Published : 24 Sep 2017 11:16 AM
Last Updated : 24 Sep 2017 11:16 AM
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓராண்டு நினைவுதினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக என்கிற கட்சியையும் பழனிசாமி அரசையும் முன்வைத்து எழுந்திருக்கும் சர்ச்சைகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும், என்னவாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தையும் தாண்டி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்வதன் நோக்கமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி சிறுபான்மை பழனிசாமி அரசைப் பெரும்பான்மை அரசாக மாற்றுவதுதான் என்பதே தினகரன் அணியின் கருத்து. அதைத் தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை தினகரன் அணி அணுகியது. தனித்துப் போராடுவதைவிட திமுகவுடன் இணைந்து போராடினால் இலக்கை அடையலாம் என்று சொல்லப்படவே, அதற்கும் தயாரானார் தினகரன். திமுக தொடர்ந்த வழக்கில் தினகரன் தரப்பும் இணைந்தது.
வாக்கெடுப்பு அவசியமா?
விளைவு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதுவும்கூட தற்காலிகம்தான் என்பதால் அடுத்தது என்ன என்ற கேள்வி எல்லா தரப்பிலும் எழுந்துள்ளது. இங்கே எல்லாத் தரப்பும் என்பது ஆளுநர், சபாநாயகர், முதல்வர், தினகரன், ஸ்டாலின் ஆகிய ஐந்து தரப்பையுமே குறிக்கிறது. இந்த ஐந்து தரப்பினரும் நம்பியிருப்பது நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் தான்.
ஓர் அரசு முதன்முறையாக அமைக்கப்படும்போது சட்ட மன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பது வழக்கம். அதுவும்கூட, எண்ணிக்கையில் ஏதேனும் ஏற்ற இறக்கம் இருக்கும் பட்சத்தில், சில நாட்கள் கால அவகாசம் கொடுத்து, அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வரைக் கேட்டுக்கொள்வார் ஆளுநர். இல்லாவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் இடைப்பட்ட காலங்களில், கட்சிக்குள்ளோ, ஆட்சிக்குள்ளோ ஏதேனும் மாற்றங்கள் அல்லது கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, பெரும்பான்மைக்கு ஆபத்து நேரிடும் சமயங்களில், முதலமைச்சர் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா, அல்லது அவைப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா என்பதை ஆளுநர் முடிவுசெய்ய முடியும். அது அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்குக் கொடுத்திருக்கும் பிரத்யேக உரிமை.
அவைப் பெரும்பான்மை
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், பழனிசாமி அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. அதை முதல்வர் தரப்பு கடுமையாக மறுக்கலாம். ஆனால் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில், ஆளுநர் நினைத்தால் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட முடியும்.
இந்த இடத்தில்தான் அறுதிப் பெரும்பான்மைக்குப் பதிலீடாக அவைப் பெரும்பான்மை வருகிறது. ஆம், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அறுதிப் பெரும்பான்மைக்குப் பதிலாக, அவையில் இருப்போரில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிசெய்தாலே போதும், இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க முடியும். ஜானகி ராமசந்திரன் அவைப் பெரும்பான்மையைத்தான் நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்சத்தைத்தான் தினகரன் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. ‘முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று எங்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தது முதலே அவைப் பெரும்பான்மை வழியே ஆட்சியைத் தக்கவைக்க முதல்வர் தரப்பு முடிவுசெய்துவிட்டது. அதனாலேயே 18 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யப் பார்த்தது. அதைத் தடுத்துநிறுத்த நீதிமன்றத்தை அணுகினோம். ஒருகட்டத்தில், திமுக தொடர்ந்த வழக்கில் இணைந்தால் மட்டுமே தகுதி நீக்கத்தைத் தடுக்க முடியும் என்பதால் அதையும் செய்தோம். அப்படி வழக்கில் இணைந்ததையே கட்சித்தாவல் என்று சொல்லி, எங்கள் எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்து விட்டார் சபாநாயகர். என்றாலும், சட்டப் போராட்டம் தொடரும்’ என்கிறது தினகரன் தரப்பு.
வியூகங்கள், ஊகங்கள்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும்போது, இரண்டு காரியங்கள் நடக்கலாம். தகுதி நீக்கம் ரத்து அல்லது தகுதி நீக்கம் செல்லும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது நம்பிக்கை வாக்கெடுப்பில் சென்றுதான் முடியும்.
ஒருவேளை, தகுதி நீக்கம் செல்லும் என்றால், 18 எம்எல்ஏக்கள் இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடும். அது முதல்வருக்குச் சாதகமாக முடியவே வாய்ப்புகள் அதிகம். அதனைத் திமுகவும் விரும்பாது, தினகரனும் விரும்ப மாட்டார். அரசை வீழ்த்தவே இருதரப்பும் நினைக்கும். அந்த இடத்தில்தான், “எங்கள் ஸ்லீப்பர்செல்கள் பழனிசாமி அணியில் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு ஆட்சியை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று தினகரன் சொல்வதும், “எங்கள் வசம் இருக்கும் பந்தை எப்போது வீசுவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று ஸ்டாலின் சொல்வதும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. தினகரன் சொல்லும் எல்லை அண்ணா அறிவாலய எல்லையா, ஸ்டாலின் சொல்லும் ‘பந்து’ தினகரனா என்பதில்தான் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.
மாறாக, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ரத்து என்றால், அப்போதும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான் வந்து நிற்கும். அப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளுநருக்கும் உருவாகும். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அரசு தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த இடத்தில்தான், திமுக உறுப்பினர்கள் விதிகளுக்குப் புறம்பாக குட்காவைச் சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்த விவகாரம் உள்ளே வரும். ஒருவேளை, உரிமைக் குழுவின் பரிந்துரையின்படி, 21 திமுக எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், அவர்கள் இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். அதில் முதல்வர் வெற்றிபெறக்கூடும். அப்படியொரு நிலை வராமல் தடுக்கவே நீதிமன்றத்தை அணுகியுள்ளது திமுக.
ஆக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரமும் சரி, தகுதிநீக்கம் செய்யப்பட இருப்பதாக திமுக அச்சப்படும் 21 எம்எல்ஏக்கள் விவகாரமும் சரி, எல்லாமே நீதிமன்றத்தின் கைகளில்தான் இருக்கிறது. இந்த வழக்குகளில் முடிவுகள் எட்டப்படாதவரை பழனிசாமி அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
சின்ன விவகாரம்
அடுத்து, இரட்டை இலை விவகாரம். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இது தொடர்பான விசாரணை அக்டோபர் 5 அன்று நடக்கும்போது, இரு தரப்பினரும் தத்தமது தரப்பு ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். இங்கே இரண்டு தரப்பு என்பது சசிகலா, தினகரன் தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பு. இங்கே எந்த இடத்திலும் பழனிசாமி தரப்பு இல்லை.
ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தை அணுகியிருப்பது பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினரே. இவர்கள் தரப்பில் சமீபத்தில் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டியிருப்பதால், அதுகுறித்த தகவல்களை பன்னீர்செல்வம் தரப்பு அளிக்கக்கூடும். ஆனால் சசிகலா, தினகரன் தரப்பில் எந்தவொரு பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டப்படவில்லை. ஆகவே, அவர்கள் கைவசம் இருக்கும் ஆவணங்களைத் தரக்கூடும் அல்லது புதிதாக சசிகலா அனுமதியோடு பொதுக்குழுக்களைக் கூட்டி, ஆவணங்களைக் கொண்டுபோய் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கக்கூடும்.
இருதரப்பும் தருகின்ற ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தும். அப்போது எது அதிகாரபூர்வ பொதுக்குழு, செயற்குழு, எது அதிகாரபூர்வமற்றது என்ற முடிவுக்குத் தேர்தல் ஆணையம் வரும். ஆனால் அப்படியொரு முடிவுக்கு வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம், அதிமுகவின் அமைப்பு விதிகள் பலவும் மிகவும் கறார்த்தன்மையைக் கொண்டவை. அந்தக் கெட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கும் ஆவணங்கள் இருக்கும் பக்கமே இரட்டை இலை சின்னமும் கட்சியும் சென்றுசேரும். எல்லாவற்றுக்கும் முடிவு கிடைக்க வேண்டும் பொறுமை அவசியம், அதுவும் வானளாவிய பொறுமை!
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறது?
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று அழைக்கப்படும் அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணை 1985-ல் 52-வது திருத்தமாகச் சேர்க்கப்பட்டது. இச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பதைத் தடுப்பதாகும். அதற்கான சட்டப்படியான அதிகாரத்தை ஆளும் கட்சியின் தலைவரிடமே கொடுத்தால் கடுமையான விமர்சனம் வரும் என்பதால் மக்களவைத் தலைவர், பேரவைத் தலைவர் ஆகியோருக்கு அளித்தார்கள். அவர்கள் கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்று ஜனநாயக நெறிமுறை சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் ஆளும் கட்சியின் விருப்பப்படிதான் செயல்படுவார்கள்.
ஆளும் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அல்லது மொத்த பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஆளும்கட்சியை விட்டு வெளியேறினால் அது கட்சிப் பிளவாகவே கருதப்படும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது. இச்சட்டத்தின் இரு முக்கியமான பிரிவுகளை இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்ப்போம். ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர், கட்சியிலிருந்து விலகினால் அவரது உறுப்பினர் பதவி போய்விடும் என்கிறது சட்டத்தின் இரண்டாவது பாரா பிரிவு 2(1)(ஏ). கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலோ, அல்லது கட்சித் தலைமை விரும்புகிறவகையில் வாக்களிக்காமல் இருந்தாலோ பதவியைப் பறித்துவிடலாம் என்கிறது 2(1)(பி) பிரிவு.
தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் 18 பேரின் பதவியைப் பறித்தது எப்படி, அது சட்டப்படி சரியா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ‘ரவீந்திர நாயக்-எதிர்-மத்திய அரசு’ வழக்கில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாகக் கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை, பேரவை உறுப்பினராக மனதளவில் செயல்படாமல் அவர் விலகினாலே போதும் என்கிறது. மனதளவில் விலகினார் என்பதை எப்படி, யார் தீர்மானிப்பது? இங்கே சட்டம் பெரிய இடைவெளியை சட்ட நிபுணர்களுக்கு அளித்துள்ளது. ‘ராஜேந்திர சிங்-எதிர்-சுவாமி பிரசாத் மவுரியா’ வழக்கில் இன்னொரு முன்னுதாரணம் இருக்கிறது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் பதவியில் இருக்கும் முதலமைச்சரை விட்டுவிட்டு இன்னொருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் கொடுக்கின்றனர். இந்த நிகழ்வே ஆளும் கட்சியிலிருந்து தாங்களாகவே விலகுவதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
-ஜூரி
-ஆர். முத்துக்குமார், எழுத்தாளர்.
‘தமிழகத் தேர்தல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT