Published : 27 Sep 2017 09:36 AM
Last Updated : 27 Sep 2017 09:36 AM
போ
ராட்டங்களைக் கலவரங்களாக மாற்றுவதும், கலவரங்களின்போது பொதுமக்கள், ஊடகவியலாளர்களைக் குறிவைப்பதும் இப்போது அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலவரங்களைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயலும் அரசியல் கட்சிகளின் பங்கு இதில் பிரதானம் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். சமீபத்திய உதாரணம் திரிபுராவில் தொலைக்காட்சி நிருபர் சந்தனு பவுமிக் கொல்லப்பட்ட சம்பவம்.
பிற்போக்குவாத, பிரிவினைவாதக் கருத்துக்களை எதிர்த்து எழுதுபவர்களும், காட்சிப்படுத்துபவர்களும் திட்டமிட்டு அகற்றப்படுகின்றனர் என்பதையே கர்நாடகாவில் கவுரி லங்கேஷ் படுகொலையும், திரிபுராவில் சந்தனு பவுமிக் படுகொலையும் தெரிவிக்கின்றன. தனிநாடு கோரிவரும் பழங்குடிப் பிரிவான ‘இண்டிஜெனஸ் பீப்ப்ள்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் திரிபுரா’ (ஐபிஎஃப்டி) அமைப்பின் வன்முறைச் செயல்களை தொடர்ந்து பதிவு செய்து அம்பலப்படுத்தி வந்துள்ள சந்தனு பவுமிக் தற்போது பிரிவினைவாதிகளின் அடுத்த ‘இரை’யாக ஆகிப்போனார். 27 வயதே ஆன சந்தனு இன்னும் திருமணமாகாதவர். ‘தின் ராத்’ தொலைக்காட்சி சேனலில் நிருபராகப் பணியாற்றிவந்தார்.
செப்டெம்பர் 19 அன்று திரிபுரா மாநிலத்தின் மண்டாய் பகுதியில், ஐ.பி.எஃப்.டி. ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அந்தச் சம்பவத்தைப் பதிவு செய்யச் சென்றிருந்த சந்தனு பவுமிக் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலிருந்து வேறிடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஐ.பி.எஃப்.டி.அமைப்புக்கும் திரிபுரா கணமுக்தி பரிஷத் என்ற திரிபுரா பழங்குடிகளின் முன்னோடி அமைப்புக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் இடையே சிக்கிக் காயமுற்ற சந்தனு, பின்னர் கொல்லப்பட்டிருக்கவும் கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
முதலில் சந்தனு காலில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தபோது, அருகில் கணமுக்தி அமைப்பின் இளைஞர்கள் அங்கு பதுங்கியிருப்பதைப் பார்த்த ஐ.பி.எஃப்.டி. இளைஞர்கள் அவர்களைத் தாக்க வந்தபோது, கணமுக்தி அமைப்பினர் தப்பிச் சென்றுவிட, தனியாக மாட்டிக் கொண்ட சந்தனுவை தூக்கிச் சென்று வெட்டிக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இந்தப் படுகொலையை ஆய்வு செய்துவரும் புலனாய்வுத் துறையினர் எழுப்பியுள்ளனர்.
இந்த நேரத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று திரிபுரா தலைநகர் அகர்தலாவில் சென்று இறங்கியபோது தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து ஊர்வலம்சென்ற ஐ.பி.எஃப்.டி. அமைப்பினர் உள்ளூர் மக்களைத் தாக்கி நகரத்தை கலவர பூமியாக ஆக்க முயன்ற சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. இந்த அமைப்பு பாஜகவின் முகமூடி என்பது திரிபுரா முழுவதும் அறிந்த ரகசியம். பழங்குடிகளின் சுயாட்சி கவுன்சில் தேர்தலின்போது இது மேலும் வெட்டவெளிச்சமானது.
வரும் பிப்ரவரியில் திரிபுரா மாநிலச் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள திரிணமூல் சட்டமன்ற உறுப்பினர்களை ‘மிட்டாய்’ காட்டி கூண்டோடு தன்வசம் இழுத்திருக்கும் பாஜக, இப்போது மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளில் ஒரு பிரிவினரை வன்முறைக் களத்தில் இறக்கியுள்ளது என்பதைத்தான் இந்த இரு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் நீண்ட நாள் அதிருப்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பகுதியைப் படிப்படியாகத் தன்வசம் கொண்டுவரும் முயற்சியில் பாஜக இறங்கியது. முதலில் அருணாச்சல பிரதேசத்தில் சட்ட மன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி வாங்கி ஆட்சியைப் பிடித்த பாஜக, பிறகு அசாமில் அதிருப்தி காங்கிரஸ் தலைவரைக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. பின்பு புறவாசல் வழியாக மணிப்பூரை வசம் கொண்டது. அகண்ட தனிமாநிலம் கோரும் நாகா குழுக்களையும் பாஜக ஆதரித்துவருகிறது. இதன் விளைவு மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று இப்போதே அச்சம் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
திரிபுராவில் காங்கிரஸிலிருந்து திரிணமூலுக்குச் சென்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் எட்டு பேரைக் கவர்ந்திழுத்து இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும்பெற்றுள்ள பாஜகவின் அடுத்த இலக்கு அந்த மாநிலத்தில் இடது முன்னணி ஆட்சியை விரட்டி ஆட்சியைப் பிடிப்பதுதான். இதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் பழங்குடிக் குழு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது. வன்முறைக்குத் தீர்வு காண்பதில் முன்னோடி மாநிலமாகத் திகழும் திரிபுராவில் இத்தகைய வழிமுறையை அக்கட்சி கடைப்பிடிக்கிறது. வன்முறைக்குத் தீர்வு காண்பதில் உறுதியானநடவடிக்கைகளை எடுத்த இடதுசாரி அரசின் மீது பழி போடும் செயலில் அக்கட்சி எந்தத் தயக்கமும் இல்லாமல் ஈடுபட்டிருக்கிறது.
விளைவாக, திட்டமிட்ட வன்முறைக்கு நடுவே சிக்கி இளம் ஊடகவியலாளர் சந்தனு பவுமிக் பலியாகியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப் படுகொலை தொடர்பாக ஐ.பி.எஃப்.டி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்வதற்கு திரிபுரா காவல் துறை நடவடிக்கை எடுத்தபோது, அந்த அமைப்பினர் காட்டிய எதிர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் இதுவரை காணாத ஒன்று என மாநில போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக துணையுடன் களத்தில் நிற்கும் அந்த அமைப்பினர் எப்படிச் சட்டத்துக்குப் பயப்படுவார்கள் என்றே அவர்கள் கேட்கிறார்கள்.
திரிபுராவில் இடது முன்னணியை விரட்டுவேன் என்ற சபதத்துடன் திரிணமூல் களமிறங்கிய நிலையில், பாஜக அதைவிட மூர்க்கமாக ‘தன் வேலை’யைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இடது முன்னணி உருவாக்கியுள்ள அரசியல் விழிப்புணர்வின் பின்னணியில் இந்தக் கட்சிகள், அங்கே வெற்றிபெறும் வாய்ப்பு மிக அரிதாக இருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால், பாஜக வகுத்திருக்கும் வன்முறை அடிப்படையிலான வியூகம் இவற்றைத் தகர்த்துவிடுமோ எனும் கவலை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள திரிபுரா மக்களிடமும் இந்தியாவின் பிற பகுதியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.
- வீ.பா.கணேசன், எழுத்தாளர்,
மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vbganesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT