Last Updated : 13 Sep, 2017 09:07 AM

 

Published : 13 Sep 2017 09:07 AM
Last Updated : 13 Sep 2017 09:07 AM

தூக்கில் தொங்கிய சமூகநீதி

ருத்துவப் படிப்பு லட்சியம் கானல் நீரானதால், 1,200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த ஒரு தலித் மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அனைவருக்கும் பொதுவான சமூகநீதியை, 'இடஒதுக்கீடு' என்பதை, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூகப் பின்புலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அணுகியதும், படித்தவர்கள் மத்தியிலும் விரவிக் காணப்படும் இடஒதுக்கீடு குறித்த கொச்சையான புரிதலின் அவலமும் இதற்குக் காரணம். ‘மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லையெனில் வேறு படிப்புகளே இல்லையா? ஒரு வாய்ப்பு போனால் இன்னும் இரண்டு வாய்ப்புகள் இருக்கிறதே?’ என்றெல்லாம் ‘அறிவார்ந்த’ சமூகம் வினவுவது, அவர்கள் எந்த அளவுக்கு அடித்தட்டு மக்களின் சமூகநீதி உணர்வுகளைப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது.

கைவிட்டுப்போன நீதி

நீதிக்கட்சித் தலைவர்களாலும், பெரியாரின் தலைமையிலான திராவிட இயக்கமும் போராடிப் பெற்றுத்தந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் பயனால் பொருளாதாரத்தில் வளர்ந்த இடைநிலைச் சமூகங்கள்தான், இன்றைக்கு தரம், திறமை, தகுதி என்னும் வெற்றுவாதத்தை முன்வைப்பதை ஆதரிக்கிறது என்பது வருந்தத் தக்கது. சமூகநீதி என்பது சமத்துவத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய பெருந்திட்டம். அதில் இடஒதுக்கீடுதான் சமநிலைச் சமுதாயத்தின் மையக்கரு. இந்தியாவைப் பொறுத்தவரையில் அதுதான் பல நேரங்களில் சமத்துவத்தை நோக்கிப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாளும் கேடயமுமாக இருந்துவருகிறது.

போட்டித் தேர்வுகள்தான் திறமை பரிசோதிக்கும் சோதனைச்சாலை என்றும், பல்வேறு முறைகேடுகளுக்கும் தலையீடுகளுக்கும் தீர்வு அதுதான் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில் 1983-வரை மருத்துவம் (பொது, பல், கால்நடை), பொறியியல், வேளாண்மை மற்றும் பிற படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படாமல்தான் சேர்க்கை நடைபெற்றுவந்தது. அதுவரை தொழிற்கல்வியில் தனியார் துறை பங்களிப்பு அனுமதிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அனைத்து கிராமங்களிலும் பெரிதும் சாதி-வர்க்க பேதமின்றி அரசுப் பள்ளிகளில்தான் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெருக்கடிநிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதும், பிறகு 1977-ல் தமிழகத்தில் நிகழ்ந்த ஆட்சிமாற்றமும் கல்வியைக் கவலைக்குள்ளாக்கியது. 1978-லிருந்து ஆசிரியர்கள் முன்வைத்த அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு போராட்டம், புதிய கல்விக் கொள்கையில் மாற்றம், பி.யூ.சியை +2ஆகத் தரம் குறைக்கும் திட்டத்தை எதிர்த்தும், சுயநிதி கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதிக்கும் திட்டத்தை எதிர்த்தும் போராடிய கோரிக்கைகளை ஜனநாயக முறையில் அணுகாமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்கியதுதான் தமிழகத்தின் கல்வித் தரம் தொடர்பான சர்ச்சையின் தொடக்கப்புள்ளி. 1984-ல் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மேல்நிலைக் கல்வித் திட்டம் என்பது மருத்துவம், பொறியியல், வேளாண்மை படிப்புகளுக்கு மாணவர்களை பிரத்யேகமாக உருவாக்கும் திட்டமானது. 1978 முதல் 1988 வரை ஆசிரியர் சமூகம், கல்வியை அரசே நடத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியது. அதற்கு மாறாக தமிழகத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அரசே அனுமதித்ததால் ஆங்கில வழிக் கல்வியின் மோகமும் தீவிரமாகப் பரவியது. இது படிப்படியாக 4,200 பள்ளிகளாகப் பல்கிப் பெருகி இன்று கிராமந்தோறும் ஒரு மெட்ரிக் பள்ளி என்ற நிலை ஏற்பட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்குப் பெரும் சவால் விடுத்திருக்கிறது. ஒரு வகையில், இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் தமிழகம்தான் முன்னோடி. ஏனென்றால், மத்திய அரசுக்கு முன் 1978 கல்வியில் தனியார் பங்களிப்பை அனுமதித்த முதல் மாநிலம் தமிழகம்தான்.

நீட் தேர்வின் பின்னணி என்ன?

சமூக நீதியை வழங்கியதிலும், அதற்கு எதிரான செயல்பாடுகளைச் செய்ததிலும் தமிழகம்தான் முன்னோடி. 1980-களிலிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் சதுரங்க விளையாட்டில், 1990-ல் மத்தியில் அமைந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்காகத் தனது ஆட்சியை இழந்தது 'யாரால்' என்று எத்தனை பேருக்கு தெரியும்.

மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வின் அவசியத்துக்குள் இருக்கும் நூதனமான அரசியல் சித்தாந்தத்தை மிகக் கூர்மையாக உற்றுநோக்கிப் பார்த்தால் மருத்துவம், பொறியியல் மற்றும் இதர உயர் படிப்புகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட்டுவைத்தால் மாநிலப் பாடத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் என்பது மண்டல் கமிஷனை எதிர்த்தவர்களுக்குப் புரிகிறது. ஏற்கெனவே, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான மாநில சுயாட்சியின் முதுகெலும்பை முறித்து வைத்துள்ளது மத்திய அரசு. இன்றைய அரசியல் கருத்தியலாளர்கள், கல்வியாளார்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைப் புரிதலில் அணுகாமல் நுழைவுத் தேர்வை வெறும் பாடத்திட்டமாகவும், கேள்வித்தாள், வினா-விடை, மாதிரித் தேர்வு சார்ந்ததாகப் பார்க்கிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர அடிப்படையான +1 பாடத்தை தவிர்த்துவிட்டு +2 பாடத்தை நடத்தும் போக்கினால் கல்வித் தரம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறதே தவிர இடஒதுக்கீட்டினால் அல்ல. 2006-ல் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் பாலைவனமாயின. அந்த சுமை மீண்டும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீதே திணிக்கப்பட்டது.

அசாதாரணச் சூழல்

தமிழகத்தில் மீண்டும் சமூகநீதியை மீட்டெடுக்கும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும்கூட சமூகநீதியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு எதிராகக் கொள்கை வகுக்கப்படும் நிலை இருப்பதை என்னவென்று சொல்வது? இதனால், மீண்டும் மீண்டும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகப் பொறுப்புகளில் பங்களிக்க முயலும் விளிம்புநிலை மக்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதிலும் வெளியேற்றுவதிலும் கல்வி மூலம் ஒரு அசாதாரணச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சிதான் மனஅழுத்தம், விரக்தி, தற்கொலை என்று வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையின் விளிம்புக்கு வளரிளம் தலைமுறையைத் தள்ளியிருக்கிறது இந்த ‘நீட்’ தேர்வு. இந்த விவகாரத்தில் சாதி, மத அடையாளங்கள், பாகுபாடுகளைக் கடந்த ஒரு நடுத்தர வர்க்க அரசியல் வாய் மூடிப் பேசுகிறது. ஒரே ஆண்டில் ‘நீட்’ தேர்வினால் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவு மாண்டுபோயிற்று. இனி வரும் காலங்களில் என்னென்ன நிகழுமோ?

-பெ.இராமஜெயம், உதவிப் பேராசிரியர்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: akilram11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x