Published : 20 Jul 2014 09:10 AM
Last Updated : 20 Jul 2014 09:10 AM
இருள் போர்த்திய அந்த மயானப் பிரதேசத்தில், இலைகள் உதிர்ந்து முறுக்கேறி நிற்கும் மரங்களைக் கடந்து நடந்து செல்லும் விக்கிரமாதித்த மகாராஜா, பக்கவாட்டில் திரும்பிப் பார்க்கிறார். வலது கையில், வளைந்து பளபளக்கும் வாள். இடது தோளில் ஒரு உடல் தொங்குகிறது. கீழே படமெடுத்தபடி சீறும் பாம்பு நெளிகிறது. பாறைகளுக்கு இடையில் மண்டியிருக்கும் புதர்களும், வறண்ட புற்களும் காற்றே இல்லாத அந்த இரவிலும் சலசலக்கின்றன. ஆங்காங்கே சில மண்டையோடுகள் வெறித்துப் பார்க்கின்றன. காய்ந்த மரக் கிளைகளில் அமர்ந்து உற்றுப் பார்க் கின்றன ஆந்தைகள். அந்த அமானுஷ்யக் குளிர் உங்கள் உடலை ஊடுருவும் தருணத்தில், திடீரென்று உயிர்பெற்று கண்களைத் திறக்கிறது, விக்கிரமாதித்தன் தோளில் தொங்கும் உடலுக்குள் இருக்கும் வேதாளம். திடுக்கிட்டுக் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறீர்கள்.
அரண்மனைத் தூண்கள், குதிரை வீரர்கள்…
உங்களைப் போலவே, இந்தியர்கள் பலரின் இளம்பிராயக் கனவுகளில் தோன்றி மிரட்டிய அந்தக் காட்சியை வரைந்தவருக்கு நேற்று வயது 90 (பிறப்பு: 19-07-1924). பார்ப்பவர்களின் கற்பனையைத் தூண்டும் ஆயிரக் கணக்கான ஓவியங்களை வரைந்தவர். பல ஓவியர்கள் உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர். இந்தியாவின் சிறுவர் இலக்கியம், சித்திரக் கதைகள், ஆன்மிகக் கதைகள் என்று பரந்துவிரியும் தளங்களைத் தன் கைவண்ணத்தால் மிளிரச் செய்தவர். அரண்மனைத் தூண்கள், அந்தக் கால ஓட்டு வீடுகள், தெருக்கள், அலைபுரளும் சிகையுடன் குதிரைகள் மீதமர்ந்து விரையும் இளவரசர்கள், கையில் மலர்களுடன் புன்னகைத்து நிற்கும் இளவரசிகள் என்று நேரில் பார்த்திராத கற்பனை உலகுக்கு நம் கைபிடித்து அழைத்துச்சென்றவர்.
சென்னை போரூர் அருகே அழகான அந்த வீட்டில் அமைதியாக நாற்காலியில் காலத்தின் சுவையைத் தன்னுள் ரசித்தபடி அமர்ந்திருக்கிறார், சங்கர் என்று அழைக்கப்படும் கே.சி. சிவசங்கரன். பல சாதனைகளையும் உன்னதங்களையும் கடந்து வந்த அந்த ஓவியர் தனது நினைவுகளை நடுக்கமற்ற குரலில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். காமிக்ஸ் காதலர் கிங் விஸ்வாவும், ‘தி இந்து' நாளிதழின் ஓவியர்களில் ஒருவருமான வெங்கியும் என்னுடன் வந்திருக்கின்றனர். பாக்கியசாலியான வெங்கி, ‘அம்புலி மாமா' இதழில் சங்கருடன் பணியாற்றியவர். “எப்படி இருக்கே வெங்கி?” என்று நலம் விசாரிக்கும் சங்கர், தனது பழைய சீடருடன் பாசத்தோடு உரையாடுகிறார்.
கிராமஃபோன் பகுதிபற்றியும் அதில் இடம்பெறும் அனுபவம் சார்ந்த கட்டுரைகள்பற்றியும் அவரிடம் சொன்ன போது ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறார். பின்னர், கண்கள் விரிய, “கிராமஃபோன்னாலே ஹெச்.எம்.வி. ரெக்கார்டுதான் நினைவுக்கு வருது. அதில் ஒரு குட்டி நாய் கிராமஃபோனைப் பாத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கும். அப்ப, பாகவதர் பாடின பாடல்களை கிராமஃபோன்ல கேட்போம். பரவசமா இருக்கும். அதெல்லாம் நம்ம நினைவுல இன்னும் நிக்குதுன்னா அதுக்குக் காரணம், அது நம்ம மனசத் தொட்டதுதான். ஒண்ணு தெரியுமோ, நானும் ஓரளவுக்குப் பாடுவேன்… ஒவ்வொரு ராகமும் ஒரு தேவதை” என்கிறார் சிலிர்ப்புடன்.
70 ஆண்டுகளுக்கும் மேலான தனது ஓவிய அனுபவங்கள், சாதனைகள் மட்டுமல்லாமல், ஆன்மிகம், தத்துவம், கர்நாடக இசை என்று ஆத்மார்த்தமாகப் பேசத் தொடங்குகிறார். “வீட்டை விட்டு வெளியே போகணும்னு முடிவெடுத்த பிறகு தன்னோட கடுக்கன், மூக்குத்தி எல்லாத்தையும் கண்ணில் படுறவங்ககிட்ட குடுத்துட்டு சந்நியாசியாப் போயிட்டார்” என்று ரமண மகரிஷியைப் பற்றி சொல்லத் தொடங்குகிறார். பேச்சில் பட்டினத்தாரும் இடம்பெறுகிறார். ராமாயணம், மகாபாரதம் முதல் ஆன்மிகம் தொடர்பான பல கதைகளை ஓவியமாக வரைந்த சங்கர், அவற்றை ஆழ்ந்து வாசித்ததன் மூலம் தத்துவார்த்தமான மோனநிலையை அடைந்திருப்பது அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.
ஓவியப் பள்ளி, அம்புலிமாமா…
ஈரோடு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் 1924-ல் பிறந்தவர் சங்கர். நல்ல இசை ரசனை கொண்ட அவரது தந்தை பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தனது 10-வது வயதில், சென்னைக்குத் தனது அன்னை மற்றும் தம்பியுடன் வந்தார் சங்கர். பிராட்வே கார்ப்பரேஷன் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் சேர்ந்தபோது ‘நமது அரசர் ஐந்தாம் ஜார்ஜ்' என்று எழுதச் சொன்னார்களாம் ஆசிரியர்கள். தனது கையெழுத்து அழகாக இருந்ததால் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டதை நினைவுகூரும் சங்கர், தனது ஓவியத் திறமையும் பள்ளி நாட்களிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார். “நான் படிச்ச பள்ளிக்கூடத்துல பல பசங்க ஆர்வமா படிக்க வந்ததுக்குக் காரணம், மதிய உணவுதான். ஒரு பெரிய வண்டியில, பெரிய பாத்திரங்கள்ல சாதம் இருக்கும். எவ்ளோ வேணாலும் சாப்பிட்டுக்கலாம். அப்பவே, படிக்கிற பசங்களுக்குச் சாப்பாடு போட்டது கார்ப்பரேஷன். இப்ப சொன்னா யாரும் நம்ப மாட்டா…” என்கிறார்.
அதன் பிறகு முத்தையால்பேட்டை பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தபோது, பள்ளியின் ஓவிய ஆசிரியர், சங்கரின் திறமையை உணர்ந்து ஊக்கப்படுத்தினார். “அவர்தான், என்னை ஓவியப் பள்ளியில சேரச் சொல்லி வழிகாட்டினார். ஹைஸ்கூல் முடிச்சிட்டு, ஓவியப் பள்ளியில சேர்ந்தப்ப, அங்க ராய் சவுத்ரிதான் பிரின்ஸ்பாலா இருந்தார். பீச்ல இருக்கும் உழைப்பாளர் சிலையை அவர் உருவாக்கின விதத்தை மறக்கவே முடியாது. கல்மீது கயிற்றைக் கட்டி, அதைப் பலம் கொண்ட மட்டும் இழுக்கச் சொல்வார். இழுக்குறவங்க கையில நரம்பு முறுக்கேறுறதைப் பாத்து அதைப் போலச் செதுக்கினார்” என்கிறார்.
ஓவியப் பள்ளியில் (இப்போதைய ஓவியக் கல்லூரி) பயின்ற பின்னர், முதலில் கலைமகள் பத்திரிகையில் ஓவிய ராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன்பின்னர், 1951-ல் அம்புலிமாமாவில் சேர்ந்தார் சங்கர். பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு!
சந்தமாமா (அம்புலிமாமா) காலத்தின் நினைவுகளை அசை போடுகிறார். தனக்கு முன்பே அங்கு பணிபுரிந்த புகழ்பெற்ற ஓவியர் சித்ராவுடன் (வீரராகவன்) பணிபுரிய நேர்ந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். இருவரும் இணைந்து அம்புலிமாமாவுக்காக வரைந்தனர். மொத்தம் 14 மொழிகளில் வெளியான அந்த இதழில் எம்.டி.வி. ஆச்சாரியா, வாப்பா, கேசவராவ் என்று பல ஜாம்பவான்கள் பணியாற்றினர். நம் நினைவில் நிறைந்திருக்கும் விக்கிரமாதித்தன்–வேதாளம் முகப்பு ஓவியத்தை முதலில் சித்ராதான் வரைந்தார். அதன் பின்னர், விக்கிரமாதித்தன் சங்கரின் கரங்களில் அடைக்கல மானார். அந்த ஓவியம்தான் இன்றுவரை நம் நினைவில் நிற்கிறது.
அந்தக் கதையின் முடிவில், விக்கிரமாதித்தனின் தோளி லிருந்து பறந்து செல்லும் வேதாளத்தின் உருவத்தை அவர் வரையும் விதமே அலாதி. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமாக வரைந்திருப்பார். ஒவ்வொரு ஓவியமும் அதன் சட்டகங்களுக்கு வெளியில் விரிந்துகொண்டே செல்வதை நம்மால் உணர முடியும். அத்தனை அற்புதமான கலைத்திறன் அவருடையது.
காந்தியின் கையெழுத்துக்காக…
தான் கடந்து வந்த நிகழ்வுகளை அனுபவத் தொகுப்பாக நினைவு அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கிறார் பெரியவர். சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியிடம் கையெழுத்து வாங்கக் காத்திருந்ததுபற்றிப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். “ஒரு கையெழுத்துக்கு அஞ்சு ரூபாய் வாங்கினார் காந்தி. எல்லாம் ஏழை மக்களின் நலனுக்காக. என்னால அவர்கிட்ட கையெழுத்து வாங்க முடியல. காரணம், என்கிட்ட அப்ப அஞ்சு ரூபா இல்ல” என்கிறார் அதிரும் சிரிப்புடன். காமிக்ஸ், சிறுவர் இலக்கியம் என்று தீவிரமாகச் செயல்படும் விஸ்வா, அவரைப் பற்றிச் சொல்லும் தகவல்களால் ஆச்சரியமடைகிறார். “நான் செய்த வேலைகள் எனக்கே நினைவில்லை… இவர் இத்தனை தகவல் சொல்றாரே” என்கிறார் புன்னகையுடன்.
தொடர்ந்து வரைஞ்சிகிட்டே இருக்கணும்…
சங்கர் ஓவியங்களில் இருக்கும் தனிச்சிறப்பு, செறிவான கோடுகள். புதர்கள், மரங்கள் என்று இயற்கை அவரது கோடுகளிலேயே உயிர்பெறும். எப்படி இது என்றால் சிரிக் கிறார். “எல்லாம் முயற்சிதான். தொடர்ந்து வரைஞ்சிகிட்டே இருக்கணும். எல்லாம் கைகூடும்” என்கிறார். இத்தனை ஆண்டுகள் வரைந்ததில் அவரது ஆள்காட்டி விரல் சற்றே வளைந்திருக்கிறது. எனினும், அவரது ஓவியங்களில் இன்றும் மனிதர்கள், விலங்குகள் தொடங்கி எதிலும் ஒரு சின்னக் கோணல்கூடத் தென்படாது. “ஓவியப் பயிற்சியில் முக்கிய மானது அனாட்டமிதான் (உடற்கூறியல்)” என்கிறார் சங்கர்.
2011 வரை அம்புலிமாமாவில் தொடர்ந்து பணிபுரிந்திருக் கிறார் சங்கர். 1990-களில் சிலகாலம் மூடப்பட்டிருந்த அம்புலிமாமா நிறுவனம் பின்னர் செயல்படத் தொடங்கி,
2007-ல் வேறொருவரிடம் கைமாறியது. தற்போது, அம்புலி மாமா வெளிவருவதில்லை. ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ‘ராமகிருஷ்ண விஜயம்' இதழுக்கு வரைந்திருக்கிறார் சங்கர். கல்கண்டு, குமுதம் போன்ற இதழ்களிலும் வரைந்திருக்கிறார். “குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி. தீபாவளி சமயங்களில் எனக்கு ஒரு தனிக் காசோலை அனுப்புவார். தீபாவளி மலரில் நான் வரையலியே என்றால், ‘நீங்க எவ்ளோ ஓவியம் எங்க பத்திரிகையில் வரைஞ்சிருக்கீங்க… அதுக்காகத்தான் இது'ன்னு சொல்வார்” என்கிறார்.
அவரது இரு மகன்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தற்போது அவர் இருப்பது அவரது மகள் வீட்டில். “என்னையும் என் மனைவியையும் மகள் நன்னா பாத்துக் கறா…” என்கிறார் கனிவுடன். விடைபெறும்போது, நமக்கான கற்பனையுலகைத் தன் கை களாலேயே படைத்து நம்மை அதில் உலவ வைத்த அவரது கைகளைப் பற்றிக் குலுக்கிய தருணத்தில், உடல் சிலிர்த்தது உண்மை.
(19.07.2014 அவரது 90-வது பிறந்த நாள். ‘தி இந்து' அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.)
- சந்திப்பும் எழுத்தாக்கமும்: வெ. சந்திரமோகன்,தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
சந்திப்பில் உதவியவர்கள்: கிங் விஸ்வா, ஓவியர் வெங்கி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT