Published : 22 Sep 2017 08:00 AM
Last Updated : 22 Sep 2017 08:00 AM
கடந்த ஆண்டு இதே நாளில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. பல ஊகங்களும் எழுந்தன. மக்கள் குழப்பத்தில் மூழ்கினார்கள். 2016 செப்டம்பர் 21-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவையைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததே ஜெயலலிதா மக்கள் மேடையில் உயிரோடு தோன்றிய கடைசி காட்சி. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது தொடங்கி இன்று வரை, கடந்த ஓராண்டாகத் தமிழகமே தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது!
இத்துடன், கடந்த ஓராண்டாகவே மாறிவரும் நம்ப முடியாத அரசியல் காட்சிகளைக் கண்டு மக்கள் அருவருப்புடன் திகைக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அழுதுகொண்டே பதவியேற்றவர்கள், அவர் இறந்த நாளன்று சலனம் இல்லாமல் பதவி ஏற்று புதிய அரசை அமைத்தார்கள். தமிழக மக்கள் மொத்தமும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்க சசிகலாவைக் கட்சியின் பொதுச்செயலாளராக்கிக் காலில் விழுந்தார்கள். ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்பு, பிறகு ராஜிநாமா, ஜெயலலிதா சமாதியில் தியானம், கூவத்தூர் அரங்கேற்றம், சசிகலா சிறைக்குச் செல்லுதல் என்று நீடித்த காட்சிகளின் இறுதியாக பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா குடும்பம்.
‘அம்மா தயிர் சாதம் சாப்பிட்டார்’
இரண்டாக உடைந்தது கட்சி. ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது ‘அம்மா தயிர் சாதம் சாப்பிட்டார், காவிரி பிரச்சினைக்காக ஆலோசனை நடத்தினார்’ என்றவர்கள் பிற்பாடு பதவிச் சண்டை வந்தபோது கூச்சமே இல்லாமல் ‘அம்மா மர்ம மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்றார்கள். அதிகாரத்தையும் கட்சியையும் கைப்பற்ற அதிமுக-வின் இரு குழுக்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.
ஒருவழியாக அணிகள் இணைப்பு நாடகம் முடிந்ததும், தினகரன் தரப்பு அதிருப்தி குரல் எழுப்ப, கடைசியில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் மிச்சம். கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு திருப்பங்கள், ஒவ்வொரு நிமிடத்துக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ அலறல்கள் என்று தமிழகம் ஏதோ போர்ச்சூழலில் இருப்பதுபோன்ற நிலை உருவானது. விளைவாக முற்றிலும் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது தமிழகம். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு மாநில அரசின் ஆட்சியில், மக்கள் என்னென்ன சோதனைகளை அனுபவிக்க நேரும் என்பதற்குச் சரியான உதாரணமாகியிருக்கிறது சமகால நிலவரம்.
பாஜகவிடம் சரண்!
பல தருணங்களில் மத்திய அரசையும், பிரதமர்களையும், அமைச்சர்களையும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய தமிழகம் இன்றைக்கு மத்திய அரசிடம் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்துவிட்டது. தன் மாநில உரிமைகளுக்காகப் பேரம் பேசும் நிலையில் இருக்க வேண்டிய முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இன்று பாஜக அரசு கண் அசைக்கும் முன்பாகவே அவர்களுக்காகக் காரியங்களை நிறைவேற்றித் தருபவர்களாக மாறிவிட்டார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆதிக்கச் செயல்பாடுகளை எதிர்த்துச் செயலாற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற உறுதியான ஆட்சியாளர்கள் இருக்கும் இதே காலகட்டத்தில், பழனிசாமி அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. காவிரி பிரச்சினை, உதய் மின்திட்டம் தொடங்கி நீட் வரை தமிழகத்தின் நலன்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் செயல்படும் மத்திய அரசிடம், சின்ன வருத்தத்தைக் கூட முன்வைக்க திராணி இல்லாத அரசாகவே தமிழக அரசு இன்றைக்கு இருக்கிறது. அது மட்டுமா? துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை ஜெயலலிதா இருந்தபோது கூவத்தின் நீரோட்டம் பாதிக்கப்படும் என்று எதிர்த்தவர்கள், அவர் இறந்த பின்பு அப்படியே தலைகீழான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
இந்த அரசியல் குழப்ப நிலை அரசு நிர்வாகத்தின் பல மட்டங்களிலும் எதிரொலிக்கிறது என்று பதறுகிறார்கள் மக்களும் சமூக ஆர்வலர்களும். அதிமுக எம்.எல்.ஏ.க்களையே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வழியில்லாத நிலையில், அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்கும் திறனை முதல்வரிடம் எதிர்பார்ப்பது நியாயம் இல்லைதான். ஆனால், அதன் விளைவுகள் மக்கள் மீதுதான் விடியும் எனும்போது எத்தனை நாட்களுக்கு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது?
மிக முக்கியமாக, தொழில் முதலீடுகளை இழந்து நிற்கும் அபாயத்தில் தமிழகம் இருக்கிறது. பல முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வெளியே தங்கள் கவனத்தைத் திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஆந்திரமும் தெலங்கானாவும் தமிழகம் தவறவிடும் தொழில் வாய்ப்புகளைக் கொத்திக்கொண்டுபோகக் காத்திருக்கின்றன. தமிழக ஆட்சியாளர்கள்மீது ஊழல் புகார்களை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பகிரங்கமாக முன்வைத்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் சந்திசிரிக்கிறது தமிழகத்தின் நிலை.
ஸ்தம்பித்துப்போன நிர்வாகம்
அடிப்படைக் கட்டுமானம் தொடங்கி மக்கள் நலத்திட்டப் பணிகள் வரை முடங்கிப்போயிருக்கின்றன. குறைந்தபட்சம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைக்கூட மாநில அரசால் தேர்வு செய்துத்தர முடியவில்லை. துணை நகரத் திட்டப் பணிகள் தொடங்கி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம் வரை சரிவர நிறைவேற்றப்படவில்லை. போன முறை நிர்வாகம் ஸ்தம்பித்துப்போயிருந்த சூழலில் பெருமழை-வெள்ளத்தில் சென்னை மூழ்கி வெளியே வருவதற்குத் திண்டாடியது. இன்னொரு முறை அப்படி நிகழ்ந்தாலும் செயலாற்றுவதற்கு நிர்வாகம் சிறிதும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. மொத்தத் துறைகளும் முடங்கிக் கிடக்க, கல்வித் துறையில் மட்டும் நம்பிக்கையூட்டும் சில அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அந்த சந்தோஷமும் நிலைக்கக் கூடாது என்று கல்வித் துறைச் செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டு அவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.
இதோ, பாஜக ஆதரவுடன் ஒவ்வொரு நாளும் ஆடுபுலி ஆட்டம் ஆடியே ஐந்தாண்டுகளைக் கடத்திவிடலாம் என்று ‘செயல்பட்டு’க்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இப்படியான ஆட்சியாளர்கள் தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்திப்பார்கள் என்பதுதான் வரலாறு. அதுமட்டுமல்ல, வரலாற்றின் பக்கங்களிலிருந்தும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதையும் காலம் அவர்களுக்கு நிச்சயம் உணர்த்தும். சசிகலா தரப்பால் மிரட்டப்பட்டு ராஜிநாமா செய்ததாகச் சொல்லி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ‘தியானம்’ செய்தபோது பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் உருவான ஆதரவு அலை இன்றைக்கு எங்கே போனது? இந்த உண்மையை முதல்வர் பழனிசாமி உணர வேண்டும். அதுமட்டுமல்ல, மக்கள் வேடிக்கை பார்க்க இன்னும் அதிக நாட்கள் தங்கள் வேடிக்கைகளை நிகழ்த்த முடியாது என்பதை பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் புரிந்துகொண்டே ஆக வேண்டும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT