Published : 18 Apr 2023 07:29 PM
Last Updated : 18 Apr 2023 07:29 PM
புதுக்கோட்டையில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற வீரபாண்டியன் அங்கு டிசம்பர் மாதம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீரபாண்டியனின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று 4 மாத போராட்டத்திற்குப் பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். கை, கால்கள் முடங்கிய நிலையில், வீல் சேரில் வந்த தனது மகனைப் பார்த்து வீரபாண்டியனின் தாயார் அழகி கதறி அழுதக் காட்சி பார்த்தோரை கலங்கடிக்கச் செய்தது.
வெளிநாடுகள், மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் வாழ்வில் இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படாதது இதற்கான முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. முறைசாரா தொழில்களில் மட்டுமின்றி, அரசு சார்ந்த பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும்கூட இந்தச் சட்டங்கள் பாதுகாக்க தவறுவது மேலும் வேதனை அளிப்பதாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் கூறியது: “மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் , ஓர் இடத்தில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அதிகமான பணியாளர்கள் தேவைப்படுகிறது. அப்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஆட்களை அழைத்து வருகிறோம். அவ்வாறு அழைத்து வருவதற்கு, முன்கூட்டியே அரசிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறும்போது, யாருடைய பெயரில் வருகிறார்களோ, அவர்களது பெயரில் ஒரு குறிப்பிட்டத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு அழைத்து வரப்படும் பணியாளர்கள் காணாமல் போனாலோ, வேறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அதற்கான பொறுப்பை, பணியாளர்களை அழைத்து வரும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்க வேண்டும். இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களாக வருபவர்கள், பணி செய்யும் இடத்தில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு சென்று வரவேண்டியுள்ளது என்றால், அதற்கான இருவழி பயணச் செலவுகளை செய்து தர வேண்டும். இவை குறித்துதான் அந்த மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் விரிவாக கூறுகிறது.
ஆனால், இந்தச் சட்டம் தற்போது உள்ளதுபோன்று கொடூரமான புலம்பெயர்தல் நடக்காத காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்காலத்தில் புலம்பெயர்தல் மிகவும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. குறிப்பாக, அனைத்து விதமான பணிகளுக்காகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் வந்து கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் சூழலில், மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் முழுமையாக அமலாகவில்லை.
அரசே விதிமீறுகிறதா? வேடிக்கை என்னவென்றால், ஒரு மாநிலத்தின் அரசு சார்ந்த பணிகளுக்காக அழைத்து வரப்படுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் கூட அந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை. பொதுவாக புலம்பெயர் தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்ந்த பணிகள் என்பது விமான நிலையம் கட்டுமானப் பணிகள், சென்னை ஓமந்தூரார் மாளிகை கட்டுவது, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் என இந்த பணிகள் அனைத்துமே புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுதான் கட்டப்பட்டன.
எனவே, புலம்பெயர் தொழிலாளர் சட்டம் சார்ந்த விவகாரத்தில் அரசே விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக இரண்டு அரசுகளுமே இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாஜக என இரண்டு அரசாங்கங்களுமே இந்த விதிமீறல்களை செய்திருக்கின்றன.
இதற்குக் காரணம் என்னவென்றால், நியோ லிபரல் (Neo Liberal Policy)பாலிசிதான். இந்த கொள்கைதான், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இனவாத அடிப்படையில் அதைப் புறந்தள்ளிவிட்டனர் என்று பார்க்கக்கூடாது.
அணுக வேண்டியது எப்படி? ஜனநாயக சக்திகள் நாடாளுமன்றத்தில் வலுவாக இருந்த காலக்கட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் வலுவிழந்துள்ளது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமலாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமலாக்க நினைப்பவர்களின் எண்ணம்.
எனவே, இதன் அடிப்படையில் ஏற்பட்டிருக்கிற அரசியல் மாற்றங்கள்தான், நாட்டில் உள்ள சட்ட மாற்றங்களுக்கான காரணமாக இருக்கிறது. இந்தச் சட்ட மாற்றங்கள் என்பது ஏதோ திடீரென்று வரவில்லை. சட்ட மாற்றங்கள் அரசியல் மாற்றங்கள் மூலமாக நிர்பந்திக்கப்படுகிறது. அரசியல் மாற்றங்களை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நிர்பந்திக்கிறது. இதன் பாதிப்பாகத்தான் இந்தப் பிரச்சினையை பார்க்க வேண்டும்.
அவ்வாறு அணுகினால்தான், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். இல்லையென்றால், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பரிதாபங்கள் மட்டும்தான் நிகழும். தற்காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது ஒருபகுதியினர் பரிதாபப்படுகின்றனர். இன்னொரு பகுதியினர் கோபப்படுகின்றனர். வேவையில்லாமல் பஞ்சத்தில் இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் கோபமடைகின்றனர். நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள், ஊடகங்கள், தொழிலாளர்கள் அமைப்பில் உள்ளவர்கள், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பிழைத்துவிட்டுத்தான் போகட்டுமே, அவர்களுக்கு நியாயமான ஊதிய கிடைக்கட்டுமே’ என்று பரிதாபப்படுகின்றனர்.
இந்த இரண்டுமே ஆபத்தானது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான பரிதாபமும், கோபமும் இந்த பிரச்சினைக்கு தீர்வைத் தராது. இவை பிரச்சினைகளை வேறொரு கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல உதவுமே தவிர, பயன் தராது. இந்த அடிப்படையில்தான், மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் முழுமையான அளவில் அமல்படுத்தப்படவில்லை.
தொழில்துறையினரின் சுரண்டல்: தொழில்துறைக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களில் ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். ஜேகே டயர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், அசாகி கிளாஸ் இண்டியா போன்ற தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவே உள்ளனர்.
இந்தப் பணிகள் அனைத்தும் அவர்களுடைய கல்வித் தகுதியின் அடிப்படையில், டிப்ளமோ இன்ஜினியரிங், ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளைப் படித்து அதன் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுவாக தொழில்துறை சார்ந்த பணிகளுக்கு பெரும்பாலும் உள்ளூர் தொழிலாளர்களை வைப்பதைவிட வெளியூர் தொழிலாளர்களை பணியமர்த்தினால், தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு தாமதமாகும். அவர்கள் ஒன்றிணைவதற்கே தாமதமாகும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மூலதனம் பெரும் என்ற கண்ணோட்டம் நிலவுகிறது.
இதனால்தான், இந்த தொழில்துறையில் தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல், வட இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு போன்ற இடங்களில் இருந்து வரக்கூடியவர்களை ஓரளவு நிரந்தரப் பணியாளர்களாக வைக்கின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கிராஜூவிட்டி, பிஎஃப், இதெல்லாம் பிடித்தம் செய்யும் நிலையில் கொண்டு வருகின்றனர். ஆனால், உள்நாட்டிற்குள் புலம்பெயரும் தொழிலாளர்களின் நிலை அவ்வாறு இருப்பது இல்லை.
தொழில்துறைகளில் பணியாற்றும் படித்தவிட்டு புலம்பெயர் தொழிலாளர்களாக வரும் ஆட்டோமொபைல் இன்ஜினியர்களாகவும், ஹெச்.ஆராகவும், வேறுசில உயர் பொறுப்புகளிலும் வருபவர்களைப் பார்த்து இங்கிருப்பவர்களுக்கு பச்சாதாபம் போன்றவை இருப்பது இல்லை. அதுகுறித்து கவலையும்படுவது இல்லை. காரணம், அவர்கள் செட்டிலாகிவிடுகின்றனர். அவர்கள் குறித்து எந்த கேள்வியும் இல்லை. இதுபோன்ற பதவிகளில் இருப்பவர்களுக்கு போதுமான ஊதியம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு விடுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சுரண்டல் எங்கு நடக்கிறது என்றால், ஒப்பந்த அடிப்படையில் வரும் தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் நடக்கின்றன. அதுவும் மிகப்பெரிய அளவில் நடக்கின்றன. பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. அந்தவகையில் இது கொடுமையானது என்பதைத்தான் நாங்கள் கூறிவருகிறோம்.
இதுபோன்ற உரிமைகள் எதுவும் கிடைக்கப் பெறாத இத்தகைய தொழிலாளர்கள்தான், முதலாளிகளின் சொத்துக் குவிப்புக்கு காரணமாக இருக்கின்றனர். அரசியல் பொருளாதார அடிப்படையில் பார்த்தால், யார் அதிகமாக சுரண்டலுக்கு ஆளாகின்றனரோ, அவர்கள்தான் சொத்துக் குவிப்புக்கும் காரணமாக இருக்கின்றனர்.
ஊழியர்களாகவும், ஒப்பந்த ஊழியர்களாகவும், வேறு பலவகை ஊழியர்களாகவும் இருக்கும் இவர்கள் பல்வேறு வகைகளில் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். தொழில்துறையில் புலம்பெயர் தொழிலாளர்கள், லிப்ட் ஆபரேட்டர் தொடங்கி பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, சில நேரங்களில் உற்பத்தி தொழில் வரை ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நேரிட்டால்..? தகவல் பெறும் உரிமைச் சட்டம் அல்லது வேறு ஏதாவது கணக்கெடுப்பில், தொழிற்சாலை பாதுகாப்பு ஆணையகரகம் உள்ளிட்டவகைள் மூலம் நிறைய விபத்துகள் குறித்த தகவல்களை பெற முடியும். இந்த விபத்துக்கான காரணங்கள் அனைத்துமே என்ன சொல்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளர்கள் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் இந்த அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது என்ற தகவல் தெரியவருகிறது.
தொழிற்சாலைகளில் ஒரு மாதத்திற்கு வெளியில் தெரிந்து 5 ஆயிரம் விபத்துகள் நடைபெறுகின்றன. வெளியில் தெரியாமல் இன்னும் பல ஆயிரம் விபத்துகள் நடக்கின்றன. இந்த விவரங்கள் குறித்தெல்லாம் யாரும் கேட்பதற்கே ஆள் கிடையாது. விபத்தில் இறக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்களை சத்தமின்றி ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை கொடுத்து விமானம் மூலம் அனுப்பிவிடுகின்றனர்.
அதே உள்ளூர் தொழிலாளிகளாக இருந்தால், இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த ஊரே வந்து கலவரமாகும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு புலம்பெயரும் தொழிலாளர்களை பணியமர்த்திக் கொள்வது உதவிகரமாக உள்ளது. தொழில்துறையில் அசாம், பெங்கால், ஒடிசா, ஜார்க்கண்ட் இவர்கள்தான் மிக அதீதமான சுரண்டலுக்கு ஆளாகின்ற மாநில மக்கள்.
இவை இல்லாமல், ராஜஸ்தான், பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் இந்த மாநிலங்களில் இருந்தும் தொழில்துறைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர். பிஹாரில் இருந்து வரக்கூடியவர்கள் பெரும்பாலும் ரப்பர், பிளாஸ்டிக் சார்ந்த தொழிற்சாலைகளில் அதிகமானவர்கள் பணியாற்றுவர். இதற்கு காரணம், இவர்கள் முன்கூட்டியே இங்கு வந்திருப்பார்கள், அதன்பிறகு அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் இங்கு அழைத்து வருவார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு என்று குறிப்பிட்ட ஏஜென்ட்கள் உள்ளனர். தொழிலாளர்கள் வரும் ஊரைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து யாருக்கு வேலை செய்கிறார்கள் என்றால், ஒரு வடஇந்திய பெரு முதலாளிக்கு பணியாற்றுகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான பிரச்சினைகள் குறித்து தொழில்துறை சார்ந்த நிறுவனங்களில் குரல் எழுப்ப அவர்களுக்கு தெம்பும் இல்லை, திராணியும் இல்லை. அதுதான் அவர்களுடைய பலவீனமாக உள்ளது. அந்த பலவீனத்தைத்தான் முதலாளிகள் பெரிய அளவில் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பிரச்சினைகள் அதிகமாகும்போது நாங்கள் தேடிச்சென்று குரல் கொடுப்போம்.
சிஐடியூ சார்பில் கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்திருக்கிறோம். ஊதிய பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக தொழிலாளர்கள் போராடும்போது நாங்கள் முன்னின்று அவர்களுக்கு ஆதரவும்,பாதுகாப்பும் கொடுத்திருக்கிறோம். அந்த பாதுகாப்பு கொடுக்கிற நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எங்களுடன் இருப்பார்கள். அதன்பிறகு அந்த தொழிலாளர்களை அழைத்து தொழிற்சாலை நிர்வாகம் மிரட்டிவிடும்.
அவர்களை மிரட்டுவது வெகு சுலபமானது. எனவே, ஏதாவது ஒருவகையில் மிரட்டி அத்தொழிலாளர்களை அடிபணிய வைத்துவிடுவர். எனவே, புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருங்கிணைவது என்பது அத்தனை எளிதாக இருப்பது இல்லை. மிகுந்த சிரமமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த தொழிலாளர்கள் ஒரு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்கள் வரைதான் இங்கு பணியாற்றுகின்றனர். அதன்பிறகு ஒரு 3 மாதம் எங்காவது காணாமல் போய்விடுகின்றனர். அதாவது அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்குச் சென்றால் திரும்பி வர ஒரு மாத காலம் ஆகிறது. மற்ற விஷயங்களுக்காகச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மாத காலங்கள் ஆகிறது. குறிப்பாக, புலம்பெயரும் தொழிலாளர்களின் சொந்த ஊர்களில் விவசாயம் சாரந்த வேலைகளுக்கான ஆட்கள் தேவை இருக்கின்றபோது, அங்குசென்று ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ அங்கு சென்று அந்தப் பணிகளை செய்துவிட்டு மறுபடியும் இங்கு வந்துவிடுகின்றனர்.
புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரில் நடைபெறும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது தங்களது சொந்த ஊரில் இருந்து அவர்கள் தங்களை பிரித்துப் பார்க்க விரும்பாததைக் காட்டுகிறது. அவர்களை ஒருங்கிணைக்க முடியாததற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இதுவும் இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்? - உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் யூனியனில் இணைவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். இன்றைக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஹாஸ்டலிலும், குடிசைகளிலும், மிகவும் கேவலமான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இவற்றை அரசு தலையிட்டு சுகாதாரமான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இடைத்தரகர்கள் கூடாது என்று வேளாண் திருத்தச் சட்டங்கள் எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற மனிதர்களைக் கடத்தி வர இடைத்தரகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது மிகப் பெரிய ஆபத்தானது. அப்போது அரசு ஏன் நேரடி வேலைவாய்ப்பு வழங்குவது இல்லை. சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளருடன் பணியாளர்களுக்கு ஏன் நேரடி தொடர்பு இருப்பது இல்லை. இவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற விசயங்களுக்கு எல்லாம் இடைத்தரகர் கூடாது என்று சொல்லும் அரசு, இந்த விஷயத்தில் இடைத்தரகர் கூடாது என்று சொல்வது இல்லை. எனவே, அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கொடுக்கப்படுகிறதா? அல்லது அதற்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை நாம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா அல்லது லண்டன் செல்கிறோம். அங்குசென்று 10 அல்லது 12 மணி நேரம் வேலை செய்தால், அங்கிருப்பவர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள்? அந்த நாட்டின் சட்டங்கள் இதை அனுமதிக்குமா? அனுமதிக்காது. அதுபோலத்தான் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும்.
அரசுதான் இதை செய்ய வேண்டும். புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை கொடுக்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்த்தால் ஓடி கொடுக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்திருக்கும் சட்டத் திருத்தங்கள் காரணமாக மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது.
இப்போது logistic arivalance (தளவாடங்கள் ) பெரிய அளவில் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பெரிய முதலாளி, ஒரு ஒன்றரை லட்சம் தொழிலாளிகளை Man power Agency மூலமாக பணியமர்த்துகிறார். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு 15 கோடி ரூபாய் ரொம்ப சாதாரணமாக கிடைக்கும். காரணம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1000 ரூபாய் மிச்சம் கிடைக்கிறது. இதுபோன்ற நடைமுறைகள்தான் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்கும் நடைமுறைகளை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
/ வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் தொடரும்... /
முந்தைய அத்தியாயம்: வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 5 - கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT