Published : 06 Mar 2023 06:32 AM
Last Updated : 06 Mar 2023 06:32 AM
உணவு, உறைவிடம் ஆகியவற்றுக்கு இணையாக மனிதர்களது உடைக்கும் முக்கியத்துவம் உண்டு. உடை என்பது மனிதர்களின் அடிப்படை உரிமையும்கூட. இந்தியாவின் ஒரு பகுதியில் அந்த உரிமை மகளிருக்கு மறுக்கப்பட்டது என்பது வரலாற்றில் மிகப்பெரும் சோகம். சாதியும் ஆணாதிக்கமும் இணைந்து இழைத்த இக்கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ‘தோள்சீலைப் போராட்டம்’, மனித உரிமைப் போராட்டத்தின் மகத்தான அடையாளம். 1822இல் சிறிய அளவில் தொடங்கிய இப்போராட்டம், ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், சாதி மற்றும் ஆதிக்கத்தின் இறுக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
சாதி வெறியின் உச்சம்: கேரளத்தின் பெரும் பகுதியையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானம். இப்பகுதியில், நம்பூதிரி பிராமணர்கள்தாம் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர்; சாதிவெறி மேலோங்கியிருந்தது.
அரசர் - நம்பூதிரி பிராமணர் - நாயர் - வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்தனர். ஆண்கள் எவரும் மீசை, தாடி வைத்துக்கொள்ளக் கூடாது; வைத்தால், அதற்குத் தனி வரி கட்ட வேண்டும். இப்படி நிறைய கொடுமைகள்!
மகளிருக்கு நிகழ்த்தப்பட்ட அக்கிரமம்: ஆதிக்க சாதிப் பெண்கள் வீட்டைவிட்டு அதிகம் வெளியே வரக் கூடாது. கணவர், நெருங்கிய உறவினர்களைத் தவிர யாரிடமும் பேசக் கூடாது. இதைவிடக் கொடுமை, நம்பூதிரி பிராமணர்கள் முன்னால் வரும்பொழுது, மேலாடையின்றி வர வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சாதி எனக் கருதப்பட்ட பெண்கள் நிலை இன்னும் மோசம். அனைவர் முன்பும் தங்கள் மார்பகத்தை மறைக்குமாறு எவ்வகை ஆடையையும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் அணியக் கூடாது எனவும், அதை மீறி மேலாடை அணிந்தால் அதற்கு ‘முலை வரி’ கட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரி கட்டியிருந்தாலும், நம்பூதிரி பிராமணர்கள் முன்னால் வரும்போது திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்பது இன்னொரு கொடுமை.
சேர்தலா என்னும் கிராமத்தில் நங்கேலி எனும் ஈழவப் பெண் மேலாடை அணிந்ததால், அரசு அதிகாரிகள் அவரிடம் வரி கேட்டதாகவும், சுயமரியாதைமிக்க அந்த ஏழைப் பெண் தன் மார்பகங்களை வாளால் அறுத்து, வாழை இலையில் வைத்துக் கொடுத்துத் தன் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், அதிக ரத்தப்போக்கால் அவர் மரணமடைந்ததாகவும், அவரது கணவர் சிறுகண்டன் தீயில் பாய்ந்து உயிர் துறந்ததாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன. நங்கேலி இருந்த இடம் ‘முலைச்சிப் பறம்பு’ என வழிபாட்டு இடமாக மாறியது. எனினும், அதற்குப் பின்னரும் கொடுமைகள் தொடர்ந்தன.
அன்றைய காலகட்டத்தில், ‘தோள்சீலை’ என்பது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது. பெண்களின் கச்சின் மீது அணியும் மேல்முண்டு என்பதையே தோள்சீலை எனக் குறிப்பிடுகின்றனர். 1819இல் மூலம் திருநாள் ராம வர்மா எனும் அரசர், ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என அறிவித்தார். பின்னாள்களில் இதை எதிர்த்துத் தோள்சீலை உரிமைப் போராட்டம் நடந்தது.
மூன்று கட்டப் போராட்டம்: 1822 முதல் 1823 வரை, 1827 முதல் 1829 வரை, 1858 முதல் 1859 வரை என மூன்று கட்டங்களாக இப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆங்கில அதிகாரி ஜான் மன்றோ காலத்தில், ‘கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால், ‘குப்பாயம்’ போன்ற நீண்ட மேலாடையைப் பெண்கள் அணிந்துகொள்ளலாம்’ என ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் பெருவாரியாகக் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ளாத நாயர் - வேளாளர் போன்ற ஆதிக்க சாதியினர், 1822 மார்ச் மாதத்தில் பெரும் கலவரத்தைத் தொடங்கினர். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் ரவிக்கைகள் கிழிக்கப்பட்டு மரங்களில் தொங்கவிடப்பட்டன.
தமிழகத்துப் பெண்டிரிடையே ரவிக்கை அணியும் வழக்கம், பொ.ஆ. (கி.பி.) 16ஆம் நூற்றாண்டில் பரவலாகவும், இயல்பாகவும் நிலவிவந்துள்ளது. பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனில் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாக, இயந்திரப் பயன்பாடு அதிகரித்துவந்த காலகட்டத்தில், லண்டன் மிஷின் பாதிரிமார், ‘பிளவுஸ்’ எனப்படும் ரவிக்கையைத் தையல் இயந்திரத்தின் மூலம் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். எனினும், நாயர் சமூகத்து ஆடவர்களின் ஆதிக்க உணர்வு, இந்த ரவிக்கை குறித்த எதிர்ப்புணர்வாக வெளிப்பட்டது. இது பெரும் கலவரமாக மாறிற்று.
1829இல் திருவிதாங்கூர் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சாணார், ஈழவர் சமூகத்துப் பெண்கள், நாயர் சமூகப் பெண்டிர் அணிவது போன்று மார்பை மறைக்கும்படி துப்பட்டா (சால்வை) போன்ற உடை அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அதே நேரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சாணார் பெண்டிர் அணியும் ‘குப்பாயம்’ போன்ற உடையை இந்து மதத்தில் உள்ள சாணார் பெண்கள் அணிவது அனுமதிக்கப்படுகிறது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆணையின் பொருள், தோளுக்கும் மேல்துண்டு அணிவதுபோலச் சல்லா துணியோ அல்லது வேறு எவ்வகைத் துணியோ அணியக் கூடாது என்பதுதான்.
முடிவுக்கு வந்த போராட்டம்: இந்தக் காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் நாடார் சமூகத்தில் தோன்றிய வைகுண்டர் எனும் சமூகச் சீர்திருத்தவாதி, சாணார் சமூகப் பெண்கள் எக்காரணம் கொண்டும் திறந்த மார்போடு இருக்கக் கூடாது என வலியுறுத்திவந்தார்.
எனினும், சந்தை போன்ற பொது இடங்களில் ரவிக்கை அணிந்து, அதன் மேல் மெல்லிய துணியும் அணிந்து வந்த கிறிஸ்தவ நாடார் பெண்களின் ரவிக்கையைக் கிழித்தும், தாலியை அறுத்தும் நாயர் சமூகத்தினர் அவமானப்படுத்தத் தொடங்கினர். அகத்தீசுவரத்துக்கு அருகில் அப்படித் தாலியறுக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்த சந்தை ‘தாலியறுத்தான் சந்தை’ என்றே வழங்கப்படுகிறது.
1857இல் நடந்த சிப்பாய்க் கலகம், மத உணர்வுகள் தொடர்பாக வெடித்தது எனக் கருதிய ஆங்கிலேய அரசு, இந்தியக் குடிமக்களின் மத உணர்வுகளிலும், வழிபாட்டு முறைகளிலும், பண்பாட்டு மரபுகளிலும் தலையிடாது என அறிவித்தது. இதனால் நாயர் - வேளாளர் சமூகத்தினர் மேலும் ஊக்கம் பெற்றனர். 1859 டிசம்பர் 30இல் நாகர்கோவில் அருகே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஊர் ஊராகக் கலவரம் பரவியது. இந்த முறை மதங்கடந்து, ஏழை - பணக்காரர் எனும் வேறுபாடின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரண்டுவந்து சரியான பதிலடி கொடுத்தனர்; சாதி வெறியர்கள் பின்வாங்கினர்.
1859 ஜூலை 26 அன்று திருவிதாங்கூரைச் சேர்ந்த உத்தரம் திருநாள் அரசர், சாணார் சமூகப் பெண்கள் தோள்சீலை அணிவதை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 1865இல் ஈழவர் போன்ற பிற சாதியைச் சார்ந்த பெண்டிரும் இத்தகைய உடை உடுத்தும் முறையைப் பின்பற்றலாம் என திருவாங்கூர் அரசர் ஆயில்யம் திருநாள் இறுதியாக அறிவித்தார். தோள்சீலைப் போராட்டம் ஆதிக்க சாதியினருக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல... ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களின் மானம் காத்த போராட்டமும்கூட!
- கண.குறிஞ்சி | ‘புதுமலர்’ ஆசிரியர்; தொடர்புக்கு: gana.kurinji@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT