Published : 10 Sep 2017 04:02 PM
Last Updated : 10 Sep 2017 04:02 PM
இந்தியாவை ராணுவரீதியில் எதிர்கொள்ள முடியாது என்பதை வங்கதேச போரின்போதே பாகிஸ்தான் உணர்ந்து கொண்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து மறைமுக போரை தொடுத்தது. ஆனால் அந்த முயற்சியும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன்பிறகு ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் அரசு கையில் எடுத்த ஆயுதம் ‘கல்’. இந்த புதிய ஆயுதம், காஷ்மீரில் பல உயிர்களை பலி கொண்டது.
காஷ்மீரில் கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்கள், துப்பாக்கிச்சூட்டில் 90 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தால்கூட திடீரென ஒரு கும்பல் அவர்களை சூழ்ந்து கற்களை வீசி தாக்கியது. இந்த புதுவகையான தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாதுகாப்பு படை வீரர்கள் திணறினர்.
இதுதொடர்பாக மத்திய உளவுத் துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. புர்ஹான் வானி மரணத்தின்போது காஷ்மீரில் கலவரத்தை தூண்ட ஐ.எஸ்.ஐ. அமைப்பு ரூ.1,000 கோடியை வாரியிறைத்திருக்கிறது. இந்தத் தொகை ஹவாலா மூலம் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அனுப்பப்பட்டு கல்வீச்சாளர்களுக்கு தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் மூலம் கல்வீச்சுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கல் வீச ரூ.1,000 ஊதியம். அதோடு புது உடைகளும், ஷூக்களும் வழங்கப்பட்டுள்ளன. கல்வீச்சு குழுக்களை வழிநடத்தும் தலைவர்களுக்கு ரூ.5,000 ஊதியம்.
சூழ்ச்சியில் சிக்கிய இளைஞர்கள்
தீவிரவாதத்தால் சுற்றுலா தொழில் முடங்கி பொருளாதார நெருக்கடியில் தவித்த காஷ்மீர் இளைஞர்கள் பலர், கல் வீச்சை முழுநேர தொழிலாக ஏற்றனர். மிக எளிதான வேலை, கைநிறைய ஊதியம், அவர்களின் கண்களை மறைத்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் கல் வீச்சை பகுதிநேர வேலையாக மேற்கொண்டனர். ஐ.எஸ்.ஐ.-யின் இந்த சூழ்ச்சி வலையில் பல இளைஞர்கள் சிக்கி பலியாகினர்.
கொஞ்சம் தாமதமாக சுதாரித்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, கலவரத்தால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகளை திறந்தார். இதனால் கல்வீச்சுக்கு போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. இதை உணர்ந்த பிரிவினைவாதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு தீ வைத்து கல்விக் கூடங்களை செயல்படவிடாமல் தடுத்தனர்.
அதன்பிறகு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கல்வீச்சு சம்பவங்கள் தானாக குறைந்தன. கலவரத்தின் மூலக் காரணத்தை கண்டுபிடித்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து ஹவாலா மூலம் பெருந்தொகை பெற்ற ஹூரியத் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்களை அண்மையில் கைது செய்தது. இதில் ஹூரியத் அமைப்பின் தலைவர் சயீது அலி ஷா கிலானின் மருமகன் அல்தாப் அகமது ஷாவும் ஒருவர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாதாம் பருப்பு ஏற்றுமதி மூலமும் இந்தியாவில் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பாகிஸ்தான் நிதியளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீர், டெல்லி, ஹரியாணாவில் சுமார் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.
ஹூரியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஹவாலா பணப் பரிமாற்றம் தடுக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பாதுகாப்பு படையினரை நோக்கி சிலர் கற்களை வீசுவது வழக்கம். அதுபோன்ற நிகழ்வுகள் கூட தற்போது குறைந்திருக்கின்றன.
காஷ்மீர் இளைஞர்கள் ‘கற் காலத்தில்’ இருந்து மாற தொடங்கியிருப்பதை சமீபத்திய போலீஸ், ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் உணர்த்துகின்றன. பாதுகாப்புப் படைகளில் காஷ்மீர் இளைஞர்கள் சேரக்கூடாது என்று தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். சில போலீஸ், ராணுவ அதிகாரிகளை கொடூரமாக கொலையும் செய்துள்ளனர்.
அதற்கெல்லாம் அஞ்சாமல் காஷ்மீரில் நடைபெறும் போலீஸ், ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களில் பெருந்திரளான இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று வருகின்றனர். காஷ்மீரின் ரஜோரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போலீஸ் ஆட்தேர்வு முகாமில் 3,600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காஷ்மீர் இளைஞர்களுக்கு தேவை வேலைவாய்ப்பு. அது நிறைவேறும்போது காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறுவது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT