Published : 06 Feb 2023 06:51 AM
Last Updated : 06 Feb 2023 06:51 AM
சங்கர்-கணேஷ் இசையமைப்பில் ‘பாலைவனச்சோலை’ படத்தில் இடம்பெற்ற ‘மேகமே... மேகமே’ பாடல் குறித்து வார இதழ் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்று இப்போதும் நினைவில் இருக்கிறது. அந்தப் பாடல் ஜக்ஜீத் சிங்கின் ‘தும் நஹி கம் நஹி’ எனும் கஜலின் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருந்த விமர்சகர், ‘இசையமைப்பாளர்கள் இந்த விஷயத்தை வாணி ஜெயராமிடம் சொல்லி அனுமதி வாங்கியிருந்தார்களா எனத் தெரியவில்லை’ எனும் கருத்தையும் பதிவுசெய்திருந்தார்.
அதை வாசித்தபோது, ‘பாடகர்களிடம் இதற்கெல்லாமா அனுமதி வாங்குவார்கள்?’ என்று ஒரு கணம் தோன்றியது. எனினும், ஒருவேளை அப்படியெல்லாம் எழுதப்படாத விதிகள் இருந்திருந்தாலும், வளமான இசைப் பின்னணி கொண்ட வாணி ஜெயராம் அதில் நிச்சயம் விதிவிலக்கானவராகவே இருந்திருப்பார் எனப் பின்னாட்களில் உணர முடிந்தது.
தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற பின்னர் திரைக் கலைஞர்கள், ஒருகட்டத்தில் பாலிவுட்டில் கால் பதிப்பது உண்டு. இந்தியில் பாடிப் புகழ்பெற்ற பின்னர் தமிழுக்கு வருகை தந்த பாடகர்களும் உண்டு - கவிதா கிருஷ்ணமூர்த்தி ஓர் உதாரணம். ஆனால், இந்தியில் கிடைத்த புகழுக்கு இணையாக, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் பாடல்கள் மூலம் பெரும் புகழை அடைந்த பெண் பாடகர் வாணி ஜெயராம் மட்டும்தான்.
பண்டிட் ரவிசங்கர் தொடங்கி இளையராஜா வரை இசை மேதைகளின் நல்மதிப்பைப் பெற்றிருந்தவர் அவர். இசைக் கச்சேரிகளில் அவரது வரவும் பங்கேற்பும் பெரும் மதிப்புக்குரியவையாகக் கருதப்பட்டது அவரது மேதைமைக்குச் சான்று.
இந்தியில் தொடக்கம்: வேலூரில் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்து, ஐந்து வயதிலேயே கடலூர் சீனிவாசனிடம் கர்னாடக இசை கற்றுக்கொண்ட வாணி ஜெயராம், திருமணமாகிக் கணவருடன் மும்பை சென்று வங்கி ஊழியராகப் பணியாற்றத் தொடங்கிய பின்னர்தான் இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டார். உஸ்தாத் அப்துல் ரஹ்மானிடம் சிரத்தையுடன் தும்ப்ரி, கஜல் உள்ளிட்ட இசை வடிவங்களையும் கற்றுத்தேர்ந்த வாணி ஜெயராம், இசை மேடைகளையும் அலங்கரிக்கத் தொடங்கினார்.
1971இல் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய ‘குட்டி’ (Guddi) திரைப்படத்தின் பாடல்களைப் பாட புதிய குரல் ஒன்று தேவைப்பட்டது. அப்போதுதான் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் தனது நண்பரும் இசையமைப்பாளருமான வசந்த் தேசாயிடம் வாணி ஜெயராமை அறிமுகப்படுத்தினார். “தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கும் இந்தப் பெண் மிக வேகமாக இசையைக் கிரகித்துக்கொள்கிறார்” என்று சான்றிதழும் கொடுத்திருந்தார்.
வாணி ஜெயராமின் மதுரக் குரலில் மயங்கிய வசந்த் தேசாய், அந்தப் படத்தில் மூன்று முக்கியமான பாடல்களைப் பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அவற்றில் ஒன்றான ‘போலே ரே பப்பிஹரா’ எனும் பாடல் பெரும் புகழ்பெற்றது. அந்தப் பாடலைக் கேட்டவர்கள் ஒரு கணம் அது லதா மங்கேஷ்கரின் குரலா எனச் சற்றே குழம்பினர். எனினும், அது ஒப்புமை இல்லாத விசேஷக் குரல் என்பதை விரைவிலேயே இசையுலகம் கண்டுகொண்டது. இளம் வயதிலிருந்தே லதா மங்கேஷ்கரின் பாடல்களைக் கேட்டுத் திளைத்திருந்தவர் என்றாலும், தனது ஆளுமைமிக்க வசீகரக் குரலால் தனித்த முத்திரையைப் பதித்தார் வாணி ஜெயராம்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘ஹம் கோ மன் கி ஷக்தி தேனா’ பாடல், மகாராஷ்டிரத்தின் பள்ளிகளில் காலை நேரப் பிரார்த்தனைப் பாடலாக ஒலிக்கத் தொடங்கியது. முதல் படமே அவருக்கு தான்சென் விருதைப் பெற்றுத் தந்தது. வாய்ப்புகள் குவிந்தன. ஓ.பி.நய்யார், நௌஷாத், ஆர்.டி.பர்மன், சித்ரகுப்த், கல்யாண்ஜி - ஆனந்த்ஜி, மதன் மோகன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் அற்புதமான பாடல்களைப் பாடினார்.
விரிவடைந்த சாம்ராஜ்ஜியம்: எல்லா மொழிகளிலும் அவர் பாடிய முதல் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது அவரது தனிச்சிறப்பு. கர்னாடக இசைப் பின்னணி கொண்ட அவரது வரவு, செவ்வியல் இசை அடிப்படையிலான பாடல்களின் எல்லைகளை விரிக்கும் வகையிலான கற்பனாவாதத்தைத் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுக்குக் கூடுதலாக வழங்கியது.
அவரது வளமான கஜல் பின்னணியால் ‘மேகமே மேகமே’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’, ‘என்னுள்ளில் எங்கோ’ போன்ற நுட்பமான பாடல்கள் தமிழுக்குக் கிடைத்தன. தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர்-கணேஷ், ஷ்யாம், கே.வி.மகாதேவன்உள்ளிட்டோரின் இசையில் பாடி, வரவேற்பையும் விருதுகளையும் பெற்ற வாணி ஜெயராம், 1979இல் கவிஞரும் இயக்குநருமான குல்ஸார் இயக்கிய ‘மீரா’ திரைப்படத்தில் பண்டிட் ரவிசங்கர் இசையில் 12 கஜல் பாடல்களைப் பாடியதன் மூலம் உச்சபட்சப் புகழை எட்டினார்.
திரையிசை கேட்பதை விரும்பாத குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், சிறுமியாக இருந்தபோதே இந்தித் திரைப்படப் பாடல்களை வானொலியில் கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டவர் வாணி ஜெயராம். “எதிர்காலத்தில் இந்திப் பாடல்களைப் பாடிப் புகழ்பெற வேண்டும் எனும் ஆசை என் இளம்வயதிலேயே ஏற்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். தான் ரசித்த பாடல்களின் நிரவல் இசைத் துணுக்குகளை மனனம் செய்துகொள்ளும் அளவுக்குத் திரையிசை மீதான ஆர்வம் அவருக்கு இருந்தது. அந்த ஆர்வம் பின்னாள்களில் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது.
தன் இசைப் பயணத்தின் எல்லா தருணங்களையும் தேதிவாரியாக நினைவில் வைத்திருந்தார். இந்தி ஊடகங்களில் தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பாடிக்காட்டி, அவற்றின் மேன்மையைப் பரப்பினார். கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, திரையிசை என எல்லா வகைமைகளையும் சமமாக மதித்தார். காபரே பாடல்களையும் கடவுள் பக்திப் பாடல்களையும் ஒரே வகை ஒழுங்குடன் கையாண்டார்.
எந்த மொழியாக இருந்தாலும் தான் பங்களிக்கும் பாடலின் ஆன்மாவைப் பரிபூரணமாக உணர்ந்து பாடினார். ஓர் இந்திப் படத்தின் தமிழ் டப்பிங்குக்காகச் சென்னை வந்திருந்த இசையமைப்பாளர் மன்னா தே, வாணி ஜெயராம் ஒரு தமிழர் எனும் தகவல் கேட்டு அதிசயித்தார். அந்த அளவுக்கு இந்தி உச்சரிப்பின் மூலம் ஒரு வட இந்தியராகவே அறியப்பட்டிருந்தார் வாணி ஜெயராம்.
இசை மீதான பித்து: வங்கியில் கணக்காளராகப் பணிபுரிந்த காலத்திலும் அவரது மனம் முழுவதிலும் இசைமட்டும்தான் வியாபித்திருந்தது. ‘இசைத் துறைக்கு வரவில்லை என்றால்?’ எனும் கேள்விக்கு, “பைத்தியமாகியிருப்பேன்” என்று பதிலளித்தவர் அவர். அதனால்தான் திரையிசை வாய்ப்புகள் அருகியதை பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் என வேறு வகைகளில் சமன்படுத்திக்கொண்டார். ஆந்திரம் தொடங்கி ராஜஸ்தான் வரை பல மாநிலங்களின் கலை - பண்பாட்டு நிகழ்வுகளில் மிகுந்த மதிப்புடன் அவர் வரவேற்கப்பட்டார்.
குழந்தைப் பேறு இல்லாதது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கலாம். எல்லாவற்றையும்விட, தன் இசை வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த கணவர் ஜெயராமின் மறைவுதான் அவரைப் பெரிதும் வருத்தியது. பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது அவரது இறுதிக்காலத் தனிமையைச் சற்றே நெகிழ்த்தியது. எனினும், விருதைத் தன் கையால் பெறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். தேசம் முழுமைக்குமாகத் தென்னிந்தியாவிலிருந்து முகிழ்த்த குரலாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் வாணி ஜெயராம்.
- வெ.சந்திரேமாகன்; தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT