Published : 18 Sep 2017 10:00 AM
Last Updated : 18 Sep 2017 10:00 AM
சுமார் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து சனி கிரகத்தையும் அதைச் சுற்றும் துணைக் கோள்களையும் ஆராய்ந்து, பூமிக்குப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வந்த காசினி என்னும் விண்கலம், செப்டம்பர் 15 அன்று தனது பணிகளை முடித்துக்கொண்டு சனியுடன் ஐக்கியமாகியது. அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோயிற்று அந்த விண்கலம். எவ்வளவோ தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றைப் பகுத்து ஆராயச் சில ஆண்டுகள் பிடிக்கும்.
1997 அக்டோபர் 15-ல் சக்திமிக்க ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது காசினி. ஆனாலும், சனி கிரகத்தை நோக்கிக் கிளம்ப அதற்கு மேலும் அதிக வேகம் தேவைப்பட்டது. ஆகவே, அது முதலில் வெள்ளி கிரகத்தை நோக்கிச் சென்று, அதன் அருகில் கடந்து சென்றது. வெள்ளி கிரகத்தின் சுழற்சி வேகமானது காசினிக்குக் கூடுதல் வேகத்தை அளித்தது. காசினி மறுபடியும் வெள்ளி கிரகத்தைக் கடந்து சென்றபோது மேலும் வேகம் கூடியது. பிறகு, பூமியைக் கடந்து சென்றபோது அதன் வேகம் மேலும் அதிகரித்தது. இதற்குப் பின்னர்தான் சனி கிரகம் நோக்கி காசினி பயணித்தது. வழியில் வியாழன் கிரகத்தைக் கடந்த போது காசினியின் வேகம் மேலும் அதிகரித்தது.
விண்வெளித் தேர்
காசினியின் முழுப் பெயர் காசினி - ஹுய்ஜன்ஸ் ஆய்வுக் கலம். கி.பி. 1670-ம் ஆண்டு வாக்கில் ஜியோவன்னி டாமினிகோ காசினி என்னும் இத்தாலிய விஞ்ஞானி, சனி கிரகத்தின் ஐந்து புதிய கிரகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன், சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்களில் இடைவெளி உள்ளது என்றும் கண்டுபிடித்தார். ஹுய்ஜன்ஸ் என்னும் டச்சு விஞ்ஞானி சனியைச் சுற்றும் டைட்டான் என்னும் பெரிய துணைக் கோளை 1655-ல் கண்டுபிடித்தார். ஆகவே, அவர்களது பெயர்கள் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டன.
சனி கிரகத்துக்கு காசினியை அனுப்பியதே ஒரு பெரிய சாதனை. அந்த விண்கலத்தின் எடை சுமார் 5 டன். அதன் உயரம் சுமார் ஏழு மீட்டர். அகலம் நான்கு மீட்டர். கிட்டத்தட்ட ஒரு சிறிய தேருக்குச் சமம். அதில் 14 வகையான ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருந்தன. காசினியின் உறுப்புகளின் எண்ணிக்கை 1,700.
சனி கிரகம் பூமியிலிருந்து குறைந்தது 120 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரத்தைப் போல எட்டு மடங்கு ஆகும். ஆகவேதான் காசினி சனி கிரகத்துக்குப் போய்ச் சேர சுமார் ஏழு ஆண்டுகள் ஆகின. காசினி 2004-ல் சனி கிரகத்தை எட்டிப் பிடித்து ஆய்வுகளை மேற்கொண்டது. அமெரிக்காவின் நாஸா தனது ராக்கெட் மூலம் காசினியைச் செலுத்தியது என்றாலும், காசினியில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் பங்கும் இத்தாலிய விண்வெளி அமைப்பின் பங்கும் இருந்தது. காசினியிலிருந்து ஓர் ஆய்வுக் கலம் சனி கிரகத்தைச் சுற்றிவரும் டைட்டான் துணைக் கோளில் இறங்கியது. இந்த ஆய்வுக் கலம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தயாரித்ததாகும்.
சவால்கள், சாதனைகள்!
காசினி, சனி கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆராய்ந்தது. மேலும் கீழுமாகச் சுற்றி சனி கிரகத்தின் வளையங்களை ஆராய்ந்தது. சனி கிரகத்தைச் சுற்றும் துணைக் கோள்களில் பலவற்றை நெருங்கி ஆராய்ந்தது. சனி கிரகத்தை 62 துணைக் கோள்கள் சுற்றிவருகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் பூமியைச் சுற்றுகிற ஒரே துணைக் கோள் சந்திரன் ஆகும்.
காசினி, சனி கிரகத்தை நெருங்கியபோது முதலில் எடுக்கப்பட்ட படங்கள் தெளிவாக இல்லை. காரணம், கடும் குளிர் கேமராக்களைப் பாதித்திருந்தது. விண்கலத்துக்குள் சூடு உண்டாக்கும் கருவிகள் உண்டு. அவற்றை இயக்கிய பின்னர் படங்கள் தெளிவாக இருந்தன.
காசினியில் இடம்பெற்ற கருவிகள் இயங்க மின்சாரம் தேவை. செவ்வாய்க்கான விண்கலமாக இருந்தால், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்று வதற்கான சூரிய விசைப் பலகைகளை அமைத்துவிட்டால் போதும். ஆனால், சனி கிரகம் சூரியனி லிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் அவ்வளவு தொலைவில் சூரியன் உறைக்காது. சொல்லப் போனால், சனி கிரகத்திலிருந்து பார்த்தால் சூரியன் பட்டாணி அளவில் உள்ள நட்சத்திரம்போலத் தெரியும்.
எனவே, காசினியில் உள்ள கருவிகள் செயல்படவும், குளிர் தாக்காமல் வெப்பத்தை அளிக்கவும் காசினியில் ஆர்.டி.ஜி. எனப்படும் அணுமின் பேட்டரி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேட்டரியில் புளூட்டோனியம்-238 எனப்படும் அணுசக்திப் பொருள் 32 கிலோ வைக்கப்பட்டிருந்தது. இந்த அணுசக்திப் பொருளிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டது.
புதிய தகவல்கள்
காசினி, சனி கிரகத்தைச் சுற்றிவந்த காலத்தில் அதனுடன் தொடர்புகொள்வதில் ஒரே ஒரு பிரச்சினை தான் இருந்துவந்தது. காசினியை நோக்கி நாஸா விஞ்ஞானிகள் ஆணை பிறப்பித்தால் அது போய்ச் சேர - சனி கிரகம் எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்து - 68 முதல் 84 நிமிடங்கள் பிடித்தன. சனியிலிருந்து தகவல்கள் வந்து சேரவும் அவ்வளவு நேரம் ஆகின.
சனி கிரகம் மற்றும் அதன் துணைக் கோள்கள் பற்றி காசினி மூலம் பல புதிய தகவல்களைப் பெற முடிந்தது. என்சிலாடஸ் என்னும் துணைக் கோள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும் அதற்கு அடியில் உப்பு நீர்க் கடல் இருப்பது தெரியவந்தது. அதன் தென் துருவப் பகுதி யில் வானை நோக்கி நீரூற்றுகள் பீச்சியடிக்கப்படுகின்றன. டைட்டான் துணைக் கோளில் காற்று மண்டலம் உள்ளது. அங்கும் பனிக்கட்டிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறது. இத்துணைக் கோளில் நுண்ணுயிர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. டயோன் என்னும் துணைக் கோளில் ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனி கிரகத்துக்கு மேலும் மூன்று துணைக் கோள்கள் உள்ளதை காசினி கண்டுபிடித்தது. தவிர, சனியின் வட, தென் துருவங்களில் கடும் புயல்கள் வீசுவதையும் காசினி கண்டறிந்தது. மொத்தத்தில், சனி பற்றி விஞ்ஞானி கள் பல புதிய விஷயங்களை அறிந்து கொண்டனர்.
காசினி, சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, கடைசி நிமிடங்கள் வரை படங்களை அனுப்பியது. அமெரிக்காவில் கட்டுப்பாட்டுக் கேந்திரத்தில் கூடியிருந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் அதைக் கண்டபோது, அவர்களின் கண்களில் நீர் வழிந்தது. “என் நீண்ட நாள் நண்பனை இழந்துவிட்டதுபோல இருந்தது” என்றார் காசினி திட்டத்துக்குப் பொறுப்பேற்றிருந்த தலைமை விஞ்ஞானி.
நீங்கள் சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானை நோக்கினால், சற்று உயரத்தில் இடதுபுறம் தள்ளி பிரகாசமான ஒளிப்புள்ளி தெரியும். அதுவே சனி கிரகம்!
- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: nramadurai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT