Published : 15 Sep 2017 09:30 AM
Last Updated : 15 Sep 2017 09:30 AM
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிராகத் தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம், சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கும் சென்னை மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் நடத்திய சாலை மறியல். இந்தப் போராட்டக் களத்தில் முன்னால் நின்ற மாணவிகள் செங்கொடி, வெண்மணி. இருவரும் முறையே 12, 10-வது படிப்பவர்கள். சகோதரிகள். எந்தத் தருணம் இவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது? பேசினோம்.
மாணவிகளாகிய நீங்கள் போராட்டக் களத்தில் எப்படி?
ரொம்ப சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான் நாங்க. எங்க அப்பா, அம்மா சின்ன வயசிலிருந்தே ‘தப்பு யார் செஞ்சாலும் தட்டிக் கேளுங்க. அநீதிக்கு எதிரா எப்போதும் போராடுங்க’ன்னு சொல்லியே எங்களை வளர்த்தாங்க. நாங்க வேணும்னே போராட்டத்துக்குப் போகலை. இந்த அரசாங்கம்தான் எங்களைப் போராட வைக்குது. சமகாலத்துல அநீயை எதிர்க்கலைன்னா எதிர்காலம் எப்படி நல்லாயிருக்கும்? இந்தத் தேர்வு அநீதியானது. அதனாலதான் எங்க எதிர்ப்பைத் தெரிவிக்க ரோட்டுல உட்கார்ந்தோம்.
எப்படித் திடீர் என்று தோன்றியது?
அனிதாக்கா மரணம். பாவம்ண்ணா... நினைச்சாலே அழுகையா வருதுண்ணா. அந்த அக்காவைக் கொன்னது இந்தத் தேர்வும் அதைக் கொண்டுவந்தவங்களும்தான்! இன்னைக்கு அவங்களுக்கு ஏற்பட்ட நிலைமைதானே நாளைக்கு எங்களுக்கும்? அதான் உட்கார்ந்தோம்.
இந்தத் தேர்வைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இந்தத் தேர்வு கிராமத்து மாணவர்களுக்கு, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. வசதியான குழந்தைகள் எப்படியும் படிச்சிப்பாங்க. ஏழைக் குழந்தைகள் எங்கே போவாங்க? எங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து பாருங்க, இந்தப் படிப்புக்கே அவங்க எவ்வளவு சிரமங்களைத் தாண்டி வர்றாங்கன்னு தெரியும். பன்னிரண்டு வருஷம் கஷ்டப்பட்டு, படிச்சுட்டு நல்லா மார்க் வாங்கினாலும், ‘நீ பெயில், நீ பரிட்சையில தனியா மார்க் வாங்கணும்’கிறது அநீதியா இல்லையா? எங்க பாடத்திட்டத்துல இல்லாத கேள்விகளை வெச்சு பரீட்சை நடத்துறது அநீதியா.. இல்லையா? நம்ம ஊருல இதுவரைக்கும் எவ்வளவு புகழ்பெற்ற டாக்டர்கள் உருவாகியிருக்காங்க. அவங்க எல்லாம் நீட் எழுதியா டாக்டர் ஆனாங்க? எல்லாத்துக்கும் மேல இது மாநில அரசோட உரிமையைப் பறிக்குது. அதனால்தான் அதை எதிர்க்கிறோம்.
பிரச்சினைகளுக்கு எல்லாம் போராட்டம்தான் தீர்வா?
வேற வழியே இல்லை. இவ்வளவு போராட்டங்கள் நடக்கிறபோதே அநியாயம் செய்யுறாங்க. நாம அமைதியா இருந்தா என்னா நடக்கும்? போராடாம எதுவும் கிடைக்காதுண்ணா.
பயமா இல்லையா?
எதுக்குப் பயப்படணும்? தப்பு செய்யறவங்களே தைரியமா செய்யுறப்ப நாம தப்பை எதிர்க்க எதுக்குப் பயப்படணும்? இப்போ எங்க வீட்டைச் சுத்தி போலீஸ் காரங்க நோட்டமிடுறாங்க. ஸ்கூலுக்குப் போகும்போதும் வரும்போதும் கண்காணிக்குறாங்க. அக்கம்பக்கத்துல விசாரிக் கிறாங்க. ஸ்கூல்லயும் கெடுபிடி பண்றாங்க. ஆனா எதுக்கும் நாங்க பயப்படலை, நியாயத்துகாக நிக்குறோம்ணா, பயப்பட வேண்டியதில்ல!
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT