Published : 29 Dec 2016 09:18 AM
Last Updated : 29 Dec 2016 09:18 AM
நம் உடலில் காயம் ஏற்பட்டால், அருகில் உள்ள தோல், சதையின் செல்கள் காயம்பட்ட இடத்தை நோக்கி வளரும். தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் உடலின் இந்தப் பணிக்கு உதவவும், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவுமே பிளாஸ்டர் அல்லது மருந்துத் துணியை (பேண்டேஜ்) பயன்படுத்துகிறோம். புண்ணில் இருந்து கசியும் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை உறிஞ்சி புண்ணை உலர்வாக வைத்தல், கிருமி நாசினியைத் தொடர்ந்து சுரந்து தொற்றில் இருந்து காத்தல் ஆகியவையே இதன் பணி.
காயத்தை விரைவாகக் குணமாக்கி, தழும்பே தெரியாமல் ஆற வைப்பதற்கான ஆய்வை குவாஹாட்டி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டிம்பிள் சௌஹான், பிமான் நாத் நடத்தினர். பட்டுநூல் தயாரிப்புக்குப் பயன்படும் பட்டுப்பூச்சி மற்றும் காட்டில் வளரும் பட்டுப்பூச்சி ஆகியவற்றின் இழைகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பட்டு இழையால் உருவாக்கப்பட்ட துணியை முயலின் உடலில் ஏற்பட்ட காயத்துக்குக் கட்டாகப் பயன்படுத்தியபோது, அது சாதாரண மருந்துத் துணியைவிட மிகச்சிறந்த பலனைக் கொடுத்தது.
440% வரை நீரை உறிஞ்சி அதில் ஒரு பகுதியை ஆவியாக வெளியேற்றியது. இதில் சேர்க்கப்பட்டிருந்த சிப்ரோபிளாக்சின் எனும் கிருமிநாசினியை மெல்ல மெல்லப் புண்ணின் மீது சுரந்தது. சுமார் 80 மணி நேரம் வரை அந்த செயல்பாடு நீடித்தது. சாதாரணக் கட்டு போட்டால் இவ்வளவு நேரம் கிருமி நாசினி தங்காது என்பதால், மறுபடி மறுபடி கட்டைப் பிரித்துப் போட வேண்டி வரும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, புண்ணை வேகமாக குணப்படுத்தியது இந்தக் கட்டு. காயத்தில் அரிப்பு, ஒவ்வாமை போன்ற எதிர்விளைவுகளையும் அது ஏற்படுத்தவில்லை. சாதாரண துணியில் காயம் ஆற 21 நாட்கள் ஆகும் என்றால், இது வெறும் 18 நாளில் காயத்தை ஆற்றியது. இரண்டு இழைகளுக்குப் பதில் பட்டுப்பூச்சியின் இழைகளை மட்டும் பயன்படுத்தியபோது, காயம் 15 நாளில் குணமானது. அதேபோல காட்டுப் பட்டுப்பூச்சியின் இழையை மட்டுமே பயன்படுத்தியபோது, 10 நாளிலேயே புண் குணமாகியது; தழும்பும் மறைந்தது.
முயலின் மேல் தோல் மட்டுமல்ல. சதை, மயிர்க்கால், மயிர்ப்பைகள் எல்லாம் புத்தாக்கம் பெற்றன என்பது ரொம்ப முக்கியமான விஷயம். வழக்கமாக ஆழமான காயங்களில் இவை சரிவர மீட்டுருவாக்கம் அடையாது. தழும்பு ஏற்படும். நானோ இழைகள் இந்தக் குறைபாட்டைக் களைகின்றன. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தனர். அப்போது மூகா, ஈறி காட்டுப் பட்டுப்பூச்சியின் புரதங்களில் ஆர்.ஜி.டி. எனப்படும் அர்கினின் கிளைசின் அஸ்பட்டேட் எனும் அமிலம் இருப்பது தெரியவந்தது. காந்தம் இரும்பைக் கவர்வது போல, இந்த அமிலம் புண்ணைச் சுற்றியுள்ள பழுதாகாத செல்களைக் கவர்ந்து, விரைவாக வளரச் செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சோதனைச் சாலையில், நானோ இழை கொண்டு உருவாக்கப்பட்ட விரிப்பில் செல்களை வளர்த்தபோது, அவை கிடுகிடுவென வளர்ச்சியடைந்தன. ஆனால், காட்டுப் பூச்சியில் உள்ள இந்தப் புரதம், நாம் பட்டுநூல் தயாரிப்பதற்காக வளர்க்கும் பட்டுப்பூச்சியில் இல்லை என்பதும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகளின் மிகப்பெரிய பிரச்சினை, ஆறாத காயங்கள் தான். அதன் மீதும் இந்த நானோ துணியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், முடிவு நம்பிக்கை தருவதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் இந்த முடிவுகளை இன்னமும் அறிவியல் இதழ்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. சர்க்கரை நோயாளிகளின் புண்ணை விரைவில் ஆற்றுவது உண்மையென்றால், இந்த ஆய்வு மருத்துவத்துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான்.
- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT