Published : 14 Mar 2023 09:26 PM
Last Updated : 14 Mar 2023 09:26 PM

வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 3 - திருப்பூரும் நாங்களும்: அனுபவம் பகிரும் வெளி மாநிலத்தவர்கள்

பூணம், ரேஷ்மா, கோபால்

தமிழகத்தில் வாழும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து பகிரப்பட்ட வீடியோக்களும், சர்ச்சைக்குரிய கருத்துகளும் நாட்டின் தலைப்புச் செய்தியாகியது. வட மாநில தொழிலாளர்கள் நலன் குறித்தும் அவர்களது பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் ஊடகங்கள் வழியே அறிவித்தனர். பிஹார் மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த அம்மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை தெரிந்து கொண்டார். பின்னர், சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவிய அந்த வீடியோக்கள் பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம், தமிழகத்தில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள் சார்ந்து நீண்ட நாட்களாக எழுந்து வந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றும் கூறலாம். குறிப்பாக, தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எல்லாத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வீடியோ சர்ச்சைக்குப் பின் தமிழக அரசு, வெளிமாநில தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மார்ச் 7-ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு https:/labour.tn.gov.in/ism என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டது. இந்த தளத்தில் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் விவரங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுரண்டப்படும் தொழிலாளர்கள்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டிற்குள் புலம்பெயரும் தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த மாநிலம் மற்றும் பணியாற்றும் மாநிலங்கள் என இரண்டு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் 27 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும், 14 சதவீதம் ஜவுளி சார்ந்த தொழில்களும், 11 சதவீதம் பேர் கட்டுமானத் துறையிலும் பணிபுரிவதாக கூறப்படுகிறது. 2016 தமிழக அரசு கணக்கெடுப்பின்படி, இவர்களில் பெரும்பாலானவர்கள் திறன்சாரா பணியாளர்கள் என்றும், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, பிஹார் மற்றும் ஜார்க்கண்டில் குறைவான ஊதியத்தில் பணியாற்றியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டிற்குள் புலம்பெயரும் தொழிலாளர்கள் பலரும் நகரங்களில் கிடைக்கும் திறன்சாரா தொழில்களில்தான் அதிகமாக பணியாற்றுகின்றனர். இத்தகைய தொழில்களில் அவர்கள் ஈடுபடுவதுதான், அவர்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைந்துவிடுகிறது. இது அவர்களை இக்கட்டான விளிம்பு நிலைக்கு தள்ளுகிறது. இதனால், அவர்கள் மிக எளிதாக தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல் சார்ந்த அமைப்புகளால் சுரண்டப்படுவதற்கு வழிவகுக்கிறது.

1990-களில் தமிழகத்தில் தொழில்மயமாதல், நகரமயமாதல் அதிகரிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. அந்த நேரத்தில் கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவிலும், ஆந்திராவிலிருந்து குறைவான எண்ணிக்கையிலும் வருகை தந்தனர்.

திருப்பூரின் முக்கியத்துவம்: தமிழகத்தைப் பொறுத்தவரை, பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களே கூட தங்களது மாவட்டத்தில் இருந்து வேலைக்காக செல்லும் மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் இருந்து வருகிறது. சிறிதும் பெரிதுமாக அந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் லட்சக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கும் மாவட்டங்களில் திருப்பூருக்கு முக்கிய இடமுண்டு.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் அதிகம் வசிக்கும், பணியாற்றும் மாவட்டம் என்பதால், அம்மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக உருவாக்கப்படும் சிறு பிரச்சினை மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் அத்தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதை உணர்ந்து அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது.

நம்பிக்கையுடன் பெருங்கனவுகளைச் சுமந்துவரும் தொழிலாளர்களின் சொர்க்கபுரியாகத்தான் திருப்பூர் இன்றுவரை இருந்து வருகிறது. அம்மாவட்டம் முழுவதும் பரவியிருக்கும் கார்மெண்ட்ஸ் மற்றும் பின்னலாடைத் தொழில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பணியாற்றி வரும் தனியார் தொண்டு நிறுவனம் 'விழுதுகள்'. இந்நிறுவனத்தின் தொடர் முயற்சிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு தொழிலாளர் நீதிமன்றத்தைக் கொண்டு வந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குநர் எம்.தங்கவேல் கூறியது: “திருப்பூரில் ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

கார்மெண்ட்ஸ் மற்றும் பின்னலாடைத் தொழில் மட்டுமின்றி கட்டுமானத் தொழில்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக தங்குமிட பிரச்சினைதான் இருந்து வருகிறது. காரணம், மொழி தெரியாத வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவ்வளவு சுலபமாக குடியிருப்புகள் கிடைப்பது இல்லை. குடும்பத்துடன் வருவோருக்குக் கூட வீடுகள் கிடைத்துவிடும். பேச்சிலராக வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் தங்குமிடம் கிடைப்பது இல்லை. பெரிய பெரிய நிறுவனங்கள், மில்கள் என்றால் அவர்களே விடுதிகள் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்து விடுவர்.

எம்.தங்கவேல்

குடும்பத்துடன் வருபவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது வட மாநில திருவிழாக்களின்போது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவர். பொதுவாக, இவர்களில் 21 வயது முதல் கட்டிட வேலைகளுக்குச் செல்கின்றனர். பனியன் கம்பெனிகளுக்கு 18, 19 மற்றும் 20 வயதுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல், 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர்களும் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

தொழிலாளர் நீதிமன்றத்தின் பங்களிப்பு: பணியிடங்களில் இந்தத் தொழிலாளர்கள் சந்திக்கின்ற மிக முக்கிய பிரச்சினை இஎஸ்ஐ, பிஎஃப் உரிய முறையில் பிடித்தம் செய்யப்படுவது இல்லை. ஒருசில நிறுவனங்கள் இவர்களின் சம்பளங்களில் இருந்து இவற்றைப் பிடித்தம் செய்தாலும், அவற்றை உரிய அலுவலகங்களில் முறையாக செலுத்துவது இல்லை. இதனால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக திருப்பூரில் தொழிலாளர் நீதிமன்றம் இல்லை.

தொழிலாளர் பிரச்சினை என்றால், கோவைக்குத்தான் சென்று வர வேண்டியிருந்தது. இது தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் புலம்பெயர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பெரும் தடையாக இருந்து வந்தது. எனவே, எங்களது அமைப்பின் மூலம் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம், திருப்பூரில் தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மனு கொடுத்தோம்.
இதற்கான தொடர் பணிகளை மேற்கொண்டு வந்தோம். இதன் விளைவாக, கடந்த 2022-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, உள்ளூர் தொழிலாளர்களும், பிற மாநில, மாவட்டத் தொழிலாளர்களும் பல்வேறு வகைகளில் பயனைடந்து வருகிறார்கள். தொழிலாளர் நீதிமன்றத்தின் வருகையால், அவர்களது பிரச்சினைகளின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. தொழிலாளர் நீதிமன்றம் திருப்பூருக்கு வர காரணமாக இருந்து மாவட்ட முதன்மை நீதிபதிக்கும், தமிழக அரசுக்கு எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

அரசுப் பள்ளியில்... பிஹாரில் இருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்ந்து வரும் பூணம் கூறியதாவது: "நான் பூணம். பிஹார் மாநிலம் முசாபஃர்பூரைச் சேர்ந்தவர். பிஹாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு, திருப்பூருக்கு வந்து 13 ஆண்டுகளாகிவிட்டன. அவினாசி பகுதியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆரம்பத்தில் இங்கு வந்தபோது, மொழி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், தற்போது அப்படியான சூழ்நிலை இல்லை.

இந்த ஊருக்கு வந்த புதிதில் கார்மெண்ட்ஸ் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். ஷிப்ஃட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. பேக்கிங், அயர்னிங், செக்கிங் என பலதரப்பட்ட வேலைகள் உண்டு. வேலைக்கு தகுந்த கூலி வழங்கப்படுகிறது. பேக்கிங்கைப் பொறுத்தவரை, அதில் உள்ள டேக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்து அதற்கு ஒரு பீஸுக்கு இத்தனை ரூபாய் என்ற அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. நான் இங்கு வந்த புதிதைவிட தற்போது வேலை குறைவாகத்தான் கிடைக்கிறது.

பூணம்

இப்போது என் கணவர் ஒரு ஃபேன்சி ஸ்டோர் கடை வைத்துவிட்டார். அதனை கவனித்துக் கொள்கிறேன். முன்பு போல இப்போது முழு நேரம் வேலைக்கு செல்வதில்லை. மதியத்துக்குப் பிறகு 11 மணி ஷிப்ட்டில் வேலைக்கு சென்று வருகிறேன். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் 7-ம் வகுப்பும், இளையவள் 5-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

ஆரம்பத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தோம். இப்போது அரசுப் பள்ளிக்கு மாற்றிவிட்டோம். அரசுப் பள்ளியிலேயே ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. பிரச்சினையே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இங்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் இங்கு இருந்து பழகிவிட்டதால், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்று அவர் கூறினார்.

சமூகப் பணியில் ரேஷ்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து தனது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வரும் ரேஷ்மா கூறியது: "2003-ல் திருப்பூர் வந்தேன். 20 ஆண்டுகளாகிவிட்டது. எனது சொந்த ஊர் உத்தரப் பிரதேசம் என்றாலும், நான் பிறப்பதற்கு முன்பாகவே எனது அப்பா அம்மா எல்லாம் வேலை தேடி அசாம் சென்றனர். அங்குதான் நான் பிறந்தது, படித்தது எல்லாம். எங்களது அண்ணன் மட்டும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

எங்களது பெற்றோர் இறப்பைத் தொடர்ந்து நானும் திருப்பூருக்கு வந்துவிட்டேன். சொந்த ஊரில் இருந்து இவ்வளவு தொலைவு வந்து, இங்கு பேசும் மொழி தெரியாத காரணத்தால் ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. எங்கள் அண்ணன் டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவர் மூலமாக நான் வந்த புதிதில் ஸ்வெட்டர் கம்பெனியில் ஷிப்ஃட்க்கு 30 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த சமயத்தில் டெய்லர் வேலைக்கு ஆட்கள் தேவை அதிகமாக இருந்தது.

இதனால், எனது அண்ணன் ஒரு டெய்லர் பயிற்சிப் பள்ளியில் பணம் செலுத்தி சேர்த்துவிட்டார். நானும் டெய்லர் வேலையைக் கற்றுக்கொண்டேன். பின்னர், டெய்லராக ஒரு கம்பெனியில் சேர்ந்து முதன்முதலில் 1600 ரூபாய் சம்பளம் வாங்கினேன். என் வாழ்நாளில் அந்த நாளை மறக்க மாட்டேன். 1600 சம்பளம் வாங்கியது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், அசாமில் இருந்த எனது பெரிய அக்கா இறந்துவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள்.

ரேஷ்மா

அசாம் சென்று, எங்களது அக்கா கணவரையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு திரும்பி வந்தோம். அப்போது எங்களோடு வந்து கொண்டிருந்த எங்களது அக்கா கணவர் காணாமல் போய்விட்டார். நாங்களும் பல இடங்களில் தேடிப் பார்த்தோம். இதுவரை அவர் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துவிட்டு நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். அக்கா குழந்தைகள் மூவரும் இங்குதான் படித்தனர். 12 மற்றும் 10ம் வகுப்பு வரை படித்த மூவரும் தற்போது இங்குள்ள கம்பெனியின் விடுதியில் தங்கித்தான் வேலை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே எங்கள் அண்ணணுக்கும், அதன்பின்னர் எனக்கும் திருமணம் ஆனது. எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களும் இங்குதான் படித்து வருகின்றனர். எங்களது அண்ணனும் ஒரு பேன்சி ஸ்டோர் கடை வைத்துவிட்டார். நான் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் ஒரு தொண்டு நிறுவனத்தில் சமூகப் பணியாளராக வேலை செய்து வருகிறேன். எங்களைப் போன்ற வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்னுடைய பணி.
இஎஸ்ஐ, பிஎஃப் மூலம் தொழிலாளர்கள் அடையும் பயன்கள், அவர்களது குடும்பத்தினருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இவைத் தவிர எனக்கு தமிழ், இந்தி, போஜ்புரி, அசாமி, பிஹாரி உள்ளிட்ட மொழிகளும் தெரிவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் என்னைத்தான் அழைத்துச் செல்வார்கள். எங்களைப் பொறுத்தவரை இங்குள்ள தமிழ் மக்களும், தொழிலாளர்களும் நன்றாக பேசி பழகக் கூடியவர்கள்" என்று அவர் கூறினார்.

‘எந்தப் பிரச்சினையும் இல்லை’: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கோபால் கூறியது: "நான் திருப்பூருக்கு வந்து 5 ஆண்டுகளாகிவிட்டது. ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். திருப்பூரில் கார்மெண்ட்ஸில்தான் வேலை செய்துவருகிறேன். எங்களுக்கு இங்கிருப்பவர்களுடன் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. நன்றாகத்தான் இருந்து வருகிறோம்.

வார விடுமுறை தவிர்த்து, மற்ற நாட்களில் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தால் நாளைக்கு ரூ.320 வீதம் சம்பளம் வாங்குவேன். எக்ஸ்ட்ரா டைம் வேலை பார்த்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வரும். சாப்பாடு, வாடகை எல்லாம் போக மாதம் ரூ.4000 முதல் ரூ.5000 வரை கையில் நிற்கும்.

நான் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் ரொம்ப ரொம்ப குறைவுதான். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். வாடகைதான் கட்டுப்படியாகவில்லை. சம்பளத்துக்கு தகுந்த செலவு வந்துவிடுகிறது.

கோபால்

கரோனா சமயத்தில்தான் ரொம்ப சிரமமாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த விழுதுகள் உள்ளிட்ட அமைப்புகள் எங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவினர். இங்கு நான் சந்தித்த பிரச்சினையென்றால், அது கரோனா ஊரடங்கு சமயத்தில் வேலை இல்லாத சமயத்தில் சந்தித்த பிரச்சினைகள் தானே தவிர வேறெதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

| வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 2 - இவர்களில் பலருக்கும் இந்தியே தெரியாது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x