Published : 13 Jul 2014 12:42 PM
Last Updated : 13 Jul 2014 12:42 PM

பட்ஜெட் - 2014: குறுக்குவெட்டுப் பார்வை

ஆரம்பமே அசத்தல்: அஜய் எஸ்.ராம்,தலைவர், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு.

நிதிநிலை அறிக்கையில் ஏராளமான விஷயங்கள் மீது நிதியமைச்சர் கவனம் செலுத்தியிருக்கிறார். தொழில்துறையால் ஏற்பட்ட பிரச்சினைகளும் இவற்றில் அடக்கம். முதலாவதாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறார். இது பேரியல்-பொருளாதார (மேக்ரோஎகனாமி) சமநிலையை மீட்க உதவும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் வரிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்திருப்பது நிறைய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும்.

நிதிநிலை அறிக்கை 2014-15 குறுகிய கால அளவைக் குறிவைக்காமல் மிதமான கால அளவைக் குறிவைத்திருப்பது உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு நல்லதொரு சமிக்ஞை. 'செலவினங்கள் நிர்வாகக் கமிட்டி'யை உருவாக்கவிருப்பது முன்னோக்கிய சிந்தனை! பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அமல்படுத்துவதுகுறித்த அறிவிப்புகளும், பின்னோக்கிய (ரெட்ராஸ்பெக்டிவ்) வரிகளை எச்சரிக்கையுடன் அணுகுவது போன்றவை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே அமைந்துவிட்டன.

முதலீடுகளை ஊக்கப்படுத்துதல்

மற்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது போலவே பாதுகாப்பு, ஆயுள்காப்பீடு போன்ற துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு ஜேட்லி நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் முதலீடுகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்ற துறைகளில் நிறைய திட்டங்களை அறிவித்திருப்பதும் முதலீட்டாளர்களைப் பெரிதும் ஊக்குவிக்கும். சிறுநகரங்கள், ஸ்மார்ட் நகரங்கள், நகரப் போக்குவரத்து போன்றவற்றின் மீதும் குறிப்பிடத் தக்க அளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. துறைமுகங்கள், சாலைகள், மின்சக்தி ஆகியவை தொடர்பான நடவடிக்கைகள் இனி முடுக்கிவிடப்படும் என்று தொழில்துறை நம்புகிறது.

சில விஷயங்களைத் தவிர, இந்த அறிக்கை உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது. மிக முக்கியமான துறைகளுக்கு நிதியளிக்க இந்த நிதிநிலை அறிக்கை வகைசெய்கிறது. குறிப்பாக, ரூ.10,000 கோடியைக் கொண்ட ஒரு முதலீட்டு நிதியத்தை உருவாக்குவதென்ற யோசனை வரவேற்கத் தக்கது. இதன்மூலம் தொழில் முனைவோருக்குத் தகுந்த ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும். கட்டுப்படுத்தும் விதிமுறைகள் பலவற்றைத் தளர்த்துவதன் மூலம் சிறு மற்றும் குறும் தொழில் முனைவோர்களின் தொழிற்சூழலை மேம்படுத்த முடியும்.

பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை வாராக் கடன்கள்தான் பெரும் தலைவலி. இந்த நிலை யில், வங்கிகளுக்கு மறுவூட்டம் அளித்திருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. பொதுத்துறை வங்கிகளில் அரசு தனக்கிருக்கும் பங்குகளின் அளவைக் குறைத்துக்கொண்டு பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கவிருப்பதாகத் தெரிகிறது.

பெரும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவ தோடு, குடும்பங்கள் அளவிலும் சேமிப்பை ஊக்கப்படுத்து கிறது இந்த நிதிநிலை அறிக்கை. அதேபோல், விவசாயத்துக் கும் பொருளாதாரத்துக்கும் இடையில் உள்ள உறவை அங்கீகரிக்கும் விதத்திலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் இந்த நிதிநிலை அறிக்கை விவசாயத்துக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக் கிறது. சந்தைக்கு உகந்த அணுகுமுறையை இந்த நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது. வளர்ச்சிக்கும் முதலீடுகளுக்கும் உயிர்கொடுப்பதற்கு இதுதான் சரியான அணுகுமுறை. பல்வேறு திசைகளிலும் பார்வையைச் செலுத்தக்கூடியதாக எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை விளங்குகிறது என்றே சொல்ல வேண்டும்.

*****

எதுவும் மாறவில்லை: சி.பி. சந்திரசேகர்,பேராசிரியர், புது டெல்லி ஜவாஹர்லால் பல்கலை.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் தனது உரையை இப்படி ஆரம்பிக்கிறார்: "இந்திய மக்கள் மாற்றத்துக்காகத்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள்." அப்படியென்றால், புதிய அரசு தாக்கல் செய்திருக்கும் முதல் நிதிநிலை அறிக்கையால் அந்த மக்கள் பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருப்பதுபோலவே தெரியவில்லை.

வடிவத்திலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். கடந்த கால வழக்கத் தைப் போலவே நிதிநிலை உரையின் முதல் பகுதி நீள மாகவும் இரண்டாம் பகுதி சுருக்கமாகவும் இருந்தது. சிறுசிறு அறிவிப்புகளை அறிவிப்பதிலேயே முதல் பகுதி வீணடிக்கப்பட்டது. இவற்றுள் பல அறிவிப்பு கள், ஆண்டு நிதிநிலை அறிக்கையின் எல்லைக் குள்ளே வராது. சில அறிவிப்புகள், ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்குப் புதுப் பெயர் சூட்டப்பட்டவை.

பட்ஜெட் உரையின் முதல் பகுதியின் நோக்கமே தொழில்துறைக்கு அரசு மிகவும் நட்பு பாராட்டுகிறது என்ற உணர்வையும் தனக்கிருக்கும் சீர்திருத்தத் தோற்றத்தையும் நிலைநாட்டுவதே. பாதுகாப்புத் துறையிலும் ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தியிருப்பது அதற்கு ஒரு சான்று. ஆனால், இதெல்லாம் புது விஷயங்களல்ல, காங்கிரஸ் தலைமையிலான அரசும் அமல்படுத்துவதற்காகக் குறிவைத்திருந்த விஷயங்கள்தான் அவை.

நிதிஆதாரங்களை முடுக்கிவிடுதல்

நிதிஆதாரங்களை முடுக்கிவிடுவதைப் பொறுத்தவரை நிதியமைச்சர் தனது மூளைக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. நடுத்தரக் குடும்பத்தினரின் வருமானவரி வரம்புகளை உயர்த்துதல், வெறும் அடையாளபூர்வமாக அளிக்கப்படும் சலுகைகள் போன்ற வழக்கமான விஷயங்கள்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மென்மையான வரிவிதிப்பு முறைக்கு அணுக்கமானவர் கள்தான் தாங்கள் என்ற பிம்பத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

இதெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான்: வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளாகவே இந்த அரசு களமாட விரும்புகிறது.

அதே கதைதான்

ஆக, இந்த நிதிநிலை அறிக்கை எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசைப் போலவே பாஜக தலைமையிலான அரசும் வரிகள் விதிப்பதற்கும் செலவுகள் செய்வதற்கும் தயங்குகிறது.

மந்தமான பொருளாதாரத்தை முடுக்கிவிடவும் '7-8 சதவீத வளர்ச்சியை நோக்கிய பயணத்தைத் தொடங்கவும் ஏதுவாக, இந்த அரசின் வரிவருவாய்கள் குறித்த நிலைப்பாடு இல்லை. இதை உணர்ந்தேதான் என்னவோ ஜேட்லி இப்படி எச்சரிக்கையுடன் கூறியிருக்கிறார்: "இந்த அரசு பதவியேற்ற 45 நாட்களுக்குள் தாக்கல்செய்யப்படும் நிதிநிலை அறிக்கையைக் கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்று எதிர்பார்ப்பது அறிவார்ந்த செயலாக இருக்காது." ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதீத எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டவர்கள் தேசத்தை மட்டும் காத்திருக்கச் சொல்வதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரு முதலாளிகள் ஒருபுறம் இருக்கட்டும், 'புது நடுத்தர வர்க்கம்' என்று ஜேட்லியால் குறிப்பிடப்படுபவர்களையோ ஏழைஎளிய மக்களையோ புதிய நிதிநிலை அறிக்கை திருப்திப்படுத்தாது என்பதே உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x