Last Updated : 15 Jul, 2014 09:00 AM

 

Published : 15 Jul 2014 09:00 AM
Last Updated : 15 Jul 2014 09:00 AM

முதல் திருத்தத்தின் மூலவர் காமராஜர்!

சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியாக ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் 1947-ல் பதவியேற்ற பிறகு, 1928-ல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பிராமணருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பிராமணர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். 'காங்கிரஸ் ஆள்கிறதா? தாடி இல்லாத ராமசாமி ஆள்கிறாரா?' என்கிற குரல்களைக் கிளப்பிய மாற்றம் இது.

இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பிராமணர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றம் போட்ட தடை

இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பிராமண மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)-வது விதி ஆகியவற்றுக்கு முரணானது' என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம்பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரே இந்த வழக்கில் வாதிகளுக்காக வாதாடினார். 1928 முதல் ஓரளவுக்காவது நடைமுறையில் இருந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதிக்கும் 29(2)வது விதிக்கும் முரணானது' என்று சொல்லி ரத்துசெய்து உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை மாகாண அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, ‘கம்யூனல் ஜி.ஓ. செல்லாது' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.

பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விளையக்கூடிய பேராபத்தைத் தடுக்கத் திட்டமிட்ட பெரியார், 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு' ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட பெரியாரின் நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.

தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்' அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்' என்ற கோஷம் தலைதூக்கியது. இந்தத் தீர்ப்பால், மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில், அறிஞர் அண்ணா அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பொன் விலங்கு' என்ற தலைப்பில் நூலாக 1953-ல் வெளியிடப்பட்டது. அதில், “30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது… அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்துபொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன?” என்று உரிமைக் குரல் எழுப்பியிருந்தார் அண்ணா.

குரலைச் செயலாக்கிய காங்கிரஸ்

மக்கள் சக்தியின் வலிமையையும், இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் இந்திய அரசு உணர வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஜனநாயகவாதியான பிரதமர் நேரு, உண்மை நிலையை அறிய, காமராஜரைக் கலந்தாலோசித்தார். காமராஜர் தந்த தெளிவான ஆலோசனைக்குப் பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் முதல் திருத்தத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

அரசமைப்புச் சட்டத்தின் 1951-ம் ஆண்டு செய்யப்பட்ட முதல் திருத்தம், 15-வது விதியின் 4-ம் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் ‘இந்த 15-வது விதியில் உள்ள எதுவும், அல்லது 29(2)-ல் கண்ட எதுவும், சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக் கருதி, மாகாண அரசாங்கம் தனிச் சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது' என்பதாகும்.

சமூகநீதியை முன்னெடுத்த மூலவர்

இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு, பிற்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடு கிடைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி 15% இடஒதுக்கீடு கிடைத்தது. ஆக மொத்தம் 41% இட ஒதுக்கீடு உத்தியோகங்களிலும் கல்வி நிலையங்களிலும் கிடைத்தது. எனினும், இந்த ஏற்பாட்டில் தம் லட்சியம் நிறைவடையாததை உணர்ந்த பெரியார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, பிராமணர் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் ஜனத்தொகையின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி கல்வி மற்றும் உத்தியோகத் துறைகளில் அரசியல் சட்டரீதியாக இடஒதுக்கீடு செய்துதர வேண்டும்' என்று பேசியும் போராடியும் வந்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பெற்ற முதல் திருத்தத் துக்குப் பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை மீண்டும் புதிதாகப் பிறப்பித்துச் செயல்படுத்தியது.

காலம்காலமாகத் தமிழ்ச் சமுதாயம் அனுபவித்துவந்த இடஒதுக்கீட்டு உரிமையைக் காக்கப் பல்வேறு வகைகளில் தொடர்ந்து போராடிய பெரியார் - அரசமைப்புச் சட்டத்தில், முதல் திருத்தம் கொண்டுவருவதற்குத் தூண்டுகோலாக இருந்த காமராஜர் - இப்பிரச்சினை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி மக்கள் கருத்தைத் திரட்டிய அண்ணா ஆகிய இம்மூவருமே முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தார்கள். அன்று பிரதமர் நேருவோடு காமராஜருக்கு இருந்த அரசியல் நெருக்கத்தின் காரண மாகவே நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடிந்தது. அவ்வகையில், ‘முதல் திருத்தத்தின் மூலவர்' என்று காமராஜரைக் குறிப்பிடுவது எத்தனை பொருத்தம்!

- ஆ. கோபண்ணா, பத்திரிகையாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர், ‘காமராஜ் - ஒரு சகாப்தம்’ என்ற நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x