Published : 23 May 2017 09:17 AM
Last Updated : 23 May 2017 09:17 AM
சுகாதாரக் கொள்கை வரைவு மூன்று ஆண்டுகள் விவாதத்திலிருந்து, 5,000 ஆலோசனை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில் இப்போது தேசிய சுகாதாரக் கொள்கை 2017 (என்.எச்.பி-17) வெளிவந்துள்ளது. எல்லாருக்கும் அடிப்படையான மருத்துவ சேவைகளையும், மருந்துகளையும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வது போன்ற பல குறிக்கோள்களைக் கொண்டதாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது. 2025-க்குள் 30 சுகாதாரக் குறியீடுகளை அடைய வேண்டும் என்று இக்கொள்கை கூறுகிறது. உதாரணமாக, தற்போதுள்ள எதிர்பார்க்கப்பட்ட சராசரி வாழ்நாளை 67.5 ஆண்டுகளிலிருந்து 70 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.
ஒரு குடும்பம் தனது மாதச் செலவுகளில் 10%-க்கு மேல் மருத்துவத்துக்குச் செலவு செய்தால், அதனை நிலைதடுமாறும் செலவு என்று இந்தக் கொள்கை அறிக்கை கூறுகிறது. குடும்பத்தையே வறுமைக்குத் தள்ளிவிடும் அளவுக்கு மருத்துவச் செலவுகள் பெரும் பாரமாக இருக்கின்றன. ஒரு புறம் அரசு மருத்துவமனைகள் போதுமானதாக இல்லை. மற்றொரு புறம், தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாடின்றி அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. நாட்டின் உள்நோயாளிகளின் எண்ணிக்கையில் 37% தான் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துகின்றனர். அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் விகிதத்தை உயர்த்த வேண்டும்.
இதற்காக அரசின் மருத்துவத் துறைச் செலவுகள் 2025-க்குள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5% ஆக உயர்த்தப்படும் என்று இந்தக் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போதைய 1.5% அதிகம் என்றாலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தச் செலவு குறைவு. மேலும், இந்தக் கொள்கை வரைவு கூறும் குறிக்கோள்களை அடைய இந்தச் செலவு போதுமானதாக இருக்காது என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக, மருந்துகள் வாங்கும் செலவுகள் கூடிக்கொண்டே போகின்றன. இதனைக் குறைப்ப தற்காக மருந்து நிறுவனங்கள் அளிக்கும் பெயர் களை எழுதாமல், அவற்றின் பொதுப் பெயரை எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறி யுள்ளது. ஆனால், இதனுடன் செய்ய வேண்டிய அவசியமான செயல்பாடு என்னவெனில், மருந்து நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்யவேண்டும். சிறிய, பெரிய நிறுவனங்கள் எல்லாமே விதி மீறல்களைச் செய்கின்றன என்று பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இது பற்றியதெளிவான கொள்கையும் செயல்முறையும் அவசியம்.
தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொரு மருத்துவ சேவைக்கும் சரியான விலையைக் குறிப்பிட்டு, அதனை எல்லாருக்கும் தெரிவிக்கும் வகையில் இருக்க வேண்டும். நோயாளிகளின் உரிமைகளான நோயைப் பற்றிய, அளிக்கப்படும் மருத்துவ சேவைபற்றிய அனைத்து விவரங்களும் அவர்களுக்குப் புரியும்படி தெரிவிக்க வேண்டும். மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது அனைத்து மருத்துவ அறிக்கைகளும் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதற்காகப் புதிய சட்டம் இயற்றி, ஒரு ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கை பற்றி இந்தக் கொள்கை வரைவு ஏதும் கூறாதது ஏமாற்றம்தான்.
தனியார் மருத்துவ நிறுவனங்களை இணைத்து மருத்துவ சேவைகளை வழங்க இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் சுகாதாரக் கொள்கையின் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். ஆனால் இல்லை. அதேபோல அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களை, மற்ற அலுவலர்களை எப்படித் திறமையாகச் செயல்பட வைப்பது என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இதுவும் மருத்துவக் கொள்கையின் அங்கமாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும், ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது இந்தக் கொள்கை வரைவு.
இராம. சீனுவாசன், பேராசிரியர்,
தொடர்புக்கு: seenu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT