Published : 30 Jan 2023 08:06 AM
Last Updated : 30 Jan 2023 08:06 AM
துக்கத்தில் மூழ்கிக்கிடந்த நாட்டு மக்களிடையே 1948 ஜனவரி 30 மாலை, அகில இந்திய வானொலி மூலமாக, பிரதமர் ஜவர்ஹலால் நேரு உரையாற்றினார். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அவரது சொற்கள் அப்போதும் கவித்துவத்துடன் இருந்தன.
"நண்பர்களே, தோழர்களே, நம் வாழ்வில் ஒளி ஏற்றிய தீபம் அணைந்து, எங்கனும் இருள்மண்டிக் கிடக்கிறது. உங்களுக்கு எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறேன். நம் அனைவரின் அன்பிற்குரிய தலைவர், நாம் பாசமுடன் ‘பாபு’ என்று அழைத்த அண்ணல், இந்தத் தேசத்தின் தந்தை, இப்போது நம்மிடையே இல்லை. இப்படி நான் சொல்வதுகூடத் தவறாக இருக்கலாம். ஆனாலும், பல ஆண்டுகளாக அவரை நேரில் கண்டது போல், இனி நாம் அவரைக் காணமுடியாது. அறிவுரை வேண்டியோ, ஆறுதல் நாடியோ இனி அவரிடம் நாம் ஓட முடியாது.
நமது வாழ்வின் ஒளி தீபம் அணைந்துவிட்டது என்றேன். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், இந்தத் தேசத்திற்கு ஒளி வழங்கிய அந்தச் சுடர் சாதாரணமானதன்று. பல ஆண்டுகளாக இந்தத் தேசத்திற்கு ஒளியைத் தந்து வழிகாட்டிய அந்த ஒளிவிளக்கு, இனிவரும் பல்லாண்டுகளுக்கும் தொடர்ந்து நல்வழி காட்டும். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் அந்த ஒளிவிளக்கினை இந்த உலகமே காணக்கூடும். அப்போதும் அது சுடர்விட்டுக்கொண்டு, எண்ணற்ற இதயங்களுக்கு ஆறுதல் தரும் ஆன்ம சக்தியாக விளங்கும்.
ஏனென்றால், நிகழ்காலத்தைவிடவும் மேலான ஒன்றின் அடையாளமாக அந்த விளக்கு இருந்தது. வாழ்வின் அடையாளமாக, எஞ்ஞான்றும் அழியாத, உண்மையின் அடையாளமாக, நேரிய வழியை நமக்கு அறிவுறுத்துவதாக, தவறான பாதையிலிருந்து நம்மை மீட்டெடுப்பதாக, தொன்மையான இந்தப் பாரதத்தைச் சுதந்திரத்திற்கு இட்டுச் செல்வதாக அந்த விளக்கு இருந்தது.
அவருக்கென்று பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இந்த நாட்டுக்காகவே தன்னை அவர் அர்ப்பணித்தார். அவர் அவசியமற்றவர் என்றோ, அவர் பணியைத் தான் அவர் செய்தார் என்றோ ஒருபோதும் எவரும் நினைக்கமுடியாது. அதிலும் குறிப்பாக, இப்போது எண்ணற்ற இடர்ப்பாடுகளை நாம் எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், அவர் நம்மிடையே இல்லாதது தாங்கவொண்ணாத பேரிடியாக இருக்கிறது.
பைத்தியக்காரன் ஒருவன் அவர் வாழ்வுக்கு முடிவு கட்டிவிட்டான். அவனைப் பைத்தியம் என்றே நான் சொல்வேன். கடந்த சில மாதங்களாக, ஆண்டுகளாக, நம் நாட்டில் நஞ்சைப் பரப்பி இருக்கிறார்கள். அது, நம் மக்களின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது. இந்த நஞ்சை நாம் வேரோடு களைய வேண்டும். நம்மைச் சூழ்ந்து நிற்கின்ற அழிவுச் சக்திகள் யாவற்றையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், முட்டாள்தனமாகவோ, மோசமாகவோ அல்ல. மாறாக, நமது அன்புக்குரிய ஆசான் நமக்குக் கற்பித்த வழியில் அவற்றை நாம் எதிர்கொள்வோம்.
நம்மில் எவரும் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளத் துணிந்ததில்லை என்பதை நினைவு கூர்வோம். திடச்சித்தம் கொண்ட பலசாலிகளாக நம்மைச் சூழ்ந்துள்ள எல்லா விதமான அழிவுசக்திகளையும் நமது ஆசானும் தலைவருமான அண்ணல் காட்டிய வழியில் எதிர்கொண்டு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவோம். அந்தப் புனிதரின் ஆன்மா நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றஉணர்வோடு, அற்பமான செயல்களோ, வன்முறையோ அவருடைய ஆன்மாவுக்கு மகிழ்வூட்டாது என்ற தெளிவான புரிதலோடு நாம் செயல்படுவோம்.
எனவே, எந்த விதமான தவறான காரியத்தையும் நாம் செய்ய மாட்டோம். அதற்காக நாம் கோழைகள் என்று பொருளாகாது. மாறாக, நம்மை எதிர்கொண்டுள்ள துன்பங்களை எல்லாம்ஒற்றுமை என்ற பலத்தோடு சமாளிக்கிறோம். இந்தப் பெருந்துயரத்தின் முன்னே, அற்பமான நமது சச்சரவுகளையும் பூசல்களையும் மறந்துவிட்டு ஒன்றுபடுவோம். வாழ்வில் நாம் பெரிதாக எண்ணியிருக்கிற அற்ப விஷயங்களைத் தூர எறிந்துவிட்டு, சாதிக்க வேண்டிய பெரும் காரியங்களில் கவனம் செலுத்துவோம்.
அண்ணல் தனது மரணத்தில், வாழ்வின் மாபெரும் லட்சியங்களை நமக்கு நினைவூட்டிச் சென்றுள்ளார். அவரது சத்திய வாழ்க்கையை நாம் எப்போதும் நினைவில் கொண்டால், இந்தத் தேசம் மாபெரும் பலன்களை நிச்சயம் பெற்றுவிடும். எனவே, சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில், டெல்லியின் யமுனை நதிக் கரையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும். பிர்லா மாளிகையில் இருந்து காலை 11.30 மணிஅளவில், அண்ணலின் உடல் ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்படும்.
அண்ணலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் டெல்லி வாழ்மக்கள், ஊர்வலப் பாதையில் வந்து அஞ்சலி செலுத்தலாம். பிர்லா மாளிகைக்குப் பெருந்திரளாக வருவதைத் தவிர்த்துவிட்டு, இறுதிஊர்வலம் செல்லும் பாதைக்குவந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊர்வலப் பாதையிலும் எவ்வித ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்தாமல் அமைதி காப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன். மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அதுவே உகந்த வழியாகும்.
நமது பிரார்த்தனைகளில் மிகப்பெரிய பிரார்த்தனை, இந்தத் தேசத்தின் மகாத்மா எந்த உயரியநோக்கத்திற்காக வாழ்ந்து தனது இன்னுயிரை ஈந்தாரோ, அந்த உயரிய சத்திய வாழ்க்கைக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதென்று உறுதிபூணுவதே ஆகும்.
அண்ணலின் நினைவிற்கு நாம் செய்யக்கூடிய சீரிய பிரார்த்தனை அதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியாவிற்கும் நமக்கும்நாம் செய்து கொள்ளக்கூடிய உன்னதமான பிரார்த்தனையாக அதுவே இருக்கும்.
ஜெய் ஹிந்த்!"
(ஆ. கோபண்ணா எழுதி, சமீபத்தில் வெளிவந்த ‘மாமனிதர் நேரு’ என்னும் நூலிலிருந்து...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT