Published : 20 Apr 2023 08:32 PM
Last Updated : 20 Apr 2023 08:32 PM
மகாராஷ்டிர அரசியலில் அடுத்த 15 நாட்களில் இரண்டு பூகம்பங்கள் வெடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் சட்டமேதை அம்பேத்கரின் பேரனும், வன்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர். அவர் கூறி இருப்பது உண்மைதான் என புதன்கிழமை ஆமோதித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே. மகாராஷ்ட்டிர அரசியலில் நிகழ இருக்கும் அந்த இரு பெரும் அதிரடி அரசியல் மாற்றங்கள் என்னவாக இருக்கும்? அந்த மாநில அரசியலில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? - விரிவாகப் பார்ப்போம்.
பின்னோக்கி ஒரு பார்வை: மகாராஷ்டிராவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியலை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் 3 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆம், 2019 அக்டோபரில்தான் இதற்கான ஆட்டம் ஆரம்பமாகிறது. 2019 அக்டோபரில் நடைபெற்ற மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பாஜக-சிவ சேனா அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அருதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறது. பாஜக 105 இடங்களிலும், சிவ சேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்றன. இந்த கூட்டணியின் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்றன.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா. உடனடியாக அந்தக் கூட்டணியில் தங்கள் கட்சி இணைவதாகக் கூறுகிறார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார். கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் இவர். இவர் கூறியதை நம்பி ஆட்சி அமைக்க முன்வருகிறது பாஜக. 2019 நவம்பர் 23ம் தேதி பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கிறார்கள்.
அஜித் பவாரின் இந்த முடிவை சரத் பவார் ஏற்காததால், ஐந்தே நாட்களில் அந்தக் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்கிறது. பாஜகவிடம் இருந்து பிரிந்த சிவசேனா, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இணைகிறது. அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் அம்மாநில அப்போதைய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி. இதையடுத்து, அந்தக் கூட்டணி சார்பில் 2019, நவம்பர் 28-ம் தேதி முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே. இதனால், எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்படுகிறது பாஜக.
உத்தவ் தாக்கரேவுக்கு வந்த சோதனை: மகாராஷ்டிராவின் தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருந்த பாஜக, தனக்கான காலத்திற்காக காத்துக்கொண்டிருந்தது. அந்தக் காலம், ஏக்நாத் ஷிண்டே மூலமாக வந்தது. சிவசேனாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அவர், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக கூட்டணியில் இணைகிறார். இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுகிறார் ஆளுநர் கோஷ்யாரி. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி: உத்தவ் தாக்கரேயின் ராஜினாமாவை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கிறது பாஜக. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருவரும் பதவியேற்கிறார்கள். அதோடு, இரு தரப்பிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் சென்ற வழக்குகள்: சிவசேனா கட்சியின் கொரடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறார் அப்போதைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால். அவரது தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்தும், ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் உத்தவ் தாக்கரே.
மற்றொரு முக்கிய நிகழ்வாக, சிவ சேனா எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் பிரித்துக்கொண்டு சென்ற ஏக்நாத் ஷிண்டே, தங்கள் தரப்புதான் உண்மையான சிவசேனா என அறிவிக்கிறார். அவரிடம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருப்பதன் அடிப்படையில், அவரது கூற்றை ஏற்கிறது தேர்தல் ஆணையம். இதனால், கட்சியின் பெயரும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்குச் செல்கிறது. இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் உத்தவ் தாக்கரே.
வழக்குகளை விசாரித்த அரசியல் சாசன அமர்வு: இந்த வழக்குகள் அனைத்தையும், 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய வழக்கு விசாரணை, வாத பிரதிவாதங்கள் முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில், பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு எதிராக துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் எடுத்த தகுதி நீக்க நடவடிக்கை சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர்களின் பதவி பறிபோகும். இதன் தொடர்ச்சியாக, பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படலாம். மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழலாம்.
மீண்டும் களத்திற்கு வந்த அஜித் பவார்: இந்தச் சூழலில்தான், பாஜகவோடு மீண்டும் கூட்டணி சேர அஜித் பவார் முயல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான பிரஃபுல் படேல் மூலம் பாஜகவோடு கூட்டணி வைப்பது குறித்து ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சரத் பவாரோடு கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாலும், பாஜகவோடு இணைந்தால் முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ வர முடியும் என்பதாலும் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோக்கோடு கடந்த 11ம் தேதி தனது ஆதரவு எம்எல்ஏக்களை ரகசியமாக சந்தித்துள்ளார் அஜித் பவார். இதில், சுமார் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்களில் பலர், பாஜகவோடு கூட்டணி சேர சரத் பவாரின் ஒப்புதல் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.
அஜித் பவாரின் வியூகத்தை உடைத்த சரத் பவார்: இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் குறித்து தெரிந்து கொண்ட உத்தவ் தாக்கரே தரப்பு, அது குறித்து சரத் பவாரிடம் தெரிவித்திருக்கிறது. பின்னர் வகுக்கப்பட்ட வியூகத்தின்படி, சிவசேனாவின் சாம்னா பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த சரத் பவார், தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் பாஜகவில் இணைந்தாலும், தான் ஒருபோதும் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அதிரடியாக அறிவிக்கிறார். இதையடுத்து கடந்த 18ம் தேதி மீண்டும் தனது ஆதரவு எம்எல்ஏக்களைக் கூட்டுகிறார் அஜித் பவார். இம்முறை, 12 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். தனக்கான ஆதரவு குறைந்துவிட்டதை உணர்ந்த அஜித் பவார், பாஜகவோடு இணைவதற்கான தனது முடிவை நிறுத்திவைக்கிறார்.
அஜித் பவார் விளக்கம்: கடந்த 11ம் தேதியில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்காத அஜித் பவார், கடந்த 18ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்கிறார். ''காரணமே இல்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது. நான் எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை ஏதும் மேற்கொள்ளவில்லை. 40 எம்எல்ஏக்களிடம் நான் கையெழுத்து பெறவுமில்லை. எம்எல்ஏக்கள் என்னை சந்திப்பது வழக்கமானதுதான். அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கக்கூடாது. நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன். தொடர்ந்து இதில்தான் இருப்பேன்'' என அவர் விளக்கம் அளித்தாலும், அதனை நம்ப பலரும் தயாராக இல்லை.
ஏக்நாத் ஷிண்டே தரப்பு வியூகம்: அஜித் பவாரின் வியூகத்தை முழுமையாக அறிந்து கொண்ட சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) தரப்பு, அஜித் பவாரோடு, பாஜக கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத், ''முதுகில் குத்தக் கூடிய கட்சி தேசியவாத காங்கிரஸ். அக்கட்சியோடு சேர்ந்து நாங்கள் ஆட்சியில் இருக்க மாட்டோம். நாங்கள் வெளியேறிவிடுவோம். ஏனெனில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு சிவசேனா இருப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
2019-ல் அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு அஜித் பவார்தான் பொறுப்பு. ஆனால், எதனால் அது நிகழ்ந்தது என்பதை இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை. அஜித் பவார் தனியாக வருவதை (அதாவது அவர் பாஜகவில் இணைவதை) நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தனது ஆதரவு எம்எல்ஏக்களோடு வருவதை (அதாவது பாஜகவோடு கூட்டணி அமைப்பதை) ஏற்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.
மாற்றத்தை எதிர்நோக்கும் மகாராஷ்டிர அரசியல் களம்: இந்தப் பின்னணியில்தான், மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாக பிரகாஷ் அம்பேத்கரும், சுப்ரியா சுலேவும் தெரிவித்துள்ளனர். சிவசேனா இரண்டாக உடைந்ததை அடுத்தே தற்போதைய அணி அங்கு ஆட்சிக்கு வந்துள்ளது. அடுத்ததாக, தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடையுமா? அதை உடைத்துக்கொண்டு வந்து அஜித் பவார் பாஜகவோடு கூட்டணி அமைப்பாரா? ஒருவேளை ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனால், அஜித் பவாரின் துணையுடன் பாஜக ஆட்சியைத் தொடருமா? அல்லது மகா விகாஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்குமா? எனும் கேள்விகள் மகாராஷ்ட்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் 10-15 நாட்களுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியிலேயே பல்வேறு தரப்பினரும் தங்களுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT