Last Updated : 20 Apr, 2023 02:12 PM

5  

Published : 20 Apr 2023 02:12 PM
Last Updated : 20 Apr 2023 02:12 PM

“மோடி அலை எங்கும் வீசவில்லை... பாஜகவுக்கு என்னைக் கண்டால் பயம்!” - சித்தராமையா சிறப்பு நேர்காணல்

சித்தராமையா | கோப்புப் படம்

கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர் சித்தராமையா. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் எம்எல்ஏ, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், முதல்வர் என பல பதவிகளை வகித்திருக்கிறார். 75 வயதை கடந்த இவர், கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் முன்னணி தளபதியாக களமாடிக் கொண்டிருக்கிறார். பரபரப்பான சூழலில் பெங்களூருவில் சித்தராமையாவை சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தேன்.

கடந்த 6 மாதங்களாக கர்நாடகா முழுவதும் பயணித்திருக்கிறீர்கள். தினமும் கட்சி சாராத பொதுமக்களை சந்திக்கிறீர்கள்? காங்கிரஸ் வெற்றிப்பெறும் என நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

“50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசியலை கவனித்து வருகிறேன். ஓர் அரசியல்வாதியாக 14 தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். மக்களின் நாடித்துடிப்பை நன்கு கணிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருக்கிறது. பல இடங்களில் மக்கள் ஆட்சியாளர்களின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். எனவே, இந்த முறை காங்கிரஸ் நிச்சயம் தனித்து ஆட்சி அமைக்கும். 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெறும். பாஜக 60 முதல் 65 தொகுதிகளையும், மஜத 20 முதல் 25 தொகுதிகளையும் பிடிக்கும்.”

ஆனால், பாஜகவினர் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்களே? 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக நடக்கும் தேர்தல் என்பதால் இதில் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். வேட்பாளரை முன்னிறுத்தால் மோடியை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறார்களே?

“மோடி அலை எங்கும் வீசவில்லை. அவர்கள் மோடியை முன்வைத்து பிரச்சாரம் செய்வதை பார்க்கும்போது அடுத்த மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார்களா என சந்தேகம் வருகிறது. வாராவாரம் மோடியும் அமித் ஷாவும் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார்கள். காங்கிரஸை வீழ்த்த எல்லா வழிகளிலும் பாஜக சதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி கர்நாடக மக்கள் காங்கிரஸை வெற்றிப்பெற செய்வார்கள்.”

அப்படியென்றால் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார்? முதல்வர் விவகாரத்தில் உங்களுக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் போட்டி இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே?

“முதல்வர் பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன். டி.கே.சிவகுமாரும் இருக்கிறார். ஆனால், யார் அடுத்த முதல்வர் என்பதை தேர்தலுக்குப் பின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும் தீர்மானிப்பார்கள்.”

'தலித் முதல்வர்' முழக்கம் மேலெழுந்து இருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் நாற்காலியின் அமர்த்துவேன் என டி.கே.சிவகுமார் கூறி இருக்கிறார். இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன‌?

“மல்லிகார்ஜுன கார்கே தற்போது கட்சியின் தேசியத் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். தேசிய அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். அவரது பெயரை எதற்காக டி.கே.சிவகுமார் கூறினார் என தெரியவில்லை.”

கடந்த முறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவுக்கு தாவியதால் உங்களின் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த முறையும் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ மாட்டார்கள் என உறுதியாக கூறமுடியாது. போதாக்குறைக்கு பாஜகவில் இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமன் சவதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு சீட் கொடுத்திருக்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு இவர்கள் மீண்டும் பாஜக பக்கம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?

“காங்கிரஸின் கொள்கையில் பிடிமானம் இல்லாவர்களே கட்சி தாவுவார்கள். அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து சீட் தருகிறோம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் கட்சி மாறுபவர்களை யாராலும் தடுக்க முடியாது. கட்சியின் தலைமைக்கும் வாக்க‌ளித்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு கட்சி தாவுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.”

காங்கிரஸுக்காக நீண்ட காலமாக விசுவாசத்தோடு உழைத்தவர்களுக்கு சீட் மறுக்கிறீர்கள். கொள்கை பிடிமானம் இல்லாதவர்களுக்கு சீட் வழங்குகிறீர்கள். கட்சி தாவலை தடுக்க சீட் வழங்கும்போதே வேட்பாளரின் கட்சி விசுவாசம், கொள்கை பிடிமானம், நேர்மை உள்ளிட்டவற்றை பரிசீலிக்கலாமே?

“நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இன்றைய தேர்தல் அரசியல் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சீர்க்கெட்டுப் போய் இருக்கிறது. இங்கு நேர்மை, விசுவாசம், உழைப்பு ஆகியவற்றுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை. ஒரு தொகுதியில் வெற்றிப் பெறுவதற்கு பண பல‌ம், சாதி பலம், ஆள் பலம், கட்சி பலம், தலைவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பாஜக போன்ற பலமான கட்சி எதிரில் இருக்கும்போது, அதனை வெல்லக்கூடிய சக்தி வாய்ந்தவருக்கே சீட் வழங்கி இருக்கிறோம். இப்போது சீட் கிடைக்கப்பெறாதவர்களுக்கு, வேறு வாய்ப்புகளை உருவாக்கி தருவோம்.”

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பாஜக பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் தடை போன்றவற்றை ரத்து செய்யப் போவதாக கூறி இருக்கிறீர்கள். இது சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து, தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் வழக்கமான வாக்குறுதியா?

“நிச்சயமாக இல்லை. இந்துக்களின் வாக்குகளை கவருவதற்காகவே பாஜக ஹிஜாப் தடை, பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம் போன்ற‌வற்றை கொண்டுவந்தது. இதனால் அப்பாவி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னெப்போதைக் காட்டிலும் ம‌த ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. அடிப்படையில் இந்த சட்டங்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை கண்டிப்பாக ரத்து செய்வோம்.”

பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட‌ முஸ்லீம் இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அப்படியென்றால் லிங்காயத்து, ஒக்கலிகா சாதியினருக்கு வழங்கப்பட்ட தலா 2 சதவீதத்தை திரும்ப பெறப்போகிறீர்களா?

“முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்திருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதியின் அடிப்படையில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவோம். அதேவேளையில் லிங்காயத்து, ஒக்கலிகா சாதியினரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம். கர்நாடகாவில் இட ஒதுக்கீட்டின் அளவை 72 சதவீதம் வரை உயர்த்துவோம்.”

கர்நாடகாவில் மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சிவில் உரிமைகள் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என தமிழ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். தமிழர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் வகையில், காங்கிரஸில் எத்தனை தொகுதிகளை வழங்கப்போகிறீர்கள்?

“கர்நாடகாவில் தமிழர்கள் எப்போதும் காங்கிரஸ் பக்கம் தான். கோலார் தங்கவயல் குடியரசுக் கட்சி எம்எல்ஏ சி.எம்.ஆறுமுகம் காங்கிரஸ் தலைவர்களோடு நெருக்கமான இருந்தார். காங்கிரஸில் இருந்த கண்ணன், முனுசாமி ஆகியோர் தொடர்ந்து சாந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்றனர். இப்போதும் காந்தி நகர், சாந்தி நகர், பாரதி நகர், புலிகேசி நகர் என பல தொகுதிகளில் தமிழர்களின் ஆதரவால் தான் காங்கிரஸ் வெற்றிப் பெறுகிறது. தமிழர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும். இந்த தேர்தலில் ஓரிருவருக்கு சீட் வழங்க இருக்கிறோம்.”

கர்நாடகத் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, தமிழ‌கத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவை கோரி இருக்கிறீர்களா?

“அதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் கோரிக்கை விடுத்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுப்பார். விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய வருவதாக கூறியிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.”

உங்களுக்கு காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் இருக்கிறார்கள். பாஜகவும், மஜதவும் உங்களை தோற்கடிக்க பலமான வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறார்கள். இந்த பல்முனை தாக்குதலை வருணா தொகுதியில் எப்படி எதிர்க்கொள்ள போகிறீர்கள்?

“காங்கிரஸில் எனக்கு எதிரிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. தேவகவுடா குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நான் தான் எப்போதும் இலக்கு. அவர்களை மீறி இத்தனை ஆண்டு காலம், நான் அரசியலில் வெற்றிகரமாக இயங்குவதையே அந்த குடும்பத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கு என்னைக் கண்டால் பயம். அதனால் அமைச்சர் சோமண்ணாவை எனக்கு எதிராக நிறுத்தி இருக்கிறது. ஆனால் வருணா மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள்.”

இதுதான் உங்களின் கடைசி தேர்தல் என கடந்த 2013 மற்றும் 2018 தேர்தலின் போதும் கூறினீர்கள். இப்போதும் அதையே கூறுகிறீர்களே?

“நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான ஒற்றை மைய அரசியலை மோடி முன்னெடுக்கிறார். இந்த நேரத்தில் அதனை எதிர்த்து அரசியல் செய்வது அவசியம். இருப்பினும் வயது காரணமாக இந்தத் தேர்தல் தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல். இதற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவேன். அதன் பிறகு எனது மகன் யதீந்திராவும், பேரன் தவன் ராகேஷும் தேர்தலில் போட்டியிடுவார்கள்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x