Last Updated : 14 Mar, 2023 06:47 AM

2  

Published : 14 Mar 2023 06:47 AM
Last Updated : 14 Mar 2023 06:47 AM

தமிழ்நாடு பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள் | தொழில் வளர்ச்சி சரி; தொழிலாளர் மேம்பாடு?

2020-21 கணக்கீட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. முதல் இடத்தில் மகாராஷ்டிரமும், மூன்றாம் இடத்தில் குஜராத்தும் உள்ளன.

ஆனால், பதிவுசெய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலிடம் (38,837) வகிக்கிறது. மகாராஷ்டிரம் இரண்டாம் (25,610) இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது.

2020-22 கணக்கின்படி, தமிழ்நாட்டின் வேளாண்மை உற்பத்தி மதிப்பு ரூ.55.66 லட்சம் கோடி; தொழில் துறை உற்பத்தி மதிப்பு ரூ.29.30 லட்சம் கோடி; கட்டுமானத் துறை மதிப்பு ரூ.13.85 லட்சம் கோடி; சேவைத் துறை மதிப்பு ரூ.61.23 லட்சம் கோடி. கூடவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக நாம் இருப்பது பெருமிதத்துக்குரியது.

கடந்த ஆண்டின் ஒதுக்கீடு: தமிழ்நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்துக்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.3,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறுதொழில் வளர்ச்சிக்கு ரூ.912.50 கோடி; தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ரூ.254.21 கோடி; புதிய தொழில் முயற்சிகளுக்கு ரூ.175 கோடி என மொத்தம் ரூ.4,617.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர, தொழில் பயிற்சியை நவீனமயமாக்கி, வேலைவாய்ப்பைப் பெருக்க ரூ.2,877 கோடியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. நம்பிக்கையூட்டும் இந்தச் சூழலில் சில முக்கிய அம்சங்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்ச வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அடைந்த அளவுக்குத் தொழிலாளர்கள் வளர்ச்சி அடைந்துள்ளார்களா, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா, பொருளாதார வளர்ச்சி தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளிலும் பிரதிபலிக்கிறதா, உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்றவர்களின் வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகளோடு இணைந்து செல்கின்றனவா என்பன உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆராய்வது அவசியம்.

மேலும், தொழில் வளர்ச்சி - தொழிலாளர் நலன் என இரண்டும் ஒருங்கிணைக்கப்படும் வகையிலான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்; உரிய நிதி ஒதுக்கீடுகளும் அவசியம்.

உழைப்புசக்தி - தமிழக, இந்திய நிலைகள்: நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் காலமுறை உழைப்புசக்தியின் அடிப்படையில், 2020-21ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் வேளாண்மையைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் 29.64% பேர்; அகில இந்திய அளவில் வேளாண்மையை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் 46.46%. தமிழ்நாட்டின் ஆரோக்கியமான போக்குகளில் இதுவும் ஒன்று.

வேளாண்மைத் துறையிலிருந்து வெளியேறி, மாற்று வேலைகளைத் தேடிக்கொள்வது, கூடுதல் வருவாயை நோக்கி நகர்வது நம் மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி. தொழில் துறையில் தமிழ்நாட்டில் உழைப்புசக்தியின் பங்களிப்பு 16.78%. இந்திய சராசரி 10.91%. கட்டுமானத் துறையில் இதே உழைப்புசக்தி விகிதம் 16.63%. அகில இந்திய நிலைமை 12.08%. மொத்த மற்றும் சில்லறை வணிகத் துறையில் தமிழகப் பங்கு ‌11.56%.

இதன் அகில இந்தியச் சராசரி 10.55%. இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைத் துறை தவிர, உழைப்புசக்தி விகிதாச்சாரம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள், தொழிலாளர் நலனிலும் வேலைவாய்ப்பிலும் நிகழாதது விவாதத்துக்குரியது.

தொழிலாளர்களின் நிலை: 1991 முதலே தமிழ்நாட்டு கிராமப்புற வேலையின்மை, அகில இந்திய சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருந்துவருகிறது. சமீபத்திய (2020-21) கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் கிராமப்புற வேலையின்மை 4.8%. அகில இந்திய அளவில், இது 3.3% மட்டுமே. அதேவேளை, நகர்ப்புற வேலையின்மைஇந்திய அளவில் 6.7%. தமிழ்நாட்டில் 5.8% மட்டும்தான் என்பது ஓர் ஆறுதல்.

வேலைவாய்ப்பின் தன்மைகள்: சுயவேலைவாய்ப்பைத் தேடிக்கொள்பவர்களின் இந்தியச் சராசரி 55.6%. தமிழ்நாட்டில் அது 33.9%. வேளாண்மை அல்லாத பணிகளில் மாதாந்திர ஊதியம் பெறுவோர் இந்திய அளவில் 21.1%; தமிழ்நாட்டில் 31.2%. இதுவும் ஆரோக்கியமான போக்குதான்.

குறுகியகால, தற்காலிகப் பணிகளைச் செய்துவருபவர்கள், அகில இந்திய அளவில் 23.3% மட்டுமே. தமிழ்நாட்டில் இதன் விகிதம் 34.9%. தொழில் வளர்ச்சியின் விளைவாக வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவந்தாலும் அவை, தற்காலிக - பகுதி நேரப் பணிகளே. இது நவதாராளமயத்தின் விளைவுகளில் ஒன்று.

முறைசாராத் தொழிலாளர்களின் நிலை: தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 60.1% பேர் முறைசாராத் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்துவருகின்றனர். இந்திய அளவில் இது 71.4%. தமிழ்நாட்டுப் பொதுத் துறை நிறுவனங்களில் 14.8% பேர் பணியாற்றிவருகின்றனர்.

இதன் அகில இந்தியச் சராசரி 12.3%. தமிழ்நாட்டில் தனியார் லிமிடெட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், 16.7%. இந்தியச் சராசரி, 9.9%. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளர்களே என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ந்திருந்தாலும், தொழிலாளர்களின் நிலை, வேலையின் தன்மை, அதன் தரம் மேம்பாடு அடையவில்லை. 15-29 வயதுவரை உள்ள இளைஞர்களில் வேலையின்றி இருப்பவர்கள் 20.40%. இது, அகில இந்தியச் சராசரியைக் காட்டிலும் 7% அதிகம். பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புப் படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்கள் தமிழ்நாட்டில் 11.6%. அகில இந்தியச் சராசரி 9.1%.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு: தமிழ்நாட்டின் தொழிலாளர்களில் எந்தவிதமான ஒப்பந்தமும் அற்றவர்கள் 60%. அகில இந்திய அளவில் இது 64.3%. தமிழ்நாட்டில் மாதாந்திரச் சம்பளம் பெறும் தொழிலாளர்களில் 39.0% பேர் ஊதியத்துடன் கூடிய விடுப்புகள் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்திய அளவில் இந்நிலைமை இன்னும் மோசம் (47.9%). எந்தவித சமூகப் பாதுகாப்பும் இன்றிப் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் 48.6%. அகில இந்திய அளவில் இது 53.8%. தற்காலிகப் பணியாளர்களும், சுய வேலைவாய்ப்பை நம்பி வாழ்வோரும் எந்தவித சமூகப் பாதுகாப்பும் இன்றி உழைத்துவருகின்றனர்.

தொழிலாளர்களின் மாதச் சம்பளம் தமிழ்நாட்டில் ரூ.15,154. அகில இந்தியச் சராசரியைவிட தமிழ்நாட்டில் சுமார் ரூ.2,500 குறைவு. அதிக எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் நம்மை நோக்கி வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சுய வேலைவாய்ப்பை நம்பி வாழ்பவர்களின் மாத வருமானம் ரூ.12,357. இந்தியச் சராசரி ரூ.10,756. பெரிய வித்தியாசமில்லை!

என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழிலாளர் நலத்தோடு இணைந்து செல்லவில்லை என்பதை மேற்கண்ட ஆய்வு தெளிவாக்குகிறது. வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சியால் முழுமையான பலன் ஏற்படாது. முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

மாத ஊதியம் பெறுவோருக்குக்கூட சமூகப் பாதுகாப்பு இல்லாத நிலை. வேலை கிடைத்தாலும் போதுமான வருவாய் இல்லாத போக்கு. தொழில் துறை முன்னேற்றமும் பொருளாதார முன்னேற்றமும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்து செல்வதே ஆரோக்கியமானது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர் நலனுக்கு ரூ.2,353 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இது பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும்.

தரமான வேலைவாய்ப்புக்கான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். கூடவே, தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அதற்கான உறுதியான சட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

- நா.மணி | ஈரோடு கலைக் கல்லூரி, வே.சிவசங்கர் | புதுவைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x