Published : 26 Sep 2017 10:20 AM
Last Updated : 26 Sep 2017 10:20 AM
ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே மந்தமடையத் தொடங்கிய அரசுப் பணிகள் கடந்த ஓராண்டில் முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் நேரடியாகத் தொடர்புள்ள முக்கியமான துறைகளின் நிலையே பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கின்றன. தினந்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்து, ஆட்சி தொய்வின்றி நடப்பதுபோல தோன்றினாலும் அரசு நிர்வாகத்தின் நிலை மிகுந்த கவலை அளிக்கிறது. துறைவாரியான அலசல்களில் முதலாவதாக ஊரக வளர்ச்சித் துறை...
தமிழகத்திலேயே அதிகமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் துறையாக முதலிடத்திலிருக்கிறது ஊரக வளர்ச்சித் துறை. அரசு தரும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அவ்வளவு திட்டங்கள்! ஆனால், அந்தத் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா?
சில மாதங்களுக்கு முன்பு 1,200 சிறு பாசன ஏரிகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. கிடைத்தது வாய்ப்பு என்று ஆயிரக்கணக்கான லாரிகளில் மண்ணை அள்ளிவிட்டார்கள். ஏரிகள் இப்போது திறந்த வெளி கிணறுகளாகிவிட்டன. இதனால், இரண்டு பாதிப்புகள். ஏரியில் தண்ணீர் வந்த பின்பு பழைய நினைவில் ஏரிக்குள் இறங்கினால் குழிகளில் மூழ்கி இறக்க நேரிடும். பெரும் குழிகளில் தண்ணீர் நிறைவதால் ஏரியின் கரையருகில் இருக்கும் மதகுகள்வரை தண்ணீர் ஏறாது. பாசனத்துக்கு தண்ணீர் எடுக்க முடியாது. விவசாயத்துக்காகத் தமிழகம் முழுவதும் 10,000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. 250 தனி நபர்களுக்குக் கிணறு வெட்டிக் கொடுத்திருக்கிறார்கள். 385 மண்புழு உரப் பண்ணைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் 65 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை வெட்டியிருக்கிறார்கள் என்று நீள்கிறது அரசு விவரங்கள். ஆனால், பண்ணைக் குட்டை வெட்ட தங்களது விவசாய நிலங்களைக் கொடுத்த விவசாயிகள் அரைகுறைப் பணிகளால் குட்டைக்காகக் கொடுத்த விவசாய நிலப் பரப்பையும் இழந்துத் தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
2015-16-ல் சாலையோரங்களில் 2,500 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 2016-17-ல் 16,959 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதரப் பரப்புகளில் 2014-15-ல் 25,70,000 மரங்களும், 2015-16-ல் 35,63,000 மரங்களும், 2016-17-ல் 68,00,000 மரங்களும் நடப்பட்டிருக்கின்றன. அதாவது, கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மரங்கள். உண்மையிலேயே இந்தத் திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் அடர் வனத்துக்குள்தான் வாழ வேண்டியிருக்கும்.
அடுத்ததாக இளைஞர்களுக்குத் திறன்மேம்பாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சி. 2012-13-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 29 பேருக்குப் பயிற்சி அளித்து, 31 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியிருக்கிறார்கள். இதற்கான பயிற்சி மையங்களை அங்கீகரிக்கும் பொறுப்பு ஒரு தனியார் கல்வி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது. பயிற்சி பெறும் ஒவ்வொரு இளைஞருக்கும் மத்திய, மாநில அரசுகள் சுமார் ரூ.20,000 வரை செலவு செய்கின்றன. ஆனால், மையங்களின் உட்கட்டமைப்பு தொடங்கிப் பயிற்சி வரை அனைத்தும் கண் துடைப்புக்காக நடத்துவதாகப் புகார் தெரிவிக்கிறார்கள். தலை கணக்கு எழுதி ஊழல் செய்வதாகத் தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவன அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்துள்ளன.
தமிழத்தின் ஊரகப் பகுதிகளில் 8,269 வறுமை ஒழிப்புச் சங்கங்கள் உள்ளன. இவை தவிர, உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படும் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் 4,174 வறுமை ஒழிப்புச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கும் தலா ரூ.15 லட்சம் ஒதுக்கப்படுகிறது. குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது, கால்நடைகள் வாங்கித் தருவது, பெட்டிக்கடை, இஸ்திரி கடை வைத்துத் தருவது போன்றவை மூலமாக கிராமங்களில் வறுமையை ஒழிக்க வேண்டும். 2005-ல் தொடங்கிய இந்தத் திட்டம் 2017-உடன் நிறைவடைகிறது. ஆனால், நமது கிராமங்களில் வறுமை ஒழிந்திருக்கிறதா என்ன?
தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் 2016-17 வரை 5,738 கிராமங்களைத் திறந்தவெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவித்துள்ளார்கள். இதுவரை 27,00,000 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 15,00,000 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாநகராட்சிகளும் 100 % திறந்தவெளியில் மலம் கழிக்காத மாவட்டங்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். தவிர, 28 ஆயிரத்து 31 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும், 6,916 அரசுப் பள்ளிகளிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு அவற்றை பராமரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
சுமார் 12,000 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திவிட்டோம் என்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் குப்பைகளை மேலாண்மை செய்ய 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் 66,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 12, 796 மகளிர் சுகாதார வளாகங்களும், 1,199 ஆண்கள் சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. எல்லாம் சரி, மேற்கண்ட கட்டுமானங்கள் அத்தனையுமே இருக்கின்றன என்பதையோ, அவை தரமாக இருக்கின்றன என்பதையோ நேரில் அழைத்துச் சென்று காட்ட சம்பந்தப்பட்டவர்கள் தயாரா? உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தெருவிளக்கு தொடங்கி குடிநீர் விநியோகம் வரை அனைத்து அடிப்படைத் தேவைகளுமே முடங்கிக்கிடக்கின்றன. அதேசமயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் ஒதுக்கப்பட்ட ஒப்படைப்பு வருவாய், மாநில நிதிக் குழுவின் நிதி ஆகியவையும் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. ஆக, ஏட்டளவில் சிறப்பாகவும் செயல்பாட்டளவில் முடங்கியும் கிடக்கிறது ஊரக வளர்ச்சித் துறை!
- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT