Published : 31 Jul 2014 08:00 AM
Last Updated : 31 Jul 2014 08:00 AM
கும்பகோணம் பள்ளிக் கொலைத் தீக்குத் தன் செல்லப் பிள்ளையைப் பறிகொடுத்தவர்களில் சூரியமேரியும் ஒருவர். 94 குழந்தைகளின் இறப்புக்கு நீதி கேட்டு, 10 ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் தீர்ப்பைக் கேட்டதும் துவண்டுபோயினர். பலர் அங்கேயே வாய்விட்டுக் கதறி அழுதனர். அவர்களில் ஒருவரான சூரியமேரி தீர்ப்புகுறித்து தன் கருத்து களைத் தெரிவித்தார்.
“எங்க வீட்டுக்காரு டெய்லரு. என்னோட மக பேரு கார்த்திகா. பெரிய வசதி வாய்ப்பெல்லாம் இல்லை. ஒருநாள் இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டன்ட் சரஸ்வதி எங்க பகுதிக்கு வேன்ல வந்து, பள்ளிக்கூடம் போற வயசுல புள்ளைங்க இருக்குறவங்ககிட்டேலாம் ‘எங்க ஸ்கூல்ல எல்லா வசதியும் இருக்கு; நாங்க நல்லா சொல்லித் தருவோம்'னு சொல்லி, சேர்க்கச் சொன்னாங்க.
நான் சின்ன வயசுல இங்கிலீஷ் மீடியம் படிச்சேன். ஆனா, வசதியில்லாததால, பாதியிலேயே நிறுத்திட்டேன். அந்த ஏக்கம் எங்கிட்ட இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனாலதான், எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையிலேயும் நம்ம புள்ளையாட்டும் இங்கிலீஷ் மீடியத்துல படிக் கட்டும்னு நெனைச்சு இந்த ஸ்கூல்ல சேர்த்தேன்.
தினமும் நானே புள்ளையை நடந்து கூட்டிட்டுப் போயி, ஸ்கூல்ல விட்டுட்டு, காத்திருந்து, பாதுகாப்பா அழைச்சுக்கிட்டு வருவேன். அப்படிப் பார்த்துப் பார்த்து வளர்ந்த என் புள்ளைய இவங்க தீக்குக் கொடுத்து, கொன்னுட்டாங்க. எப்ப என் புள்ள போச்சோ, அப்பவே எங்க எல்லா சந்தோஷமும் போச்சு. இந்தப் பத்து வருஷமா நாங்க காத்திருந்தது எல்லாம் இன்னொரு புள்ளைக்கு இந்த மாதிரி நெலமை வரக் கூடாதுங்குற அளவுக்குத் தீர்ப்பு வரணும்கிற ஒரே நெனைப்புதான். இனி, தப்பு செய்யக்கூடாதுங்கிற பயத்தை இந்தத் தீர்ப்பு கொடுக்கணும்கிற எண்ணம்தான். ஆனா, அந்த நம்பிக்கையெல்லாம் இன்னைக்குக் கரைஞ்சிப்போச்சு.
பதினோரு பேரை விடுவிச்சு இருக்காங்க. ஒருத்தர் நீங்கலா அஞ்சு வருஷம் ரெண்டு வருஷம்லாம் தீர்ப்பு கொடுத்துருக்காங்க. செஞ்ச தப்பு சாதாரணமானதாய்யா? சாதாரண தப்பா இது?
அய்யோ… என் புள்ள ஞாபகம் வருதே… பாத்துப் பாத்து வளத்த புள்ளயைக் கரிக்கட்டையா தூக்கிக் கொடுத்தேனே… பத்து புள்ள பெத்து வளத்தாலும், அந்த ஒத்த புள்ளைக்கு ஈடாகு மாய்யா? ஆனா, விட மாட்டோம்யா, விட மாட்டோம். எங்க புள்ளைக்கு நியாயம் கிடைக்காம விடவே மாட்டோம்!”
-கதிரவன்,
தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT