Published : 04 Sep 2017 09:21 AM
Last Updated : 04 Sep 2017 09:21 AM
சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை ‘அரசு - தனியார் - பங்களிப்பின்’ அடிப்படையில், தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது நிதி ஆயோக். சமீபத்தில் வெளியிட்டுள்ள மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டத்தில் இதைத் தெரிவித்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும்போது மோசமாக உள்ளது என்று அதற்கொரு காரணத்தையும் சொல்லியிருக்கிறது. நிதி ஆயோக் எடுத்திருக்கும் முடிவு சரியா என்று அலசுகிறார்கள் கல்வியாளர்கள்:
கல்விக்கான நிதி குறைந்துவருகிறது
வே.வசந்திதேவி, முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:
அரசுப் பள்ளிகளில் குறை என்றால், அதைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. நல்ல ஆசிரியர்களை நியமிப்பது, பின்தங்கிய பகுதிகளிலிருந்து வருகின்ற குழந்தைகளுக்குத் தனிக் கவனம் செலுத்தி கற்றுக்கொடுப்பது என்று கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், அரசோ கல்விக்காகச் செலவுசெய்யத் தயாராக இல்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்துகொண்டே இருக்கிறது.
ஏற்கெனவே நிதி ஒதுக்கியதைக்காட்டிலும், இந்த ஆண்டு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். 2012-ல் மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கியது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.69%. 2017-18 நிதியாண்டில் அது 0.41% நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. மாநில அரசு ஒதுக்கும் தொகையையும் சேர்த்தால் இதுவரை 3.7% என்ற அளவைத்தான் எட்டியிருக்கிறோம். குறைந்தபட்சம் 6% நிதியை நாம் கல்விக்காகச் செலவிட வேண்டும். கியூபாவில் 18% செலவழித்தார்கள். 10 ஆண்டுகளில் அவர்கள் எழுத்தறிவின்மை என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். நாம் வாங்குகிற ஒவ்வொரு பொருளிலும் 3% கல்வி வரி வசூலிக்கும் அரசாங்கம், அதை யாருக்காகச் செலவழிக்கிறது?
அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில்லை. அரசாங்கம் பள்ளிகளுக்குச் செலவழிக்கத் தயாராகவே இல்லை.
தனியார் பள்ளிகள் எல்லாம் தரமானவையா?
பேராசிரியர். பிரபா கல்விமணி, கல்வியாளர்:
தற்போது கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம், மக்களிடத்தில் அதிகரித்துவரும் ஆங்கில மாயைதான். ஆங்கிலவழியில் படிப்பதுதான் தரமான கல்வி என்று சொல்வதும் அதை நம்புவதும் தவறான போக்கு. அதனால், தாய்மொழியில் படிப்பதையே கேவலமாக நினைக்கும் மனநிலையும் மக்களிடம் வளர்ந்துள்ளது. தாய்மொழியால் மட்டுமே தரமான கல்வியைக் கொடுக்க முடியும். மேலைநாடுகளில், பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளில் எல்லாம் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் பின்பற்றுகிறார்கள்.
தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பாடத்தைப் புரிந்துகொண்டுதான் படிக்கிறார்களா? அப்படியென்றால், தனியார் பள்ளிகளில் படித்து மருத்துவப் படிப்புக்குச் செல்பவர்கள் ஏன் கல்லூரிப் பாடங்களில் தேர்ச்சிபெற முடியாமல் போகிறது? மாநில உரிமைகளைப் பற்றி இப்போது பேச ஆரம்பித்திருக்கிறோம். 1976-ல் கல்வியை மத்திய பட்டியலுக்குக் கொண்டுசென்றார்கள். இத்தனை நாள் அதைப் பற்றி நாம் தீவிரமாக விவாதிக்கவில்லை. அதன் விளைவுகளை இப்போது அடுத்தடுத்து அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
கிராமப்புறப் பள்ளிகளிலும் நன்றாகப் படிக்க முடியும் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டுமேயொழிய, அதைத் தனியாரிடம் ஒப்படைப்பது தவறு. தற்போது அரசால் வகுக்கப்படும் கல்விக்கொள்கை என்பது, மேல்தட்டு மக்களின் நலன் சார்ந்ததாகவே உருவாக்கப்படுகிறது. அதனால்தான் அடித்தட்டு மக்களின் நலன்களைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படியெல்லாம் முடிவெடுக்கிறார்கள்.
பள்ளிகளின் மீது பழி போடுகிறது அரசு!
இமையம், பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்:
அரசுப் பள்ளிகள் மோசமாக இருக்கின்றன என்று நிதி ஆயோக் குறிப்பிட்டிருப்பது பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளைத்தான். எத்தனைத் திட்டங்களைக் கொண்டுவந்தாலும் இந்தத் தொடக்கப் பள்ளிகளை மேம்படுத்துவது என்பது எளிதாதன காரியமல்ல. காரணம், ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் அந்தக் குடும்பத்தைக் கல்விரீதியாக மேம்படுத்த முடியாது.
அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமானதில் ஆசிரியர்களின் பொறுப்பற்றத்தனமும் ஒரு காரணம்தான். அதைப் போலவே சமூகச் சூழலும் மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கிறது. அரசு இலவசமாகக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதுதானே அரசியல் சட்டம். அரசு தனது கடமையைச் செய்வதற்குப் பதிலாக பள்ளிகளின்மீது பழியைப் போடுகிறது.
ஏற்கெனவே அன்றாட தினக் கூலிகளின் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வர இயலாத நிலை இருக்கிறது. வருகின்ற ஒன்றிரண்டு பேரையும் வராமல் செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நவோதயா பள்ளிகளை நடத்துகிற அரசாங்கம், கிராமப்புறப் பள்ளிகளை மட்டும் தனியார் வசம் ஒப்படைப்போம் என்றால், அரசு யாருக்குச் செலவழிக்க விரும்புகிறது என்பது தெளிவாக இருக்கிறது. இது ஒரு நவீன தீண்டாமை. அரசின் கல்விக்கொள்கைகள் யாரையெல்லாம் வெளியே அனுப்பத் திட்டமிடுகிறது என்பதற்கு இன்று நம்மைக் கண்கலங்க வைத்திருக்கும் அனிதாவின் மரணமே உதாரணம்.
கல்வியைத் தனியார்மயமாக்கும் முயற்சி இது!
மு.சிவகுருநாதன், பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்:
கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்குவதற்கான முயற்சி இது. செயல்படாத பள்ளிகளை எந்த அளவுகோலைக் கொண்டு கண்டறியப்போகிறார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏற்கெனவே பள்ளிகளில் அடைவுத் தேர்வு என்ற முறையைப் பின்பற்றிவருகிறார்கள். பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளில் நடத்தப்படுகிற இந்த அடைவுத் தேர்வுகள் எல்லாமே ஒருவகையில் நீட் தேர்வைப் போலத்தான் நடத்தப்படுகின்றன. புத்தகத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால், வினாத்தாள் முறையானது மாணவர்களுக்கு வித்தியாசமாக இருக்கிறது. எனவே, மாணவர்கள் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். அதை வைத்து மாணவர்கள் எழுதவும் படிக்கவும் முடியாமல் திணறுகிறார்கள் என்று கூறிவிடுகிறார்கள். இப்போது அடைவுத் தேர்வுக்கேற்பப் பயிற்சியளிக்க வேண்டிய புதிய கட்டாயம் எழுந்திருக்கிறது.
ஆசிரியர்கள் வேலை பார்க்கவில்லை, உரிய நேரத்துக்கு வருவதில்லை என்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பது மட்டும்தான் அரசின் வேலையா? அவர்களைக் கண்காணிக்க வேண்டிய கடமையும் அரசாங்கத்துக்குத்தானே இருக்கிறது. ஆசிரியர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கை, ஆசிரியர்களின்மீது சாக்குப்போக்கு சொல்லி தனியார்மயத்தை நோக்கி படிப்படியாக அழைத்துச்செல்வது என்பதுதான்.
பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டியதும், தவறுகளைச் சரிசெய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு. அதை எந்தக் காரணம் கொண்டும் அரசு தட்டிக்கழிக்க முடியாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT