Published : 01 Sep 2017 09:48 AM
Last Updated : 01 Sep 2017 09:48 AM

தமிழகத்தில் ஆயுர்வேதம் புறக்கணிக்கப்படுகிறதா?

மீபத்தில் மருத்துவப் பணிநியமன வாரியம், தமிழக ஆயுஷ் மருத்துவர்களுக்கான காலியிடங்களையும் தேர்வு தேதியையும் அறிவித்திருந்தது. அதில் ஆயுர்வேதத்துக்கு ஒரேயொரு பணியிடத்துக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வாரியத்தின் இந்த முடிவு, ஆயுர்வேதப் பட்டதாரி மருத்துவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில், ஒரேயொரு பணியிடத்துக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது பல ஐயங்களை எழுப்பியுள்ளன.

தமிழகத்தில் ஆயுர்வேதம் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அத்தகைய புறக்கணிப்புக் குக் காரணம்தான் விளங்கவில்லை. வரலாற்றுரீதியாக ஆயுர்வேதத்துடன் நெடுங்காலத் தொடர்பு தமிழகத்துக்கு உண்டு. சிலப்பதிகாரத்தில் மதுரை வீதிகளில் ‘ஆயுள் வேந்தர்கள்’ இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆய்வாளர் ஹார்ட்மட் சுட்டிக்காட்டுகிறார். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ அரசர் வீர ராஜேந்திரர் கட்டிய திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தின் கல்வெட்டுகளில் ஆயுர்வேத மருத்துவசாலை மற்றும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் ஆயுர்வேத நூல்களை இயற்றியுள்ளனர், பல நூல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இந்தியா வின் முதல் ஆயுர்வேதக் கல்லூரிகளில் ஒன்று எனும் பெருமை சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த வெங்கட்ரமணா கல்லூரிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தை ஆய்வுசெய்யப் பணிக்கப்பட்ட முதல் குழு வான உஸ்மான் கமிட்டி, அன்றைய மதராஸ் ராஜ தானியை மையமாகக் கொண்டே செயல்பட்டது. இன்றைய தேதியில் தமிழகத்தில் நாகர்கோவில் அரசு ஆயுர்வேதக் கல்லூரியுடன் சேர்த்து ஆறு ஆயுர்வேதக் கல்லூரிகள் இயங்குகின்றன. திருச்சி கல்லூரியும் நூற்றாண்டு பெருமை கொண்ட வெங்கட்ரமணா ஆயுர்வேதக் கல்லூரியும் துரதிர்ஷ்டவசமாக முடங்கிவிட்டன.

போதிய பணியிடங்கள் இல்லை

தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்த ஆயுர்வேத மருத்துவர்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருக்கும். மேலும், ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். எனினும், தமிழக அரசு ஆயுர்வேத மருத்துவத் துறைக்குப் போதுமான கவனம் அளிக்கவில்லை. தமிழக மக்கள்தொகையுடனோ அல்லது ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கையுடனோ ஒப்பிட்டால், மிகக் குறைந்த அளவிலேயே ஆயுர்வேதப் பணியிடங்கள் இங்கு உள்ளன. மொத்தம் 48 உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்களே உள்ளன. என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ்கூட மொத்தம் 56 பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என ஒட்டுமொத்த ஆயுஷ் துறைக்கு சுமார் 1,500 பணியிடங்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. தேசிய ஆயுஷ் செயல்திட்டத்தின்படி, திருவண்ணாமலை, தேனி ஆகிய இரண்டு ஊர்களில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், அங்கும் ஆயுர்வேதம் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சித்த மருத்துவத்துக்கும், ஹோமியோபதிக்கும் தனித்தனி கவுன்சில்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், ஆயுர்வேதத்துக்கு அத்தகைய தனி அமைப்பு ஏதும் இல்லை. தனியாக ஒரு இணை இயக்குநர் ஆயுர்வேதத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது ஆயுர்வேதப் பட்டதாரிகளின் நெடுநாள் கோரிக்கைகளில் ஒன்று. மாவட்ட அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, ஆயுர்வேதத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், தமிழக அரசின் சுகாதாரத் திட்டங்களில் ஆயுர்வேதம் உரிய பங்களிப்பு ஆற்ற முடிவதில்லை.

பரிதாபத்துக்குரிய மருத்துவமனைகள்

உதவி மருத்துவ அலுவலராகப் பணியில் சேரும் ஆயுர்வேத மருத்துவர்கள் பலரும் பணி ஓய்வு பெறும்வரைக்கும், அதே பதவியிலிருந்து ஓய்வுபெறும் சூழல் இன்று நிலவுகிறது. மாவட்ட ஆயுர்வேத மருத்துவ அதிகாரி எனும் புதிய பதவி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். முதுநிலைப் பட்டம் பயின்ற பிற மருத்துவ முறையினருக்கு ஊதிய ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதுவும்கூட ஆயுர்வேத அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அரசு ஆயுர்வேத மருத்துவமனைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மருந்தாளுநர்களோ உதவியாளர்களோ பெரும்பாலான அரசு ஆயுர்வேத மருத்துவமனைகளில் நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தப் பணியையும் ஆயுர்வேத மருத்துவரே செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மருத்துவர் - மக்கள் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தனது ஆய்வில் சென்ற ஆண்டு தெரிவித்துள்ளது. எனவே, ஆங்கில மருத்துவத்தோடு ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே மருத்துவர்-மக்கள் விகிதப் பின்னடைவைச் சரிசெய்ய முடியும். மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களும் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, பிற மாநிலங்களில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு நவீன மருத்துவ அடிப்படை இணைப்புப் பயிற்சிகளை அளித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வகுப்புகளில் பயில்வதற்கான வாய்ப்பு தமிழக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஆயுர்வேதப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவிருக்கிறது. ஆனால் உண்மையில், அவர்களுக்கு தமிழகத்தில் உரிய வேலைவாய்ப்பு இருக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

அதிகரிக்கும் காலியிடங்கள்

சென்ற பல ஆண்டுகளாக ஆயுர்வேதப் பட்டதாரி மருத்துவர்களும் மருத்துவ சங்கங்களும் மருத்துவ இயக்குநருக்கும் சுகாதாரத் துறைக்கும் மனுக்கள் அளித்து ஓய்ந்துவிட்டனர். சில வாய்மொழி உத்தரவாதங்களுக்கு அப்பால் எந்தப் பெரிய மாற்றமும் நிகழவில்லை. வளர்ந்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை மற்றும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆயுர்வேத மருந்து நிறுவனங்களை ஆய்வுசெய்ய ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும். தனி கவுன்சில் அமைத்து அதற்கென ஒரு இணை இயக்குநரை நியமிக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவர்களின் நியாயமான நெடுநாள் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவிசாய்க்குமா? அல்லது அரசியல் காரணிகளுக்காகத் தன் குடிமக்களைக் கைவிடுமா?

- சுனில் கிருஷ்ணன்,

ஆயுர்வேத மருத்துவர், ‘காந்தி இன்று’

இணையதளத்தின் ஆசிரியர்,

தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x