Published : 28 Sep 2017 10:22 AM
Last Updated : 28 Sep 2017 10:22 AM
இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘இசையின்பம் என்றால் இதுதான்’ எனும் வாசகத்துடன் நண்பர் ஒருவர் காணொலி ஒன்றை அனுப்பியிருந்தார். காணொலியைப் பார்த்த நான் சில நிமிடங்கள் திகைப்பில் உறைந்திருந்தேன். இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றை ‘ஸ்மூல்’ செயலியைப் பயன்படுத்தி (ஒரு பாடகருடன் சேர்ந்து) ஒரு பெண்மணி ‘பாடி’யிருந்தார். தாளக்கட்டு, மெட்டு, சுருதி என்று சங்கீதக் கூறுகள் எதையும் சட்டைசெய்யாமல் தன் பாட்டுக்கு அவர் பாடிய பாட்டைக் கேட்டு கல்பனா அக்காவே (யூடியூப் புகழ்!) கதறியிருப்பார். நான் இளையராஜாவாக இருந்து அந்தப் பெண்மணி பாடிய காணொலியைப் பார்த்திருந்தால் என் பாடலைத் தவறாகப் பாடிப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக, கலவரத்தைத் தூண்டிவிட்டதாக வழக்கே தொடர்ந்திருப்பேன். அப்பேர்ப்பட்ட அதிர்ச்சி!
அதிர்ச்சி விலகாத நிலையில், ஸ்மூலில் தன் பாடலைப் பாட அனுமதி இல்லை என்று இளையராஜா தடை விதித்தார் எனும் செய்தி பேஸ்புக்கில் ஒளிர்ந்தது. வழக்கம்போல் “அப்படியென்றால் பாத்ரூமில் கூட அவர் பாடலைப் பாடக் கூடாதா?” என்று பலர் அறச்சீறத் தொடங்கினார்கள். எனினும் ஸ்மூல் செயலியில் பாட, குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்பதால் அந்தச் செயலி நிறுவனம் இளையராஜா உட்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை கரோகி முறையில் வெளியிட்டுக் கல்லா கட்டுகிறது என்று விஷயமறிந்த சிலர் விளக்கியிருந்தார்கள். மறுநாளே இதே செய்தியை அவரது வழக்கறிஞர் விளக்கமாகத் தெரிவித்துவிட்டார்.
தன் பாடலை மேடையில் பாடக் கூடாது என்று எஸ்பிபிக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் எழுந்த சர்ச்சையின்போதே காப்புரிமை தொடர்பான விரிவான விவாதமும் எழுந்தது. அப்போது சிறிய அளவிலான ‘ஆர்க்கெஸ்ட்ரா’ குழுக்களில் பாடும் பாடகர்களுக்கெல்லாம் இதுபோன்ற தடை இல்லை; பெரிய அளவில் வருமானம் பெறும் நிகழ்ச்சிகள், அவற்றை நடத்தும் நிறுவனங்களிடம்தான் இளையராஜா இப்படிக் கண்டிப்பாக நடந்துகொள்கிறார் என்பதைப் பலவேறு தரப்பினரிடம் பேசியதில் தெரிந்துகொண்டேன். நம்மவர்களைப் பொறுத்தவரை எல்லாமே காற்றைப் போல் இலவசமாகக் கிடைக்க வேண்டும். கிட்டத்தட்ட இப்போதைய சூழல் அப்படித்தான். காசு சேர்த்து காத்திருந்து கேஸட் வாங்கிப் பாட்டு கேட்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு சிங்கிள் முதல் முழு ஆல்பமும் யூடிபிலேயே கிடைக்கிறது. பழைய, புதிய படங்கள் எல்லாம் இணைய வெளியில் முழுமையாகக் கிடக்கின்றன. இணைய ஏழைகளுக்காகப் புதிய படங்களை இலவசமாக வழங்கும் ராபின்ஹூட் ராக்கர்ஸ்களின் காலம் இது. புதிய படங்களை இலவசமாகப் பார்ப்பதில் தயக்கம் காட்டாதவர்கள்தான் கலைஞர்கள் தங்கள் படைப்பு தொடர்பான உரிமைகளை முன்வைக்கும்போது அறச்சீற்றம் காட்டுகிறார்கள். செயலிக்குப் பணம் தந்து பாடுபவர்கள் கூட அதில் ஒரு தொகை சம்பந்தப்பட்ட கலைஞருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய மறுக்கிறார்கள்.
சொல்லப்போனால், எஸ்பிபி தொடர்பான சர்ச்சை சற்று முடிவுற்றிருந்த சமயத்தில்தான் ஸ்மூலில் ‘என் கண்மணி உன் காதலி’ (சிட்டுக்குருவி) பாடலை நான்கு (நல்ல) பாடக, பாடகிகள் பாடி அசத்தியிருந்தனர். இதில் காப்புரிமை பிரச்சினை கிடையாதா என்று குழப்பமாக இருந்தது. சரி நாமும் பாடி வைப்போம் என்று அந்தச் செயலியைத் திறந்து பாடல்களைத் தேர்வுசெய்தால் அது பணம் கேட்டது. கஷ்டப்படுத்துவது என்று முடிவுசெய்தாலும், கழுத (இது குறியீடு அல்ல!) காசு கொடுத்து கஷ்டப்படுத்துவதா என்று விட்டுவிட்டேன்.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT