Published : 22 May 2017 08:14 AM
Last Updated : 22 May 2017 08:14 AM
வா, போ, விடு, கொண்டு எனப் பல சொற்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு பிரித்து அல்லது சேர்த்து எழுதுவது பற்றிப் பார்த்தோம். ‘போது’ என்பதுபோலச் சற்றே மாறுபட்ட தன்மை கொண்ட சில சொற்களும் உள்ளன. வரும்போது, செல்லும்போது, கொடுத்தபோது எனப் பெரும்பாலும் இது சேர்ந்தே வரும். பொழுது என்னும் பொருளில் மிக அரிதாக வரும்போது மட்டும் பிரித்து எழுதலாம். பொழுது என்பதைப் போது என்று சொல்வது பெரும்பாலும் கவிதை மரபைச் சேர்ந்தது என்பதால் ( ‘ஹே பூதலமே அந்தப் போதினில்’ - பாரதியாரின் ‘பாஞ்சாலி சபத’த்தில்) சமகால உரைநடையில் இது அந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே ‘போது’ என்பதை எப்போதும் சேர்த்து எழுதலாம்.
வரும்பொழுது, வரும்போது இரண்டுக்கும் ஒரே பொருள்தான். எனவே, இந்த இடத்தில் போது என்பதைச் சேர்த்து எழுதுவதுபோலவே பொழுது என்பதையும் சேர்த்து எழுத வேண்டும். பொழுது என்னும் சொல் ஒரு பொழுது, காலைப் பொழுது எனத் தனிப் பொருள் கொண்டு காலத்தைக் குறிக்கும்பொழுது பிரித்து எழுத வேண்டும்.
கீழ்க்காணும் இணைகளை ஆராய்ந்தால் சேர்த்து, பிரித்து எழுதுவது குறித்து மேலும் தெளிவுபெறலாம்.
கீழே வை - முடித்துவை, அங்கே பார் - யோசித்துப்பார், ஊரிலிருந்து வந்தார் - ஊரில் இருந்துவந்தார், கையை விடு - கேட்டுவிடு, அதுகூடத் தெரியாதா அங்கே கூட வேண்டாம் சில சொற்களின் கடைசியில் ஏகாரம் சேர்க்கும்போது மாறுபட்ட பொருள் கிடைக்கும். எ.டு.: ‘அவள் சொல்லிவிட்டாள்’, ‘அவளே சொல்லிவிட்டாள்’. ‘அதுவே அதிகம்’, ‘தரவே கூடாது’, ‘வேண்டவே வேண்டாம்’ ஆகிய தொடர்களில் ஏகாரம் பொருள் மாறுபாட்டைத் தருகின்றன. இத்தகைய அழுத்தத்தை எங்கே தருவது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘திரும்பி வரவே தோன்றாது’ என்றால், இனி ஒருபோதும் திரும்பி வரத் தோன்றாது என்னும் பொருள் வருகிறது. இதை ‘திரும்பியே வரத் தோன்றாது’ எனச் சிலர் எழுதுகிறார்கள். திரும்பி என்பதில் அழுத்தம் கொடுக்கும்போது அந்த அழுத்தம் உரிய பொருளைக் கொடுப்பதில்லை.
‘அதையே பார்க்கக் கூடாது’, ‘அதைப் பார்க்கவே கூடாது’ ஆகிய இரண்டுமே சரியான தொடர்கள்தாம் ஆனால், இரண்டிலும் அழுத்தம் பெறும் இடத்துக்கேற்பப் பொருள் மாறுபடுகிறது. நமக்கு எந்தப் பொருள் வேண்டும் என்பதைப் பொறுத்து எங்கே அழுத்தம்தர வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT