Published : 29 Sep 2017 12:03 PM
Last Updated : 29 Sep 2017 12:03 PM
க
டந்த ஓராண்டாகத் தமிழகத்தின் பல்வேறு துறைகள் முடங்கிக் கிடந்தாலும், இருளில் தோன்றிய வெளிச்சக் கீற்றாகத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் வெளிச்சம் தோன்றியது. வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உதயச்சந்திரன். பாடத்திட்டத்தைத் தரம் உயர்த்துதல், பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் ரேங்க் முறை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் என பள்ளிக் கல்வித் துறையில் பெரும் புரட்சியே நிகழவிருந்தது. ஆனால், திடீரென உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கு மேலாக முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார். ‘பணியிட மாறுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஊழல் செய்ய முடியவில்லை; கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மக்களிடம் செல்வாக்கு பெறுவதை சிலர் விரும்பவில்லை’ என்று பல்வேறு ஊகங்கள் கூறப்பட்டன. இதன் பிறகு கல்வித் துறையிலில் எந்தவொரு ஆரோக்கியமான அசைவுகளும் நிகழவில்லை.
சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,373 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி-யில் இருப்பது போலவே ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் வருடாந்திர தேர்வு கால அட்டவணையைத் தயார் செய்து, 40 நாட்களுக்குள் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிடக் காரணமாக இருந்தார் உதயச்சந்திரன். இதன் அடிப்படையில் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. ஆனால், உதயச்சந்திரன் விழாவில் இல்லை. புதிய பாடத் திட்டத் தயாரிப்புப் பணிகள் அனைத்தையும் உதயச்சந்திரனே கவனித்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் உதயச்சந்திரன் இல்லை. தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிலிருந்து படிப்படியாகப் புதியப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் பின்னடைவே.
தவிர, உதயச்சந்திரன் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அவர்களிடம் நீண்ட ஆலோசனை நடத்தி பிரச்சினைகளைத் தொகுத்தார். ஆனால், தற்போது புதிய அதிகாரி மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களின் பிரதிநிதி என்கிற முறையில் ஊதியக் குழுவிலும் உதயச்சந்திரன் உறுப்பினராக இருக்கிறார். அரசு ஆசிரியர்கள் போராட்டங்கள் வலுக்கும் சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.
கடந்த ஓராண்டில் கல்வித் துறை செயல்பாடுகள் தொடர்பாகக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வைக்கும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. “தமிழகத்தின் கல்வித் தரத்தில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அரசுக் கல்வி அமைப்பின் கட்டமைப்புகள்தான் நாளுக்கு நாள் பலவீனமடைந்துவருகின்றன. 1930 தொடங்கி 1970-கள் வரையிலும்கூட தொடக்கப் பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டுக்குப் பிரத்யேக ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால், கடந்த ஒராண்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் நியமனம் மட்டுமே நடந்திருக்கிறது. பள்ளிக் காவலாளி, துப்புரவுப் பணியாளர், அலுவலகப் பணியாளர் பணியிடங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. பின் தங்கிய கிராமப் பகுதிகளில் கழிப்பறைகளைக்கூட ஆசிரியர்களே சுத்தம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதுதவிர, அலுவலக எழுத்து வேலை, பள்ளிக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்தும் ஆசிரியர் தலையில் விழுந்திருக்கிறது. இவை எல்லாம் பெற்றோர்களைத் தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளுகின்றன” என்கிறார்.
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும் கருத்துகளும் முக்கியமானவை. “புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படுவதாகச் சொல்லப்படும் சூழலில் பாடத்திட்டங்கள் பள்ளி நேரத்திலேயே கற்பிக்க முடிவதாக இருக்க வேண்டும். தனி வகுப்புகளோ, தனிப் படிப்போ தேவைப்படக் கூடாது. இதுகுறித்து ஆலோசனைகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஆசிரியர் நியமனமும் இட மாறுதல்களும் குறிப்பிட்ட காலத்தில் நடப்பதில்லை. பள்ளிகளைத் திறந்த பின்பும் மாறுதல்கள் நடக்கின்றன. பள்ளிகளை ஆய்வு செய்வதைக் கல்வித் துறை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆண்டாய்வுகள் கூட கண்துடைப்புக்காக நடத்தப்படுகின்றன. வாரியக் கூட்டங்களும் முறையாக நடக்கவில்லை.
சமச்சீர் கல்விக் குழு மற்றும் பாடச்சுமை குறைப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் இதுவரை கண்டுக்கொள்ளப்படவே இல்லை. சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரும் ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் வாரியங்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநகரம் ஆகியவை அப்புறப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் கல்வித் துறைக்குத் தேவையற்ற சுமைகளே. பள்ளிகளின் பெயர்களிலும் அந்த அடையாளங்கள் தொடர்வது அபத்தம். ஆசிரியர் குறை தீர்க்க அமைக்கப்பட்ட நான்கு நிலைக் குழுக்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை” என்கிறார்.
கல்வி என்பது ஒரு மாநிலத்தின் அடிப்படைக் கட்டுமானம் மட்டுமல்ல, அறிவுக் கட்டுமானமும் கூட. அந்தக் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமைந்தும்கூட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சுய ஆதாயங்களுக்காக அதை உதறித்தள்ளுவது பொறுப்பின்மையின் உச்சம். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்த நீட் தேர்வு விவகாரத்தைப் பழனிசாமி அரசு எத்தனை மெத்தனமாகக் கையாண்டது என்பதையும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT