Published : 19 Sep 2017 10:16 AM
Last Updated : 19 Sep 2017 10:16 AM
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக அறுவை சிகிச்சை செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். எப்போது அந்த அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அதிரடியாகத் தகுதிநீக்கம் செய்து அறுவை சிகிச்சைக்கு முந்தைய அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார் சபாநாயகர் தனபால்.
கட்சித் தாவல் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, தமிழக சட்டமன்ற வரலாற்றில் இப்படியொரு பெருநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவது இதுதான் முதல் முறை. அந்த வகையில், இந்தத் தகுதிநீக்கம் அதிமுகவின் அணிகளுக்குள், சட்டமன்றத்துக்குள், தமிழக அரசியல் களத்துக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பேருருவம் கொண்டுள்ளது!
சபாநாயகர் நோட்டீஸ்
உண்மையில், ஆளுநரைச் சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தபோதே பிரச்சினைகள் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. அதன் நீட்சியாக, கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்ட அந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை அணுகினார். அந்தப் பரிந்துரையை ஏற்று சம்பந்தப்பட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.
இந்த இடத்தில் எழுந்த முக்கியமான கேள்வி, எப்போது கொறடா உத்தரவு பிறப்பித்தார், அதனை எப்போது அந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீறிச் செயல்பட்டார்கள் என்பதுதான். இந்தக் கேள்விக்கான விளக்கம் தெளிவாக வந்திடாத நிலையில், சபாநாயகர் விடுத்த கெடு தேதி நெருங்கியது. அப்போது அந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார். பிறகு, இதர 18 பேர் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்துக்கு சபாநாயகர் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், குட்காவைச் சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்தது தொடர்பாக 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமைமீறல் பிரச்சினை தொடர்பாக திமுக வழக்கு தொடர்ந்தது. அதேபோல், தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்படக் கூடாது என்று மனு தாக்கல் செய்தனர்.
திமுக தொடர்ந்த வழக்கில் திடீரென தினகரன் தரப்பும் சேர்ந்துகொண்டது. உண்மையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை. ஆனால், அதன்பிறகு நடந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக, வழக்கில் தினகரன் தரப்பும் சேர்ந்துகொண்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். இதன்மூலம் திமுகவும் தினகரன் தரப்பும் பழனிசாமி அரசுக்கு எதிராகக் கைகோத்திருப்பது போன்ற தோற்றம் உருவானது.
ஒரு வாரக் கெடு
அதற்கேற்பவே, பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த தினகரன், திடீரென பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதற்கு ஒருவார காலக்கெடுவையும் அறிவித்தார். தினகரனின் திமுக உறவு, ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொன்னது இரண்டும் பழனிசாமி - ஓபிஎஸ் தரப்பை உரத்த சிந்தனையில் ஆழ்த்தியது. அப்போதே தகுதிநீக்கம் குறித்த பேச்சுகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன.
எந்த நொடியில் வேண்டுமானாலும் தகுதிநீக்கம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்திருக்கிறார் சபாநாயகர். அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான சொல்லாடல்கள் என்று கட்சித்தாவல், கொறடா உத்தரவு என்ற இரண்டையும் சொல்லலாம்.
நான்கு கேள்விகள்
கொறடாவின் உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை எனும் பட்சத்தில், அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் என்ன மாதிரியான உத்தரவைப் பிறப்பித்தார், அதை எந்தத் தருணத்தில் அந்த எம்.எல்.ஏ.க்கள் மீறினர் என்பது முதல் கேள்வி. அடுத்து, முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் ஆளுநருக்கு முன்னால் வைத்தார்களே தவிர, அதிமுக சட்டமன்றக் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை எனும்போது, அவர்கள் அனைவரும் கட்சி மாறிவிட்டார்கள் என்ற முடிவுக்கு சபாநாயகர் எப்படி வந்தார், அதையொட்டி தகுதிநீக்க நடவடிக்கையை எப்படி எடுத்தார் என்பது இரண்டாவது கேள்வி.
முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகரிடம் தரப்பட்ட புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தினகரன் தரப்பு எழுப்பும் கேள்வியையும் தற்போது 18 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதையும் நீதிமன்றம் எப்படிப் பார்க்கும், அது இந்தத் தகுதிநீக்க உத்தரவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மூன்றாவது கேள்வி.
அடுத்து, தகுதிநீக்கத்துக்கு எதிராக தினகரன் தரப்பு நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கும்பட்சத்தில், சபாநாய கரின் தீர்ப்பு என்னவாகும்? நீதிமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்குமான அதிகாரப் போட்டியாக மாறுமா? அல்லது தினகரன் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பைக் கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால், அது சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதாகப் பொருள் கொள்ளப்படுமா என்பது நான்காவது கேள்வி.
யாருக்குச் சாதகம்?
மேற்கண்ட கேள்விகளைத் தாண்டி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சிக் கான பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக நிரூபித்துக்கொள்வதற்கான வாய்ப்பு முதல்வர் பழனிசாமிக்குக் கிடைத்திருக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், ஆர்.கே.நகர் தொகுதி, சபாநாயகர் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 214. அதன்படி பார்த்தால், பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் போதும். ஆகவே, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இது பெரும்பான்மை அரசுதான் என்று நிரூபிக்க முயல்வார் முதல்வர் பழனிசாமி. அந்த வாய்ப்பைத் தடுக்க முதல் முயற்சியை எடுக்கும் வாய்ப்பு தினகரன் தரப்புக்கே இருக்கிறது. உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, தகுதிநீக்கத்துக்குத் தடை வாங்கலாம். அடுத்து, இதே போன்ற வாய்ப்பு எதிர்க் கட்சிகளுக்கும் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியும் கூர்மை பெறுகிறது.
ஒன்று, இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுகித் தடைபெறலாம். அல்லது திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழியே மிகப்பெரிய அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கலாம். அதைச் செய்வதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தயாரா என்ற கேள்விக்கான விடையில்தான் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கின்றன.
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘தமிழக அரசியல் வரலாறு’,
‘இந்தியத் தேர்தல் வரலாறு’
முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT