Published : 28 Sep 2017 10:17 AM
Last Updated : 28 Sep 2017 10:17 AM
இந்திய அளவில் இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டு இறுதியிலேயே 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. தொடர்ச்சியாக சிறு தொழில் துறையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் தொழில் துறையினர். கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் இந்த ஆண்டில் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் இந்தியா முழுவதிலுமே சிறு தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த பாதிப்புகளை களையும் விதமாக மாநில அரசு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
விவசாயத்துக்கு அடுத்து அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய துறையாகச் சிறு குறு தொழில்கள் உள்ளன. இவற்றுக்கான முதலீடுகளை அதிகரித்தல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப உதவிகள், ஊக்குவித்தல் முயற்சிகளில் பெரும் திட்டங்கள் எதுவும் கடந்த ஓராண்டு காலத்தில் தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில், அரசால் உருவாக்கப்பட்ட 35 தொழிற்பேட்டைகளும், சிட்கோவால் உருவாக்கப்பட்ட 62 தொழிற்பேட்டைகளும் உள்ளன. இதுதவிர புதிதாக திண்டுக்கல் மாவட்டம் ஆர். கோம்பையில் 51.26 ஏக்கரிலும், காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் 43 ஏக்கரிலும், கரூர் மாவட்டம் புஞ்சை காளக் குறிச்சியில் 54.27 ஏக்கரிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இது அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.
கோயம்பத்தூர் மண்டல அளவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 8,000 சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளன. தோராயமாக 25,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 30 சதவீதத்துக்கு அதிகமான பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகளுக்குகூட தெரியாது என்கிறனர் கோவை தொழில்துறையினர்.
தொழில் அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர முறை என்கிற கொள்கை ஏட்டளவில் மட்டும்தான் உள்ளது. நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் விருப்பத்தின்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் உள்ளன.
அதுபோல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு 3% வட்டி மானியத்தை அரசு வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.30 லட்சத்துக்கு உட்பட்ட கடன் என்றால் 25 % முதலீட்டு மானியமும் அளிக்கிறது. ஆனால் இந்த மானிய உதவிகள் உண்மையான தொழில்முனைவோர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த ஆண்டிலும் பலருக்கு நிலுவையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பல மாவட்டங்களில் தொழிலை வளர்க்க 110 விதியின் கீழ் அம்மா திறன் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இந்தப் பயிற்சியை அளித்ததற்கான ஊக்கத்தொகை பல நிறுவனங்களுக்கு அளிக்கப்படவில்லை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் இந்த ஒப்பந்தங்கள்படி அறிவித்த தொழில்கள் தொடங்குவதில் இன்னும் தாமதம் நிலவுகிறது.
ஆந்திரத்தின் நகரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டியில் பல உட்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதால் பல தொழில் நிறுவனங்கள் அங்கு தொழில் அமைக்கவே விரும்புகின்றன. ஏனென்றால் சென்னை தொழில்பேட்டைகளில் மழை வெள்ளம் பாதிக்காத வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. பாக்ஸ்கான், கியா மோட்டார்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தன. ஆனால் அவர்களை இங்கு ஈர்ப்பதற்காக முயற்சிகளில் தவறிவிட்டோம். கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவில் ஆலையை அமைத்தபோது பரபரப்புச் செய்தியானது.
சென்னை வாகன உற்பத்தி கேந்திரமாக இருந்தாலும், இஸுஸூ மோட்டார்ஸ் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசிட்டியில் ஆலை அமைத்துள்ளது. கடலூரில் அமைவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாகர்ஜூனா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துக்கான பணிகள் கிடைப்பிலேயே உள்ளன. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் புள்ளிவிவரங்களின்படி தொழில் தொடங்க எளிதான மாநிலங்களின் வரிசையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. தகவல் மற்றும் வெளிப்படைத் தன்மையிலும் தமிழ்நாடு இதர மாநிலங்களைவிட பின்தங்கியே உள்ளது.
கட்டமைப்புகளை உருவாக்காமல் தொழில் வளரும் என்றாலோ, வேலைவாய்ப்பு உயரும் என்றாலோ நம்பத் தேவையில்லை. திட்டங்கள் ஏட்டளவில் இருப்பது மாத்திரமல்ல; அது செயலுக்கு வரவேண்டும். தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிடும் இந்த ஆண்டுக்கான தரவரிசையில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னிலை வகித்த தமிழகம் தொழில்வளர்ச்சியில் அக்கறையும் ஈடுபாடும் இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசால் இன்னும் எவ்வளவு பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை!
-நீரை.மகேந்திரன்
தொடர்புக்கு: maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT