2006ல் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் இறப்பு அல்லது கடுமையான காயம் விளைவிக்கும் விபத்துகள் குறித்து மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து, தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1923-ன் படி இழப்பீடு வழங்க வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய கண்ணியமான வீடுகள் வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் மற்றும் கல்வி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் சம ஊதியச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளாக அறிவித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உதவி மையங்கள் அனைத்துப் பகுதிகளிலும் மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட வேண்டும்.
  • வெளிமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி செய்துதர வேண்டும்.
  • தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் 1982ன் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தால் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • MGNREGA திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களது சொந்த மாநிலங்களில் குறைந்தது 300 நாட்கள் வேலையுடன் கூடிய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

/ வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் நிறைவுபெறுகிறது... /

தொடர்புக்கு - kumar.d@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 6 - முதலாளிகளின் சொத்துக் குவிப்புக்கு இவர்களும் காரணமாவது எப்படி?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x