Published : 29 Dec 2016 09:11 AM
Last Updated : 29 Dec 2016 09:11 AM
தமிழக முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துவந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் ஒவ்வொரு நாளும் பல வதந்திகள் முளைத்துவருகின்றன. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை மையமாகக் கொண்டு எழும் வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாகப் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் யூகம் கிட்டத்தட்ட உறுதியான சாத்தியமாகப் பரவலாக நம்பப்பட்டுவரும் நிலையில் அவர் விரைவில் தமிழக முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் யூகம் முளைத்துள்ளது. இத்தகைய வதந்திகளுக்கு நடுவில் கட்சியின் பொதுக் குழு இன்று கூடுகிறது. இதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பதை வெறுமனே உள்கட்சி விவகாரமாகப் பார்க்க முடியாது. அதிலும், பொதுச் செயலாளருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியிருக்கும் அதிமுக போன்றதொரு கட்சியில் அது நிச்சயமாக உள்கட்சி விவகாரமல்ல. கட்சி, ஆட்சி, கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்து அம்சங்களிலும் முடிவெடுக்கவும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு உரிமை உண்டு. அதாவது, அதிமுகவின் பொதுச் செயலாளர் வெறும் கட்சி விவகாரங்களை மட்டும் கவனிக்க மாட்டார். ஆட்சியிலும் அவரது தலையீடு இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. கொள்கை சார்ந்த விஷயங்களிலும் அவருக்குப் பங்குண்டு.
மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பும் மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி போன்ற அந்தஸ்து கொண்டிருக்கும் கட்சியான அதிமுகவில் பொதுச் செயலாளருக்கும் முதல்வருக்கும் இடையே ஏற்படும் முரண்கள் ஆட்சியையும் நிர்வாகத்தையும் பாதிக்கவேசெய்யும். எனவே இந்தத் தேர்வு வெறும் உள்விவகாரம் அல்ல.
சசிகலாவே பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன. சட்டப்படி அது சாத்தியம்தான். இந்திய அரசியல் சட்டத்தின்படி சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் முதல்வர் / பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சசிகலா முதல்வராகத் தடையில்லை. ஆனால் நியாயத் தராசில் அது செல்லுபடி ஆகுமா?
அமெரிக்க அதிபரை அமெரிக்க மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதுபோல, இந்தியாவில் முதல்வரோ பிரதமரோ மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது சட்டம். ஆனால், நடைமுறை என்ன? இந்தியத் தேர்தல் ஜனநாயகம் ஆளுமைகளை மையம் கொண்டது. இங்கே பெரும்பாலான கட்சிகள் முதல்வர் / பிரதமரை முன்னிறுத்தியே களம் இறங்குகின்றன. கடந்த மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் தேர்தல்போலவே நடைபெற்றதைக் கண்டோம். தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே அதிபர் தேர்தல் பாணியில்தான் தேர்தல்கள் நடக்கின்றன. எம்ஜிஆரா, கருணாநிதியா; ஜெயலலிதாவா, கருணாநிதியா என்னும் எதிரெதிர் தரப்புகளை வைத்துத்தான் இங்கே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
பிம்ப அரசியலில் ஊறிய எம்ஜிஆருக்கு மிகவும் வசதியான களம் இது. “எல்லாத் தொகுதியிலும் நான்தான் நிற்கிறேன் என்று நினைத்து வாக்களியுங்கள்” என்று எம்ஜிஆர். ஒருமுறை இதைப் பகிரங்கமாகவே சொன்னார். இடைத்தேர்தலில்கூட “எனக்கும் கருணாநிதிக்கும்தான் போட்டி” என்று சொல்லி, ஆளுமை மோதல்களே தமிழகத் தேர்தலின் ஆதாரம் என்பதை வெளிப்படையாக்கினார். அதே பிம்ப அரசியலை முன்னெடுத்த ஜெயலலிதா, எம்ஜிஆரின் பாணியில் கருணாநிதியைத் “தீய சக்தி”யாக முன்னிறுத்தியே தன் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆளுமை சார்ந்த தேர்தல் அரசியலே கடந்த சில தசாப்தங்களாகத் தமிழகத்தின் யதார்த்தம். மக்கள் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைவிடவும் ஜெயலலிதாவை முதல்வராக்கினார்கள் என்பதே உண்மை.
இப்போது ஜெயலலிதா இல்லை என்ற சூழலில், அதிமுகவின் தலைமைப் பொறுப்பானது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்போடும் தொடர்புடையது என்கிற நிலையில், அந்தப் பொறுப்பை யார் ஏற்பது என்பதில் மக்களின் கருத்தறியப்பட வேண்டும்.
இப்போது சசிகலாவிடம் இருக்கும் அல்லது இருப்பதாக நம்பப்படும் அதிகாரத் தைக் கண்டு அஞ்சும் கட்சிக்காரர்கள் சிலர் ஒரே நாளில் அவரைச் ‘சின்னம்மா’வாக்கி அழகுபார்க்கலாம். காலம் மாறியது, கால்களும் மாறின என்று விழுந்து எழலாம். ஆனால், இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம் என்னவென்று முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ அவரிடம் கொடுத்ததில்லை என்பதாலேயே இப்போது அவரது தேர்வு பற்றிய யூகங்கள் சர்ச்சையைக் கிளப்புகின்றன.
மேலை நாடுகளில் இதுபோன்ற சிக்கலான கட்டங்களில் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக் கேட்பது, மக்களின் கருத்தைக் கேட்பது, ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு மதிப்பளிப்பது எனப் பல தளங்களில் கட்சியின் அடுத்த தலைமை முடிவுசெய்யப்படும். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தை அடைய முனையும் கட்சியின் விவகாரம் அந்தக் கட்சியினுடையது மட்டுமல்ல என்பதையே இது காட்டுகிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதுவும் அதிமுக போன்ற ஒரு கட்சியிடம் அவ்வளவு எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், மக்களின் விருப்பு வெறுப்பை அறியாமல், இது போன்ற ஒரு தேர்வு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் எனும் கேள்வி எழும்போது முறையான தேர்தல் நடத்தி அதை முடிவு செய்வதே இங்குள்ள நடைமுறை. ஜெயலலிதா இல்லாமல் ஆகிவிட்ட சூழலில் அதன் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய, முழுமையான உள்கட்சித் தேர்தலை அதிமுக நடத்த வேண்டும். அக்கட்சியின் தொண்டர்கள் மட்டத்தில் இருந்து நடைபெறும் அத்தேர்தலின் உச்சத்தில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு நடக்கலாம். அதுவரை அமையும் எந்தத் தலைமையும் தற்காலிகத் தலைமையாகவே கருதப்படும். அப்படியான தற்காலிகத் தலைமையை, மக்கள் கருத்தறியாமல் நிரந்தரமாக்கும் எந்த முயற்சியும் தார்மிக அடிப்படையில் ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாகவே இருக்கும்.
தமிழகத்தை ஆளும் எண்ணமும் சசிகலாவுக்கு இருக்கலாம். அப்படியானால், அவர் பொதுத் தேர்தலில் வென்று வருவதே சரி. மக்கள் ஆதரவு பெற்ற ஓர் இயக்கம், மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஓர் இயக்கம், தன் தலைமையைத் தேர்ந்தெடுப்பதென்பது அக்கட்சியை ஆதரித்தவர்கள், அதன் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம். அதிமுகவினர் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT