Published : 27 Sep 2017 09:40 AM
Last Updated : 27 Sep 2017 09:40 AM
ஆ
ர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இல்லாமல் அரசியல் இல்லை. எனவேதான் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி, எந்தவொரு ஜனநாயக அரசும் போராட்டங்களைத் தடுக்கவோ ஒடுக்கவோ முனைவதில்லை. அது ஜனநாயக விரோதம், மக்களாட்சிக்குக் களங்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு குண்டர் தடுப்புச் சட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டுபவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் என்று அச்சுறுத்தும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் முதல்வர்.
போராட்டம் நடத்துவது என்பது அரசியல் செயல்பாடு என்ற நிலை மாறி, பிணையில் வெளிவர முடியாத கொடுங்குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொது இடத்தில் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தாலும்கூட குண்டர் சட்டம் பாயலாம். அதேபோல அனுமதி இல்லாமல் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்தாலும் குண்டர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எழுதுவதும் பேசுவதும் அரசியல் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையாக இருக்கும் நாட்டில் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புபவரை அவரது விளக்கத்தைக் கேட்காமலேயே குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யலாம் என்பது எவ்வளவு பெரிய அவலம்?
1923-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் இது. குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுடைய தரப்பை எடுத்துச்சொல்லும் வாய்ப்பை அளிக்காமலும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையிலும் சிறையிலேயே தடுத்துவைக்கும் நோக்கத்தில் முதன்முதலில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் விட்டுச் சென்ற இந்த அடக்குமுறைச் சட்டம் காலம்தோறும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு மாநிலங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
உரிமைகளை மறுத்த சட்டத் திருத்தம்
தமிழகத்தில் இச்சட்டம் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1982-ல் இயற்றப்பட்டது. இப்போது அதன் தலைப்பு "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்" என்று முடிவின்றி நீண்டுகொண்டே இருக்கிறது.
2014- ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், குற்ற நடத்தையருக்குப் பதிலாக முதல் தடவையாகக் குற்றம் செய்யப்பட்டவரையும் கைதுசெய்ய வழிசெய்தது. இந்தத் திருத்தத்தை அப்போதே மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனாலும், சட்ட மன்றத்தில் இருந்த பெரும்பான்மையைப் பயன்படுத்திச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதற்கு முன்பு, 2011-ல் உயர் நீதிமன்றமும்கூட முதல் தடவை குற்றச்செயலில் ஈடுபட்டவர்களையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய அனுமதி வழங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவே இந்தச் சட்டத் திருத்தத்தை நோக்கி இட்டுச் சென்றது என்ற விமர்சனங்களும் உண்டு.
குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதில் இருந்த நடைமுறைகளை இந்தத் திருத்தம் எளிதாக்கிவிட்டது. அதன்விளைவாக, ஆண்டுதோறும் குண்டர்கள் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருக்கிறது. 2011-ல் 1,364 வழக்குகளும் 2012-ல் 1,896 வழக்குகளும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2015-ல் 2,885 ஆகவும் 2016-ல் 2,701 ஆகவும் உயர்ந்துள்ளது. குண்டர் சட்டம் அடிப்படையிலேயே மனித உரிமைகளுக்கு எதிரான சட்டம். குற்றவாளிகள் மட்டுமில்லாமல் போராட்டக்காரர்களும் அதற்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
குண்டர் சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய காவல் துறை முடிவெடுத்த பிறகு அவர்மீது வழக்குகள் புனைந்து உருவாக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை நிலை. பெரும்பாலும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு சில வாரங்களில் இத்தகைய வழக்குகள் அவசரம் அவசரமாக ஜோடிக்கப்படுகின்றன. எனவே, குண்டர் சட்டம் குறித்த காவல் துறையின் வழக்குகளைப் பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பொய் வழக்குகளை எளிதாக இனம்கண்டுவிட முடியும். ஆனால், மாநகரப் பகுதிகளில் இப்படிப் பரிசீலிக்கும் அதிகாரத்தையும் காவல் துறையே தன் கையில் வைத்திருக்கிறது.
மாதம்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 30 பேரைக் கைதுசெய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்படுகிறது. ஆட்சியர்கள் அதிகபட்சம் பத்து மனுக்களுக்கு அனுமதியை வழங்குகிறார்கள். இப்படி நிர்வாகத் துறையின் சின்னச் சின்ன முட்டுக்கட்டைகளையும் தாண்டி குண்டர் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஓராண்டில் 3,000-ஐ நெருங்கிவிடுகிறது. ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று மாநில அரசே அழுத்தம் கொடுக்கும்போது அதை மாவட்ட ஆட்சியர்களோ மாநகரக் காவல்துறை ஆணையர்களோ மறுக்கப்போவதில்லை.
இவ்விஷயத்தில் நீதித் துறையின் தலையீடும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்பதுதான் ஆறுதலான ஓர் அம்சம். குண்டர் சட்டம் போடப்பட்டது சரியான முடிவா என்று முடிவு செய்வதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரைக் கழகம் செயல்பட்டுவருகிறது. குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பொதுவாக இக்கழகத்திடம் முறையிடுவதுதான் வழக்கம். ஆனால், இப்போது பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே உயர் நீதிமன்றத்தை நாட ஆரம்பித்திருக்கிறார்கள். நீதிமன்றமும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை அளித்துவருகிறது.
யார் குண்டர்?
குண்டர் என்பவர் தனியாகவோ அல்லது ஒரு குழுவில் சேர்ந்தோ அல்லது அந்தக் குழுவுக்குத் தலைமையேற்றோ தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் அல்லது முயற்சிப்பவர் அல்லது தூண்டிவிடுபவர் என்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் வரையறை. சுருக்கமாக, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்று கொள்ளலாம். ஆனால், குண்டர் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் குண்டர்களாகவே கருதும் நிலைதான் தொடர்கிறது. திருட்டு விசிடி விற்பவரால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், அவரால் பொது அமைதிக்கு எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. அவரையும் குண்டராகவே சட்டம் கணக்கில் கொள்கிறது. ஒன்றோடொன்று எந்தத் தொடர்பும் இல்லாத குற்றங்களையெல்லாம் ஒரே கணக் கில் வைத்துப் பார்க்கும் இந்தச் சட்டம் நீதிமுறைக்கே எதிரானது. குண்டர் சட்டத்தைத் தவறாகவும் அச்சுறுத்தும் நோக்கத்திலும் பயன்படுத்துவதால்தான் சில சமயங்களில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளும்கூட தப்பித்துவிடுகிறார்கள். நடந்த குற்றங்களை உரிய சட்டப்பிரிவுகளில் பதிவுசெய்து சாட்சியங்களைத் திரட்டி, வழக்கை பலப்படுத்திக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதான் காவல் துறையின் கடமையே தவிர, குண்டர் சட்டத்தின்கீழ் பதிவு செய்வதல்ல. காவல் துறை தனது பொறுப்பிலிருந்து தவறுவதால்தான் குழந்தைகளை வல்லுறவுக்கு ஆளாக்குபவர்களும்கூட எளிதில் தப்பிவிட முடிகிறது. குண்டர் சட்டம் இப்படித் தப்பும் தவறுமாய் பயன்படுத்தப்படுவதைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில்தான் பழனிசாமி அரசால் போராட்டக்காரர்களும் குண்டர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்துத் துண்டுப் பிரசுரம் கொடுத்த இதழியல் மாணவி வளர்மதியும், இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முயன்ற திருமுருகன் காந்தியும் அரசின் கொள்கைகைளை எதிர்ப்பவர்கள். அவர்கள்மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்குகள் அரசியல் போராட்டங்களை நடத்தியதற்காகவே பதியப்பட்டுள்ளன. மாறாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எதுவும் அவர்களின்மீது இல்லை. அரசின் கொள்கைகளை விமர்சிப்பவரையும் போதைப்பொருள் கடத்துபவரையும் ஒரே மாதிரி நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். அமைதி முறையில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறை கைதுசெய்கிறது. ஆனால், மெரினா போராட்டத்தின் முடிவில் போலீஸார் நிகழ்த்திய தாக்குதல்கள், குடிசைகளுக்குத் தீவைப்பு போன்ற அத்துமீறல்களுக்கு எவ்வளவோ வீடியோ ஆதாரம் இருந்தும் அவற்றுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனும்போது இந்த அரசின் மீதும் அதன் கருவியாகச் செயல்படும் காவல் துறை மீதும் மிகுந்த அச்சம் ஏற்படுகிறது. நாம் இருப்பது ஜனநாயக நாட்டில்தானா என்ற சந்தேகம் மேலும் வலுப்படுகிறது.
வளர்மதியும் திருமுருகன் காந்தியும் உயர் நீதிமன்ற உத்தரவாலேயே குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகளிலிருந்து குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. போராட்டங்கள் என்பவை மக்கள் உணர்வின் பிரதிபலிப்புகள். அவற்றை அலட்சியம் செய்யும் எந்தவொரு அரசும் நீடித்ததில்லை என்பதுதான் வரலாறு.
-செல்வ புவியரசன்,தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT