Published : 27 Dec 2022 06:49 AM
Last Updated : 27 Dec 2022 06:49 AM
‘பொருட்களை வாங்குவதற்கு முன் உங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்பது நுகர்வோருக்குப் பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால், அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அதையெல்லாம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை.
வாங்கிய பொருளோ சேவையோ குறைபாடுள்ளது எனத் தெரியவரும்போதுதான் வருந்திப் புலம்புகிறோம். நுகர்வோரின் குறைகளைத் தீர்க்க நீதிமன்றங்கள், ஆணையங்கள், அரசு அமைப்புகள் உள்ளன. இதுகுறித்த அடிப்படையான விஷயங்களை, நுகர்வோர் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.
யார் நுகர்வோர்?: தம் சொந்த உபயோகத்துக்காகக் காசு கொடுத்து ஒரு பொருளையோ பணியையோ சேவையையோ பெறும் ஒருவர் நுகர்வோர் ஆவார். அவர் அப்பொருளுக்கான விலையை முழுமையாகவோ பகுதியாகவோ செலுத்தியிருக்கலாம், அல்லது விலையை முழுமையாகவோ பகுதியாகவோ பின்னர் தருவதாக வாக்களித்திருக்கலாம். குடியானவர் முதல் குடியரசுத் தலைவர்வரை அனைவருமே நுகர்வோர்தான்.
எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் வாடிக்கையாளர்தான் அடித்தளம். நுகர்வோரின் தேவைகளை அடையாளம்கண்டு நிறைவேற்றுவது ஒரு நிறுவனத்தின் முதன்மை நோக்கம். மக்கள்தொகையில் சீனாவை விஞ்சப்போகும் இந்தியாவில், நுகர்வுச் சந்தை பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. கூடவே கலப்படம், தரமின்மை, ஏமாற்று வேலைகள் போன்ற அக்கிரமங்கள் அன்றாடம் அரங்கேறுகின்றன.
இணையவழி நுகர்வுக் கலாச்சாரம் அதிகரிக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளில் நுகர்வோர் பதிவுசெய்த புகார்களில், இணையவழி வர்த்தகம் தொடர்பானவை 22% என நுகர்வோர் விவகாரங்கள் துறையின் புள்ளிவிவரம் (2021) தெரிவிக்கிறது. வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதான புகார்களும் அதிகரித்திருக்கின்றன.
கடந்துவந்த பாதை: 1962 மார்ச் 15 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்து, அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடி ஆற்றிய உரை இதற்கு ஆழமான அடித்தளமிட்டது. அதன் தொடர்ச்சியாக 1985இல் நுகர்வோர் பாதுகாப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஐநா அவை நிறைவேற்றியது. அதைக் கடைப்பிடித்து, தேவையான கொள்கை மாற்றங்கள், சட்டத்திருத்தங்களைச் செய்து நுகர்வோர் பாதுகாப்பை ஊக்குவிக்குமாறு உறுப்பு நாடுகளை ஐநாவின் அப்போதைய பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 டிசம்பர் 24 அன்று நடைமுறைக்கு வந்தது; அது தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளைச் சிறப்பாகவும் விரைவாகவும் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் வழிசெய்கிறது. நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பதிவுசெய்யப்படும் புகார்களில் 90% தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டுவருகிறது.
உரிமைகள் என்னென்ன?: பாதுகாப்பு உரிமை, தகவல்பெறும் உரிமை, விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை, குறை தீர்க்கக் கேட்கப்படும் உரிமை, நுகர்வோர் கல்விபெறும் உரிமை, குறை நிவர்த்திபெறும் உரிமை, சுகாதாரமான சுற்றுச்சூழல் உரிமை எனப் பல்வேறு உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு.
ஒரு பொருளிலோ சேவையிலோ குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு அல்லது வணிக நிறுவனத்தை அணுகி, அக்குறையை நிவர்த்தி செய்துதரவோ பொருளை மாற்றித் தரவோ அல்லது செலுத்திய தொகையைத் திரும்பப் பெறவோ எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுக்கலாம். மனு செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவனம், அரசிடமிருந்து ஒப்புகை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நிறுவனம் குறையைத் தீர்க்காதபோது அவற்றைத் தீர்த்துவைக்க சட்டப்படியான நடவடிக்கையைத் தொடரலாம். அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, அதிக விலைக்கு விற்பது, சரியாகக் காப்பீடுகள் வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவச் சேவைகளில் ஏற்படும் குறைகள், வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் போன்றவற்றுக்குக் குறைதீர் ஆணையம் மூலம் நிவாரணம் பெற முடியும். நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார்தாரரே வாதிட்டு நீதி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்க அம்சம்.
புகாரில் இருக்க வேண்டியவை: புகார் செய்பவர் தனது பெயர், முழுமையான முகவரி ஆகியவற்றுடன் எதிர் மனுதாரர் குறித்த விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பொருள் வாங்கிய / சேவையைப் பெற்ற தேதி / அதற்காகச் செலுத்தப்பட்ட தொகை, வாங்கப்பட்ட பொருள் / சேவையின் விவரம் ஆகியவையும் அடிப்படையானவை. பட்டியல் / ரசீது நகல்கள், கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள் ஆகியவற்றை இணைப்பது அவசியம். பாதிக்கப்பட்ட நுகர்வோர் அது தொடர்பாக இரண்டு ஆண்டு காலத்துக்குள் புகாரைப் பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னர் வரும் புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
மேல் முறையீட்டு மனுக்கள்: மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் முறையிடலாம். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் மேல்முறையீடு செய்யக் கட்டணம் இல்லை. மேல்முறையீடு செய்வதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
நுகர்வோர் நீதிமன்ற விதிகள்: நீதிமன்றத்தில் புகார் பதிவுசெய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய குறைகளையும் அவர்கள் கோரும் தீர்வுகளையும் சரியாக விவரித்து நோட்டிஸ் அனுப்ப வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்லத் தேவையில்லை. இது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி என்பது கவனிக்கத்தக்கது. நீங்கள் அனுப்பிய நோட்டீஸுக்குப் பதில் வரவில்லை எனில், நுகர்வோர் சட்டத்தின் கீழ் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவுசெய்யலாம்.
ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆவணங்களுடன் பதிவுசெய்ய வேண்டும். ரூ.1 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை இழப்பீடு உள்ள புகார்களை மாநில நுகர்வோர் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். ரூ.10 கோடிக்கும் மேல் இழப்பீடுகள் கோரும் புகார்களைத் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
‘உங்களின் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அவர்கள்தான் மன்னர்கள்!’ என்பது வணிகச் சந்தையின் இன்னொரு மந்திரம். ஆகவே, மணிமுடியை இறக்கிவைக்காமல் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்குங்கள் நுகர்வோரே! சங்கடம் நேர்ந்தால் சட்டமும் நீதி அமைப்பும் துணை நிற்கும். - ஆர்.வெங்கேடச பெருமாள் உறுப்பினர், தமிழ்நாடு மாநில நுகர்வோர்ர் குறைதீர் ஆணையம், தொடர்புக்கு tnconsumercourt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT