Published : 05 Dec 2016 06:17 AM
Last Updated : 05 Dec 2016 06:17 AM
ஆங்கிலத்தில் கலைச் சொற்களைத் தமிழில் பெயர்க்கும்போது ஒரே சொல்லாகக் கொண்டுவர முடியவில்லை என்னும் ஆதங்கம் நியாயமானது. கலைச் சொற்களும் துறைசார் சொற்களும் (globalisation, demonetisation, faculty, fellowship…) ஒரு மொழியில் இயல்பாக உருவாகும்போது, அம்மொழிக்கே உரிய தன்மையுடன் சிக்கனமாக உருவாகும். கலை / துறைசார் சொற்கள் பலவற்றுக்கு, நேரடிப் பொருள்கொள்ள இயலாது என்னும் நிலையில், அவை சுட்டும் பொருளை மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் சிக்கல் வரத்தான் செய்யும்.
அதே சிக்கல், தமிழிலிருந்து ஆங்கிலம் முதலான மொழிகளுக்குச் செல்லும்போதும் வரும். பரிசம்போடுதல், வெற்றிலை பாக்கு வைத்தல், களவொழுக்கம், மூக்கில் வியர்த்தல், சொறிந்து கொடுத்தல் முதலானவற்றை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது, இதுபோன்ற சிக்கல் வரத்தான் செய்யும். எனவே, மொழிபெயர்ப்புச் சிக்கல்களை, அதிலும் கலை / துறைசார் சொற்களின் மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தமிழ் மொழிக்கே உள்ள சிக்கல்போலப் பேசுவது பிழையானது. (மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி இந்தப் பத்தியில் தனியாக அணுகவிருக்கிறேன்.)
படைப்பூக்கமும் மொழி ஆளுமையும் உள்ளவர்களிடத்தில் சிக்கனம் அவர்களுடைய இயல்பாகவே இருப்பதைக் காணலாம். ஒரு பின்னணியை, கதையைச் சொல்லிக்கொண்டே போகும்போது அது தேவைக்கு அதிகமாக விரிந்துகொண்டுபோவதை உணரும் எழுத்தாளர், To cut a long story short என்று சொல்லி, சுருக்கமாக ஓரிரு சொற்களில் / வாக்கியங்களில் முடித்துவிடுவது உண்டு. விரித்துச் சொன்னது போதும் என உணரும்போதும் இப்படி நடக்கும். ஆங்கிலத்தில் இது இயல்பாகப் புழங்குவதைக் காணலாம். ஆங்கில வாசிப்பின் மூலம் இதை அறியும் சிலர், தமிழில், இதுபோன்ற சூழல்களில், ‘நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வதானால்’என எழுதத் தலைப்படுகிறார்கள். இது தமிழ்ப் பண்புடன் ஒட்டாமல் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது அல்லவா?
இதற்கு மாற்று என்ன? புதுமைப்பித்தன் மிக எளிதாக இதை எதிர்கொண்டிருக்கிறார். ‘வளர்த்துவானேன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஒற்றைச் சொல்லில் To cut a long story short என்பதன் சாரமும் தொனியும் கூர்மையாகப் பிரதிபலிப்பதைப் பாருங்கள். இந்தச் சொல் புதுமைப்பித்தனின் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால், இந்த இடத்தில், இப்படிப் பயன்படுத்தியது அவருடைய படைப்பாற்றல். தமிழை இயல்பாக உள்வாங்கி, இயல்பாகக் கையாளும்போது இவையெல்லாம் சாத்தியமாகும்.
ஆங்கிலமே பிறந்திராத ஒரு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்தும் உதாரணம் காட்டலாம். சீதையைக் கைப் பிடிக்க ராமன் சிவன் வில்லை முறித்தது ராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்வு. ராமன் மிக வேகமாகவும் இலகுவாகவும் இதைச் செய்கிறான். கம்பன் இதை ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்கிறார். வில்லை எடுத்ததைப் பார்த்தவர்கள் பிறகு வில் முறியும் ஒலியைத்தான் கேட்டார்களாம். நடுவில் நிகழ்ந்ததை ஒருவரும் அறியவில்லை. அவ்வளவு வேகமாக அது நடந்துவிட்டது என்கிறான் கம்பன். ராமனின் வில்லாற்றலுக்குச் சவால் விடும் இந்தச் சொல்லாற்றல் தமிழின் சிக்கனத்துக்குப் பொருத்தமான சான்றல்லவா? பிரச்சினை எங்கே இருக்கிறது? மொழியிலா, அதைப் பயன்படுத்துபவர்களிடத்திலா?
(மேலும் அறிவோம்…)
- அரவிந்தன் தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT