Published : 18 Sep 2017 10:10 AM
Last Updated : 18 Sep 2017 10:10 AM
இ
ந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார். பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள் என்று பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் பதிவாகாமல் ஒரு நாள்கூட நாளிதழ்கள் வெளியாவதில்லை. பதிவாகாத குற்றங்கள் தனி. இந்நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மனநிலையைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தருகிறார் பிரிட்டனின் ஆங்க்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் மதுமிதா பாண்டே.
2012-ல் டெல்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா‘ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் எழுப்பியது. ஜி-20 நாடுகளிலேயே பெண்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத மிக மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பிடித்தது ஓர் அவலம். அந்தத் தருணத்தில், “ஆண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?” எனும் கேள்வி தனக்குள் எழுந்ததாகச் சொல்கிறார் மதுமிதா. டெல்லியில் பிறந்து வளர்ந்த மதுமிதாவின் மனதில் அந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுக்க, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் பேச முடிவெடுத்தார். பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்துவரும் 100-க்கும் அதிகமான கைதிகளைச் சந்தித்துப் பேட்டியெடுத்திருக்கிறார். டெல்லியின் திஹார் சிறையில் பலரைச் சந்தித்தார்.
“இந்த ஆய்வின் தொடக்கத்தில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களை அரக்கர்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அவர்களிடம் பேசியபோது, அவர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்று தெரிந்தது. ஆனால், அவர்கள் இப்படி ஆனதற்கு மிக முக்கியக் காரணம், அவர்கள் வளர்க்கப்பட்ட விதமும், அவர்களது மனோபாவமும்தான்” என்கிறார் மதுமிதா. ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவில், பல பெண்கள் தங்கள் கணவர் பெயரைக்கூட நேரடியாகச் சொல்வதில்லை என்பதிலிருந்து, இந்தியச் சமூகத்தில் ஆண்கள் தங்களை எந்த அளவுக்கு ஆதிக்க நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று சொல்லும் மதுமிதா, “பல ஆண்கள் தாங்கள் செய்தது ஒரு குற்றம் என்றே கருதவில்லை” என்று சொல்லி அதிரவைக்கிறார். பலர் தங்களது செயலை நியாயப்படுத்த முயன்றதுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழியைப் போடுவதைப் பார்த்து அதிர்ந்துவிட்டாராம்.
அதில் ஒருவர் சொன்னதுதான் தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். 49 வயதான அந்த நபர், ஐந்து வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவர். “அந்தப் பெண்ணின் (சிறுமியைத்தான் அப்படிச் சொல்கிறார்) வாழ்க்கையை நாசமாக்கிவிட்டேன். இனி, அவளை யார் திருமணம் செய்துகொள்வார்கள். நான் விடுதலையானதும் அவளைத் திருமணம் செய்துகொள்கிறேன்” என்றாராம் அந்தக் குற்றவாளி. அந்தச் சிறுமி வசிக்கும் பகுதியையும் அந்த நபர் குறிப்பிட்டிருக்கிறார். அதை வைத்து, அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அந்த நபர் சொன்ன விஷயங்களைச் சொல்லி எச்சரித்திருக்கிறார் மதுமிதா. அந்த நபர் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் இருப்பதுகூட, சிறுமியின் தாய்க்குத் தெரியவில்லையாம். இப்படிப் பல அதிர்ச்சிகள் நிறைந்த ஆய்வேட்டை விரைவில் பிரசுரம் செய்யவிருக்கிறார் மதுமிதா. “வழக்கம்போல் பலர் என்னை விமர்சிப்பார்கள். இதோ பெண்ணியவாதிகள் பட்டியலில் இன்னொருத்தி என்று கிண்டலடிப்பார்கள். நான் கவலைப்படவில்லை” என்கிறார் துணிச்சலாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT