Published : 14 Apr 2023 06:18 AM
Last Updated : 14 Apr 2023 06:18 AM
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் - ஏப்ரல் 14 - அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வோர் ஆண்டும் தன்னெழுச்சியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம், அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள், வியக்கவைக்கும் மேதைமை, உலக வட்டமேசை மாநாடுகளில் சிறப்புமிக்கப் பங்களிப்பு, நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள், உலகின் நெடிய அரசமைப்பைத் தலைமையேற்று உருவாக்குவதில் சீரிய பணி, பெளத்த மறுமலர்ச்சிக்கு நல்கிய வரலாற்றுப் பங்களிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக அம்பேத்கர் போற்றப்படுகிறார்.
ஆனால், அவர் தமது பேராற்றலையும் நாற்பது ஆண்டுகாலப் பொது வாழ்வையும் எத்தகைய லட்சிய நோக்கத்துக்காக அர்ப்பணித்தார் என்பது குறித்த விவாதங்கள் குறைவு. அவரைப் போற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர, அவருடைய லட்சிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தயாராக இல்லை.
தடை நீக்கும் புரட்சி: மகாராஷ்டிரத்தில் உள்ள மஹாட் குளத்தில் சாதி இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கும் நீரருந்தும் உரிமை இருந்தது; ஆனால் இந்துக்கள் என்று கருதப்பட்ட தலித் மக்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
1927இல் அக்குளத்தில் நீரருந்துவதற்காகத் தம்முடைய முதல் போராட்டத்தை அம்பேத்கர் தொடங்கினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு (1789) சமத்துவத்தை மலரச் செய்த பிரான்ஸ் சுய நிர்ணய அவையுடன் மஹாட் போராட்டத்தை ஒப்பிட்ட அம்பேத்கர், தமது லட்சிய நோக்கத்தைப் பின்வருமாறு அறிவித்தார்:
“நம்முடைய இயக்கம் நமது குறைபாடுகளை மட்டுமே களைவதற்கான இயக்கம் அல்ல; மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாக்கும் நோக்கத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்தச் சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும்.
அத்துடன், வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை - அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம் - சாதி உருவாக்கிய செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது இயக்கம் ஒற்றுமைக்கும் ஆற்றலுக்குமான, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான இயக்கமாகும்.”
நுட்பமான சிக்கல்: ஒடுக்கப்பட்ட மக்கள் காலந்தோறும் எதிர்கொள்ளும் இழிவுகளுக்கும் அவமானங்களுக்கும் காரணம், ஒவ்வொருவரின் (ஒடுக்குகிற/ ஒடுக்கப்படுகிற) ஆழ்மனதிலும் விதைக்கப்பட்டிருக்கும் சாதி என்ற கண்ணோட்டமே ஆகும். தமக்கு மேலே ஒரு வகுப்பும் கீழே ஒரு வகுப்பும் இருப்பதாக ஒருசேர எண்ணும் - ஆதிக்க/அடிமை - உளவியலுக்கு அவர்களுடைய மதத்தின் மீதான ஆழமான நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.
அதனால்தான் தங்களுடைய அரசமைப்பு சமத்துவத்தை வலியுறுத்தினாலும் சமத்துவமின்மையை வலியுறுத்தும் சாதியைத் தங்களுடைய மதம் அங்கீகரித்திருப்பதால், அவர்கள் அவ்வெண்ணத்தைக் கைவிட இன்றுவரை தயாராக இல்லை. உலகில் எங்குமே இல்லாத இந்நுட்பமான சிக்கலைத் தீர்ப்பதற்குத்தான் அம்பேத்கர் தம் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டார்.
அவர் முன்னெடுத்த சமூக, அரசியல், பண்பாட்டுப் போராட்டங்கள் என அனைத்துமே சட்டத்துக்கு உள்பட்ட, ஜனநாயகத்தன்மை கொண்டவையாகவே இருந்தன. அறப்போராட்டத்தின் வழி தீர்வு காண்பதில் இறுதிவரை அவர் உறுதியாக இருந்தார். சாதி ஒழிப்பு குறித்த இடையறாத விழிப்புணர்வைத் தம் எழுத்து, உரைகளின் மூலம் தளராமல் ஏற்படுத்தினார். நாட்டு மக்களின் சிந்தனையைப் பண்படுத்தி, அவர்களிடையே சமத்துவத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்திலேயே அரசமைப்பையும் அவர் வடிவமைத்தார்.
சமூக ஆவணம்: பொதுவாக, அரசமைப்பை விதிகளின் தொகுப்பாக மட்டுமே நாம் பார்க்கப் பழகியிருக்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்நாட்டு மக்களை நெறிப்படுத்தக்கூடிய ஓர் அரசமைப்பு இல்லாத காலகட்டத்தில் பிறப்பு, இனம், மொழி, மத, சாதி பேதமின்றி ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து, அரசையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்தக்கூடிய மாபெரும் அரசு ஆவணத்தை அம்பேத்கர் தலைமையேற்று உருவாக்கினார்.
இந்திய அரசமைப்பின் வரலாற்றை எழுதிய குறிப்பிடத்தகுந்த அமெரிக்க வரலாற்றாசிரியர் கிரான்வில் ஆஸ்டின் (Granville Austin), இதன் நோக்கம் குறித்து அற்புதமாக விளக்குகிறார்: “இந்திய அரசமைப்பு முதலும் முதன்மையுமான ஒரு சமூக ஆவணமாகும். இதன் பெரும்பாலான பிரிவுகள், சமூகப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தை நேரடியாக முன்னெடுக்கும் வகையிலோ அல்லது இப்புரட்சி வெற்றி பெறுவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் மூலம் - அப்புரட்சிக்கு வித்திடும் வகையிலோ உள்ளன.”
அரசமைப்பைவிட அரசமைப்பு நெறிமுறையைக் (Constitutional morality) கடைப்பிடித்து, அதன்படி நடப்பது அதைவிட மிகவும் முக்கியமானது என்றார் அம்பேத்கர். ‘கற்பி’ என்கிற அம்பேத்கரின் கோட்பாட்டு முழக்கமும் அதைத்தான் வழிமொழிகிறது. முக்கால் நூற்றாண்டு காலச் சுதந்திர இந்தியா சட்டப்படி தீண்டாமையை முற்றாக ஒழித்துவிட்டது; ஆனால் இன்றளவும் அது நடைமுறையில் இருப்பதற்குக் காரணம், ஒரு சமூகமாக அரசமைப்பின் நெறிமுறையை நாம் காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான். அது மட்டுமல்ல, ஒருபுறம் அம்பேத்கரின் லட்சிய நோக்கமான சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் அரசமைப்பின் நெறிமுறையைப் பேணாமல், மறுபுறம் அம்பேத்கரை மட்டும் புகழ்ந்துகொண்டிருப்பது மிகப் பெரிய முரண்பாடு ஆகும்.
சமூகத்தின் பிழை: இந்நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் தலித் மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுகாறும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முனைந்தவர்கள் இம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு - பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதிலும் அம்மக்களை மேம்படுத்துவதிலுமே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர்.
ஆனால், அம்பேத்கரின் சமூக ஆய்வுகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. தலித் மக்களிடம் பிரச்சினை இருப்பதாக அவர் கருதவில்லை; மாறாக, மனித சமூகத்தின் ஒரு பிரிவினரை மட்டும் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கும் பொதுச் சமூகத்திடமே கோளாறு இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்த அம்பேத்கர், பொதுச் சமூகத்தைச் சீர்திருத்தி, தீண்டாமையையும் அதற்குக் காரணமான சாதியையும் ஒழிக்கவே செயல்திட்டங்களை வகுத்தார்.
பிறப்பின் அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்ட பாகுபாட்டையே வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள மக்களிடம் அது ஒரு வகையான மனப்பிறழ்வு என்று சுட்டிக்காட்டி, சாதிகளாலான பொதுச் சமூகத்தை ஜனநாயகப்படுத்திய அம்பேத்கரை, தலித் மக்களுக்கான தலைவராக மட்டுமே சித்தரிப்பது எவ்வளவு பிழையானது?
அண்ணலுக்குச் செய்யும் மாண்பு: பழைமைவாதச் சிந்தனையில் மூழ்கியுள்ள கோடிக்கணக்கான மக்களைத் தாம் எழுதிய நூல்களால் மட்டுமே மாற்றிவிட இயலாது என்றுணர்ந்த அம்பேத்கர், அரசமைப்பை உருவாக்கும் தலைமைப் பொறுப்பை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அதன் மூலம் சமூகப் புரட்சிக்கு வித்திட்டார். சாதியை முற்றாக அழித்தொழிப்பதற்கு இதுவரை எவரும் கண்டிராத, சட்டத்துக்கு உள்பட்ட தீர்வைக் கண்டறிந்த அம்பேத்கர், பத்து லட்சம் மக்களுடன் இணைந்து, பெளத்தத்தை ஏற்று, அதை உலகுக்கு நிரூபித்தும் காட்டினார்.
அம்பேத்கர் வித்திட்ட இச்சமூகப் புரட்சியைப் புரிந்துகொள்ளாத சமூகம், இன்றளவும் சாதி என்ற கண்ணோட்டம் ஏதோ சான்றிதழ்களில் நிலைபெற்றிருப்பதாக எண்ணி, புதுப்புது ஆய்வுகளில் ஈடுபட்டு - அதை ஒழிக்க முடியாமல் - சாதியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.
சமூக ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவே தம் வாழ்நாளை எரித்துக்கொண்ட ஒரு புரட்சியாளரை நாம் ஓர் அரசியல்வாதியாக, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்காகப் பாடுபட்டவராகச் சித்தரிப்பதை மாபெரும் பிழை என்றுணர்ந்து, அதை நேர் செய்வதுதான் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலுக்கு நாம் செய்யும் மாண்பாக இருக்க முடியும்!
ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்தநாள்
- புனித பாண்டியன் | ஆசிரியர் - ‘தலித் முரசு’ தொடர்புக்கு: dalitmurasu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment