Published : 06 Sep 2017 09:11 AM
Last Updated : 06 Sep 2017 09:11 AM
க
டந்த 1997 முதல் சீன நாட்டின் ‘சிறப்பு நிர்வாக மண்டலம்’ என்கிற ‘பெயருடன்’, ‘சுயாட்சி’ அதிகாரம் கொண்ட பகுதியாக இருக்கிறது 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் - ஹாங்காங். ராணுவம், பொருளாதாரம் தவிர்த்து, சட்டங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகம், எல்லாமே தனிதான். ஆனாலும், ஹாங்காங் மீதான தனது பிடியை மேலும் இறுக்கமாக வைத்துக் கொள்ளவே சீனா விரும்புகிறது.
1997-ம் ஆண்டு ஏற்பாட்டை, அப்போது ஹாங்காங் மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கலாம். இன்றைய தலைமுறை இளைஞர்கள், இதற்குச் சற்றும் ஒப்புக் கொள்வதாக இல்லை. சுதந்திர உணர்வு, இளைஞர்களுக்கு இயற்கையாகவே ஏற்படக் கூடிய ஒன்றுதானே....? அதனை அச்சம் இன்றி, வெளிக் காட்டியும் வருகின்றனர். அதனால் இப்போது, அச்சம், சீன அரசுக்கு, 'இடம் மாறி' விட்டது. அதன் வெளிப்பாடுதான், இரு நாட்களுக்கு முன்பு, சீன அரசு அறிவித்து இருக்கும் புதிய விதிமுறைகள்.
சீன நாட்டு தேசிய கீதத்துக்கு ‘உரிய’ மரியாதை தரப்பட வேண்டும். மீறினால், மூன்று ஆண்டு சிறை வாசம், மேலும், குற்ற நடவடிக்கைகள் பாயும் என்றெல்லாம் மிரட்டுகிறது இந்த அறிவிப்பு. சீன அரசின் புதிய அறிவிப்பு, பட்டியல் 3-ல் சேர்க்கப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ‘சுயாட்சி’ பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
இதனை, ஹாங்காங் மக்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்...? அறிவிப்பு வெளி வந்த உடனேயே, இதற்கான எதிர்ப்பும் வலுவாகத் தொடங்கிவிட்டது. தேசிய கீதம் மீதான சீன அரசின் அறிவிப்பு, தங்களின் பேச்சுரிமை, கருத்துரிமையை நசுக்கும் முயற்சி என்றே, பெருவாரியான ஹாங்காங் இளைஞர்கள் கருதுகின்றனர். சீனாவின் அறிவிப்பை ஹாங்காங் இளைஞர்கள் துணிந்து எதிர்க்கும் நிலையில் பிரதான சீனப் பகுதியில் இருந்து பெரிய அளவில் ஆட்சேபக் குரல் எழுந்ததாகத் தெரியவில்லை.
வட கொரியா, பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ஆதரவு மூலம் சர்வதேச அரங்கில் சீனா தனிமைப்பட்டு நிற்கிறது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், சீனாவின் ஆக்கிரமிப்பு அணுகுமுறைக்கு எதிராக நிற்பது, 'டோக்லாம்' பிரச்சினையில் இந்தியாவின் மாறாத கொள்கைக்கு உலக நாடுகளிடையே பெருகி வரும் வெளிப்படையான ஆதரவு.... எல்லாமே, சீனாவின் ‘கணக்கு’ தவறாகி வருவதையே உறுதி செய்கின்றன.
இவையெல்லாம் போக, சீனப் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக சரிவை நோக்கிப் பயணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், குடிமக்கள் அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கினால்...? நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தின் விளைவுதான், தேசிய கீதம் குறித்த, சீன அரசின் அறிவிப்பு.
ஆக்கிரமிப்புக் கொள்கை பாதையில் சீனா பயணிப்பது - உலக மக்களுக்கு வருத்தத்தைத் தரக் கூடியது. எல்லாரையும் அரவணைத்துச் செல்கிற நாடாக சீனா மாறினால் அது, உலக அமைதிக்கும் வளமைக்கும் நிரந்தர நன்மை பயக்கும். ‘பந்து’ இப்போது சீனாவின் மன்றத்தில். சீனாவின் ‘விளையாட்டு’ எப்படி இருக்கப் போகிறது...?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT