Published : 06 Jul 2014 12:00 AM
Last Updated : 06 Jul 2014 12:00 AM
திலீப் மெண்டிஸ், அரவிந்த டி சில்வா, ஜெயவர்த்தனே, சங்ககாரா ஆகிய நால்வரும் இலங்கை கிரிக்கெட்டின் மகத்தான வீரர்கள்
நாற்பது ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்ததில், இலங்கை வீரர் திலீப் மெண்டிஸ் விளையாடிய ஒரு ஆட்டம் இன்னமும் என் நினைவிலிருந்து நீங்காமல் இருக்கிறது. 1975 நவம்பர் மாத முதல் வாரத்தில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் அந்த ஆட்டம் நடந்தது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றிராத இலங்கை அணி, அப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, வடக்கு மண்டல அணிக்கு எதிராக அவர்கள் விளையாடினர்.
மெண்டிஸின் தந்தை தீவிர கிரிக்கெட் ரசிகர். கே.எஸ். திலீப் சிங்ஜி மீது அவருக்கு அளப்பரிய ஈடுபாடு. இந்திய கிரிக்கெட்டின் சிகரம் என்று கருதப்படும் ரஞ்சித் சிங்ஜியின் உறவினர்தான் திலீப் சிங்ஜி. எனவே, அவருடைய பெயரில் இருந்த திலீபைச் சேர்த்துத் தன் மகனுக்கு திலீப் மெண்டிஸ் என்று பெயரிட்டார்.
நான் குறிப்பிட்ட அந்த நாளில் கோட்லா மைதானத்தில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களையே அவர் எதிர்கொண்டார். மதன்லால், மொகீந்தர் அமர்நாத், இடது கை சுழல்பந்து மன்னர் பிஷன் சிங் பேடி, ராஜீந்தர் கோயல் ஆகியோர் பந்து வீசினர்.
மெண்டிஸின் சாகசங்கள்
வடக்கு மண்டலம் முதலில் பேட் செய்து 300-க்கும் அதிகமாக ரன்களைக் குவித்தது. இலங்கைத் தரப்பில் முதலில் சில விக்கெட்டுகள் சரிந்தன. பிறகு, மெண்டிஸ் தனது அணியின் மானத்தைக் காக்கும் விதத்தில் சிறப்பாக ஆடினார். பந்துகளை வெட்டியும், இழுத்தும், செலுத்தியும், பெருக்கியும் ரன்களைக் குவித்தார். அவருடைய பேட் அன்று அனல்கக்கியது. அன்றைக்கு அவர் அடித்த சில அடிகள் என் நெஞ்சில் ஆழமான வடுக்களாகப் பதிந்துவிட்டன. பேடி வீசிய பந்தை கவர் திசையில் அவர் விரட்டியது அவற்றில் ஒன்று. வானத்தில் எதையோ தேடும் ஆரம்போல உயரப் பறந்து, பிறகு தாழ்ந்து தரையில் பட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி ஓடியது.
1982-ல் இலங்கைக்கு டெஸ்ட் விளையாட்டு அணி என்ற அந்தஸ்து அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தில் விளையாடினார்கள். கிரிக்கெட்டின் தாய் மண்ணிலேயே விளையாடப்பட்ட அந்தப் போட்டியின் நேர்முக வர்ணனையை வானொலியில் கேட்டேன். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். இங்கிலாந்து பந்து வீச்சை - அதிலும் குறிப்பாக இயான் போத்தமை - மெண்டிஸ் நன்றாகப் பதம்பார்த்தார். என் நினைவு சரியாக இருக்குமானால்- போத்தமின் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மூலம் அவர் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் போத்தம் அதற்குப் பழிதீர்த்துக்கொண்டார். மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் நன்றாக ஆடி 94 ரன்களை எட்டினார். அதில் 9 பவுண்டரி
கள், 3 சிக்சர்கள். முதல் இன்னிங்ஸில் நூறைத் தொட்ட அதே விதத்தில் மறுபடியும் தொட நினைத்து பந்தைத் தூக்கி அடித்து, அதே போத்தம் கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.
திலீப் மெண்டிஸுக்கு முன்னாலும் இலங்கையில் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருந்தனர். கர்னல் பிரடெரிக் சிசில் டெரக் தே சரம் (1930-கள்), எம். சதாசிவம் (1940-கள்), காமின் குணசேன (1950-கள்), மைக்கேல் திஸ்ஸரா (1960-கள்) அவர்களில் சிலர். மிகச் சிறந்த இந்த முன்னோடிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெறும் அளவுக்கு அதிர்ஷ்டமானவர்கள் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபோது மெண்டிஸே 30 வயதை எட்டியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய ரன் சராசரி 30-க்கும் மேல் - அவ்வளவுதான். எனினும், உயர்தரப் பந்து வீச்சுகளை எதிர்கொண்டு அவற்றை அடக்கியதில் அவர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார்.
1975-ல் டெல்லி கோட்லா மைதானத்தில் நான் பார்த்த போட்டியில் அவர் அடித்த செஞ்சுரியும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு வானொலியில் நான் கேட்ட, லார்ட்ஸ் மைதானத்தின் இரண்டு இன்னிங்ஸ்களில் அவர் ஆடிய அற்புத ஆட்டமும் தனித்துவமானவை. அவர் விளையாடியதைப் பார்த்தேயிராத இப்போதைய இளைஞர்களுக்கு அவர் எப்படி விளையாடினார் என்பதைப் பார்க்க ஆசையாக இருந்தால், யூ டியூபில் பார்க்கலாம் (காண்க: https:www.youtube.com/watch?v=XHBH9a9pNv0).
அரவிந்த டி சில்வா
இயான் போத்தமின் பந்துவீச்சை மெண்டிஸ் பதம்பார்த்த அதே ஆட்டத்தில் அணியில் முதல்முறையாக இடம்பெற்ற மற்றோர் இளைஞர் அரவிந்த டிசில்வா. அவருடைய பாதங்கள் பந்துவீச்சுக்கேற்ப முன்னும் பின்னும் வெகு எளிதாகப் போய்த் திரும்பும். வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெட்டவும் இழுத்து அடிக்கவும் தன்னுடைய பேட்டிங் கிரீஸுக்குள் பின்நகர்ந்து அடிப்பார். சுழல்பந்து வீச்சாளர்களின் பந்துகளை, சில அடிதூரம் முன்னால் வந்து அடித்து விரட்டுவார்.
டெஸ்ட் போட்டிகளில் அரவிந்த டி சில்வா சில அற்புதமான இன்னிங்ஸ்களில் ஜொலித்திருக்கிறார். எனினும், 1996 உலகக் கோப்பை அரை இறுதியிலும் இறுதி ஆட்டத்திலும் அவர் ஆடிய விதத்துக்காகத்தான் இன்றும் நினைவுகூரப்படுகிறார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடப்பட்டது. இலங்கை அணி ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இரண்டு தொடக்க வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். அரவிந்த டி சில்வா வேகமாக நடந்துவந்து பந்துவீச்சை எதிர்கொண்டார். விரைவிலேயே ஆட்டத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். முதல் இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்த நாத்தைப் பதம்பார்த்தார். அனில் கும்ப்ளேயின் பந்துவீச்சை முழுமையாக ஆட்கொண்டார். விக்கெட்டின் நாலா பக்கங்களிலும் பந்து பவுண்டரிகளுக்குப் பறந்தது.
டி சில்வா இந்தப் போட்டியில் நூறை எட்டிவிடுவார் என்று நினைத்திருந்தபோது கும்ப்ளேயிடமிருந்து மின்னலாக வந்த கூக்லி ஒன்று அவருடைய தடுப்பு அரணைத் தாண்டி விக்கெட்டைத் தகர்த்தது. 47 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்தார். அவற்றில் 14 பவுண்டரிகள். ஆட்டத்தின் போக்கைத் தன் அணிக்குச் சாதகமாக மாற்றியிருந்தார். அவருக்குப் பிறகு ஆட வந்தவர்கள் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தி அணியை வலுப்படுத்தினர். இறுதியாக இலங்கை அணி 251 ரன்களை எட்டியது. அதை இந்திய அணி எட்டுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது.
இறுதிப் போட்டியில், சக்திவாய்ந்த ஆஸ்திரேலியர்கள் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் திட்டத்துடன் முதலில் மட்டைவீசப் புகுந்தார்கள். அவர்கள் 241 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டனர். கிளென் மெக்ராத்தும் ஷேன் வார்னும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சுக்கு மையமாகச் செயல்பட்டாலும் அவர்களுடைய 241 ரன்கள் என்ற இலக்கு எளிதில் எட்டக்கூடியதாகவே இருந்தது. ஆனால், இலங்கை அணியின் முதல் இரு ஆட்டக்காரர்களும் அணியின் ரன்கள் 23 ஆக இருந்தபோதே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர். அரவிந்த டி சில்வா அப்போது களமிறங்கினார். மிக மெதுவாகவே ரன் சேகரிப்பில் இறங்கினார். அவருடைய பாதங்கள் தரையில் நன்றாகப் பாவ ஆரம்பித்தவுடன் மட்டையிலிருந்து ரன்கள் பறந்தன. கட்டுப்பாட்டுடன் ஆடிச் சதமடித்தார். கும்ப்ளேயைவிட ஷேன் வார்னின் பந்தில் தன்னால் எளிதில் ஆடிவிட முடியும் என்று காண்பித்தார்.
இரண்டு சகாக்கள்
அரவிந்த டி சில்வாவின் காலத்துக்குப் பிறகு, அவரைவிடத் திறமைசாலிகளான மகிள ஜெயவர்த்தன, குமார சங்ககாரா இடம்பெற்றனர். இருவருமே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். ஜெயவர்த்தன மென்மையாகவும் நளினமாகவும் பந்துகளை வெட்டியும், கவர் திசையில் செலுத்தியும் அடிப்பார். சங்ககாரா சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் ஆடுவார். பந்துகளைக் காலுக்கு இடையிலிருந்து பெற்று, பாயின்ட் திசையைக் கடக்கும் வகையில் விசையுடன் அடிப்பார். கடந்த 10 ஆண்டுகளாக - அதற்கு மேலாகவும் - அவ்விரு வரும் இலங்கை அணியின் பேட்டிங் சரிந்துவிடாமல் கட்டிக்காத்து வந்துள்ளனர்.
சமீபத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் ஜெயவர்த்தனவும் சங்ககாராவும் ஆடியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். முதல் இன்னிங்ஸில் இருவரும் சேர்ந்து நூறு ரன்களைக் குவித்தனர். 55 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெயவர்த்தன ஆட்டமிழந்தார். சங்ககாரா ஆட்டமிழக்கும் வாய்ப்பு ஏதும் தராமலே 147 ரன்களைக் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் சங்ககாரா 50 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் இல்லாமல் அந்தப் போட்டியில் இலங்கையால் தோல்வியைத் தவிர்த்திருக்கவே முடியாது.
ஜெயவர்த்தன மிகவும் விரும்பப்பட்ட பேட்ஸ்மேன். அவருடைய சகா சங்ககாரா நல்ல மனிதர்; மேலும், புத்திசாலித்தனமாகச் செயல்படக்கூடியவர். சங்ககாரா வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, வழக்கத்துக்கு மாறாக எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர், நன்றாகப் படித்தவர், மிகுந்த புத்திசாலி. 2011-ல் எம்.சி.சி. ஆதரவில் நடந்த, ‘கிரிக்கெட்டின் உத்வேகம்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியபோது, அவருடைய அறிவுத்திறன் வெளிப் பட்டது. அதில் வரலாறு, விளையாட்டு, அரசியல் என்று எல்லாமும் சரியான விகிதத்தில் கலந்திருந்தன.
35 தமிழ் நண்பர்களைக் காப்பாற்றிய குடும்பம்
தன்னுடைய உரையின் ஊடே, 1983-ல் இலங்கையில் நடந்த இனக் கலவரம்பற்றியும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரக்காரர்கள் கொலைவெறியுடன் செயல்பட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தாரும் தங்களுக்குத் தெரிந்த 35 தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். உரையின் இறுதியில், மதங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடும்போது நான் தமிழன், சிங்களன், முஸ்லிம், பர்கெர், பௌத்தன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன்” என்று உணர்ச்சிகரமாக முடித்தார்.
கொழும்பில் நான் ஆற்றிய ஒரு உரையில் இந்திய கிரிக்கெட் வீர்ர்களில் இறந்தவர்களிலும் சரி, இப்போதுள்ளவர்களிலும் சரி அவரைப் போல அனுதாபத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் எவருமே பேசியிருக்க முடியாது என்பதைக் குறிப்பிட்டேன். எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர், எப்படிப்பட்ட மனிதர்!
- ராமச்சந்திர குஹா, வரலாற்று ஆசிரியர். தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT