Published : 08 Dec 2016 10:05 AM
Last Updated : 08 Dec 2016 10:05 AM

மாநிலங்களின் உரிமைக் குரல்!

வரலாற்றில் ஒருவருக்கு என்ன இடம் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நவீன தமிழக வரலாற்றில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன இடம் கிடைக்கும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இது அவருக்கான அஞ்சலி செலுத்தும் நேரம் என்பதால் மட்டும் அல்ல, அவரது மறைவுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புள்ள ஓர் அபாயம் குறித்த கவலையாலும் இதைப் பற்றி இந்த நேரத்தில் நாம் பேச வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதாவைப் பற்றிய தன் இரங்கல் உரையில், திமுக எம்பி-யான கனிமொழி பேசியபோது, ஜெயலலிதா தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காதவர் என்று கூறினார். அதைக் கேட்கும்போது சற்று ஆச்சரியமாக இருந்தது. மாநில உரிமை என்று கூறினாலே, அதைத் திமுகவுடன் இணைத்துப் புரிந்துகொள்வது என்பதுதான் காலம் காலமாக இருக்கும் ஒரு வழக்கம். ஜெயலலிதாவின் பிம்பத்தோடு மாநில சுயாட்சி என்கிற கருத்தாக்கம் அவ்வளவாகப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அது மட்டுமின்றி, இக்கால அரசியல்வாதிகள் பலருக்கும் தேவைப்படாத பிம்பம் அது.

மாநில உரிமைகளின் பாதுகாவலர்

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இந்தியா முழுமையிலும் என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று பாருங்கள். வழக்கமான அஞ்சலிக் குறிப்புகளுக்கு அப்பால், ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி, பெண்ணினத்தின் நாயகி என்பது போன்ற வர்ணனைகளுக்கு அப்பால், அரசியல் கிசுகிசுக்களுக்கு அப்பால் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவரது பங்களிப்பாக எதைப் பேசுகிறார்கள் என்று பாருங்கள். ஒரு சிறு வட்டத்தில்தான் என்றாலும், ஜெயலலிதாவின் மாநில உரிமைகள் குறித்த பங்களிப்பு குறித்து ஒரு விவாதச் சரடு ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க முடியும்.

சமீப காலத்தில், நரேந்திர மோடி அரசுடன் மத்திய - மாநில உரிமைகள் விஷயத்தில் (குறிப்பாக, ஜிஎஸ்டி, 'நீட்', இந்தித் திணிப்பு உள்ளிட்டவை) ஜெயலலிதா எழுப்பிய எதிர்க்குரலைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளுக்கான கூட்டுக்குரலாக அவர் இருக்கிறார் என்று தமிழ்நாட்டில் சிலர் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால், வங்கம், பஞ்சாப், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாநில உரிமை நலன்களில் நாட்டம் கொண்டவர்கள் சமூக ஊடகங்களில் அது தொடர்பாக பதிவுசெய்துவந்ததை நான் பார்த்துவருகிறேன். அதன் தொடர்ச்சியாக இரு நாட்களாக அத்தகைய பதிவர்களின் அஞ்சலிக் குறிப்புகளையும் பார்த்தேன். அவர்கள் ஜெயலலிதாவை மாநில உரிமைகளின் பாதுகாவலர்களில் ஒருவராகவே மதிக்கிறார்கள்.

காலம் கற்றுத்தந்த பாடம்

ஜெயலலிதாவுக்கு இந்த வரலாற்றுப் பாத்திரம் எப்படிக் கிடைத்தது? 2011-க்குப் பிந்தைய ஜெயலலிதாவின் அணுகுமுறைகள், அவரது முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், பல வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று, மாநில உரிமைகள் தொடர்பாக மத்திய அரசுகளோடு அவர் முரண்பட்டது. இத்தனைக்கும் தன் மீதான வழக்குகள் உட்படப் பல காரணங்களுக்காக டெல்லி விவகாரங்களில் கவனம் காட்ட வேண்டிய நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார். அவரது நெருங்கிய நண்பரும் சித்தாந்தரீதியிலும் அரசியல் பாணியிலும் இணக்கம் கொண்டவருமான மோடி அரசோடு அவர் இப்படியான பிணக்குகளை மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. மேற்கொள்ள வேண்டும் என்று இங்கே யாரும் நிர்ப்பந்தம் செலுத்தவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், அவர் ஏன் அப்படி எதிர்வினை ஆற்றினார்?

காலம் கற்றுத்தந்த பாடமாக இருக்கலாம். 2009 ஈழ இனப் படுகொலைக்குப் பின் ஈழம் தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதா முற்றிலும் வழக்கத்துக்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதில் நிச்சயமாக சந்தர்ப்பவாதம் இருந்தது என்பதை மறுக்க இயலாது. "போர் நடக்கும்போது மக்கள் சாகத்தானே செய்வார்கள்?" என்று கூறியவர்தான் அவர். ராஜீவ் கொலையுண்டதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் முதல்வரான ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாடு அறியும். தமிழ் என்று சொன்னாலே

'தடா' என்கிற ஆட்சிக்காலம் அது. மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அடித்தளத்தை நொறுக்கித்தள்ளியவர் அவர்தான்.

ஒரே ஈழ ஆதரவு நாடு

ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டமன்றத்தில் ஈழச் சிக்கல் தொடர்பாக அவர் நிறைவேற்றிய தீர்மானங்களும் மூவர் விடுதலை தொடர்பாக (குளறுபடிகளுடன் இருந்தாலும்) அவர் எடுத்த நடவடிக்கைகளும் ஒரு மாறுபட்ட ஜெயலலிதாவைக் காட்டியது. ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை என்று குற்றஞ்சாட்டியதிலும் அதற்குப் பன்னாட்டு சுயாதீன விசாரணை வேண்டும் என்று கோரியதிலும் 2013-ல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று எதிர்த்ததிலும் உலகத் தமிழர்களின் குரலைத்தான் அவர் எதிரொலித்தார். அந்தத் துயரமான நேரத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக தமிழ்நாடு அரசு விளங்கியது.

கோத்தபய ராஜபக்சக்களும் சிங்கள கார்ட்டூனிஸ்ட்டுகளும் பதறும் அளவுக்கு அவரது ஈழ ஆதரவு ஒரு உயர்ந்த கட்டத்தை எட்டியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாவின் பிம்பம் உயர்ந்தது. இதை நாம் வெறுமனே 'திமுகவைக் காலி செய்யும் உத்தி' என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அது அப்படித்தான் என்றாலும்கூட, சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் பிரதிநிதியாக, தமிழ்நாட்டின் முதல்வராக அவர் வரலாறு தனக்களித்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல முடியும். செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியவர்களுக்கு மத்தியில், தன் எல்லைக்குட்பட்ட அளவிலேனும், தைரியமாகச் செய்ய முன்வந்த ஒருவரை நாம் எப்படிக் குறைத்து மதிப்பிடுவது? இந்த விவகாரங்களில் அவர் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகவே வெளிப்படையாக நின்றார் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

ஜெயலலிதாவைப் பின்பற்றுங்கள்

அரசியல் தலைவர்கள், அரசியல் பலாபலன்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் சில களங்களில் தொடர்ச்சியான ஈடுபாடும் இருக்கிறது. ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. 2014 ஜூன் மாதம் இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில், அப்போது புதிதாகப் பதவியேற்றிருந்த அவரது நண்பர் நரேந்திர மோடியின் அசுர பலமிக்க அரசோடு ஜெயலலிதா மோதினார். முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசின் அதிகாரபூர்வக் கணக்குகளில் இந்தியைத்தான் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் (ஆங்கிலத்தில் பயன்படுத்துவது கட்டாயமல்ல) என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரு உத்தரவுகளைக் கடுமையாக விமர்சித்துக் கடிதம் எழுதினார். இந்தியை ஆட்சிமொழியாக ஏற்காத மாநிலங்களுடனான தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஆட்சிமொழிச் சட்டத்தின் திருத்த விதியைச் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு, தொடர்ந்து மோடி அரசு இந்தித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டபோது, தனது விரிவான அறிக்கைகள் அல்லது கடிதங்கள் மூலம் ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். இந்த எதிர்வினைகளை மொழியுரிமை தொடர்பான அமைப்புகள் உன்னிப்பாகக் கவனித்துவந்திருக்கின்றன. ஜெயலலிதாவைப் பின்பற்றுமாறு தத்தம் மாநில முதல்வர்களை வற்புறுத்தின.

அவரது வாழ்வின் இறுதித் தருணம் வரை அவர் மத்திய - மாநில உறவுகள் குறித்த விஷயத்தில் ஒரு தொடர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவர் விட்டுக்கொடுக்கிற விஷயங்கள் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சார்ந்து அமைகின்றன. ஆனால், அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களில் தமிழ்நாட்டின் நெடுங்காலக் கோரிக்கைகள் அடங்கியிருக்கின்றன. 69% இடஒதுக்கீடு எந்த அளவுக்கு சமூகநீதிச் சிக்கலோ அதே அளவுக்கு மாநில உரிமைச் சிக்கலும்கூட. அதில் அவர் உறுதியாக இருந்தார். காவிரி, முல்லைப்பெரியாறு என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் பொதுக்குரலை அவர் ஒலித்தார்.

எதிர்த்தவர்கள் பணிந்தார்கள்

சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான ஜிஎஸ்டி விவகாரத்தில், ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் மோடியின் பக்கம் நின்றன. முதலில் எதிர்த்தவர்களும் பிறகு பணிந்தார்கள். மாநில சுயாட்சிக்கென்றே கொடிபிடித்தவர்களான திமுகவினர்கூட, நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக உறுதியான முடிவெடுக்க இயலாத நிலையில் இருந்தது. உண்மையில், நாடாளுமன்றத்தில் அது தனிமைப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக ஜிஎஸ்டியை எதிர்த்துப் பேசினார். ஜிஎஸ்டிக்கான புதிய அமைப்பு என்பது மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மீறுகிறது என்றும், அது மாநிலங்களின் வரி இறையாண்மையை நிர்மூலமாக்கும் செயல் என்றும் தமிழக அரசு காட்டமாக வாதிட்டது. இறுதியாக, கடந்த சுதந்திர தின விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறினார்: "நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை நாம் இன்றைய தினம் நினைவுகூர்கிறோம். சுதந்திரம் என்றால் பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமை மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம்தான்."

இவை சாதாரணமான வாக்கியங்களா? வரி இறையாண்மை என்பதும் பொருளாதாரச் சுதந்திரம் என்பதும் ஆபத்தான வாதங்கள்தான். மத்திய அரசுக்கு அவர் எழுதும் கடிதங்களிலும் சட்டபூர்வமாக முன்வைக்கும் ஆவணங்களிலும் தீர்க்கமான முன்வைப்புகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். மாநில உரிமைகள் தொடர்பான ஜெயலலிதாவின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதோ இல்லையோ, தொடர்ச்சியானது என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லா முதல்வரையும்போல அவரும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்தான். ஆனால், அவரை எல்லாச் சமயங்களிலும் டெல்லியைக் கண்டு பயந்து நடுங்கியவர் என்று சொல்ல முடியாது. எந்தப் பிரதமரையும் ஆளுநரையும் அவர் தள்ளித்தான் வைத்திருந்தார். அவரது எதிர்ப்பைவிட அவரது ஆதரவைக் கண்டுதான் டெல்லிக்காரர்கள் அதிகம் பயந்தார்கள்! அவருக்கு டெல்லியின் அரசியலும் உள்நோக்கமும் நன்றாகத் தெரிந்திருந்தது.

செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா?

உதாரணமாக இந்த உரையைப் பாருங்கள். "ஐயா, நாம் இந்திய ஒருங்கிணைந்த நிதியம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், இந்த நிதியம் முதலில் எப்படி உருவாகியது? இதற்கான நிதி எப்படி சேகரிக்கப்படுகிறது? இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தின் உறுப்பினர்களாக உள்ள எல்லா மாநிலங்களும் பல்வேறு வழிகளில் பங்களித்து உருவாக்கப்பட்ட வருவாய்தானே இது? மத்திய அரசு என்கிற பலிபீடத்தின் முன்பு படையல்களைப் போல எண்ணற்ற வரிகளின் ஊடாக மாநிலங்கள் தொடர்ச்சியாக பெருந்தொகைகளை அளித்துவருகின்றன. இந்திய ஒருங்கிணைந்த நிதியத்துக்கு வருவாயைத் தொடர்ச்சியாக அளிப்பவை மாநிலங்கள்தானே?" என்று ஜெயலலிதா டெல்லியை நோக்கிக் கேட்டது நேற்று இன்று அல்ல. ஏப்ரல் 25, 1984-ல், மாநிலங்களவையில் செலவினங்கள் மசோதாவின் மீதான அந்த விவாதத்தில் அவர் கூறிய மற்றுமொரு கருத்து இன்றளவும் உண்மையானது: "வட மாநிலங்களின் பல மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கு முழுக் காரணம் அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத்தனமும் அக்கறை யற்ற போக்கும்தான். வட இந்திய மாநில அரசுகளின் ஒட்டுமொத்த கையாலா காத்தனத்துக்கும் மிக மோசமான நிர்வாகச் சீர்குலைவுக்கும் தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்? உண்மையில், தாங்கள் செய்யாத குற்றத்துக்காக நான்கு தென் மாநிலங்களும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?''

ஜெயலலிதா மாநிலங்களவை உறுப் பினராக இருந்தபோது, மாநில உரிமைகள் தொடர்பாகப் பல முக்கிய விவாதங்களில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசியிருக்கிறார். 1984 மே 5-ல் கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக வளர்ச்சி அமைச்சகத் திட்டம் குறித்த விவாதத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை மேற்கோள் காட்டி, தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று பேசிய பேச்சு குறித்து நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

கொல்லைப்புறக் கொள்ளை

அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் கட்டாயமாக இந்தியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதை அவர் அந்தப் பேச்சில் விமர்சித்தார். ஆம், நண்பர்களே, ஜெயலலிதா இவற்றையெல்லாம் பேசியிருக்கிறார். ஒரு நடிகைக்கு, ஒரு பெண்ணுக்கு, வெறுமனே எம்ஜிஆரின் தோழிக்கு, எப்படி அரசியல் தெரியும் என்கிற ஒரு பொதுப்புத்திக்கு இது புரியாமல் போகலாம். ஆனால், இப்படிப்பட்ட விவாதங்களிலும் கடிதங்களிலும் ஆவணங்களிலும்தான் வரலாறு ஒருவரைப் பதிந்துகொள்கிறது.

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பாஜக கொல்லைப்புறமாக வந்து அதிமுகவைக் கவர்ந்துசெல்ல நினைக்கிறது அல்லது அதன் அடித்தளத்தை நொறுக்க நினைக்கிறது. முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் என்ன நடந்தது? மருத்துவத் தேர்வுகளுக்குப் பொது நுழைவுத்தேர்வான 'நீட்'-ல் தமிழ்நாட்டைச் சேர்க்காதீர்கள் என்றார் ஜெயலலிதா. 'நீட்' சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்பது அவரது கருத்து. அவர் நினைவின்றி இருந்த நேரத்தில், மத்திய அரசு அதிமுகவை நெருக்கி சம்மதம் பெற்றுவிட்டது. பொம்மைகளை ஆட்டுவிக்கும் கயிறுகள் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன. அவர்களைப் பொம்மைகளாக நடத்திய ஜெயலலிதாவின் எல்லையும் இதுதான்.

நாம் மேற்கொள்ள விரும்புகிற மாநில உரிமைகளுக்கான போராட்டத்தின் முன்மாதிரியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்று ஒருபோதும் கூற முடியாது. இத்தகைய ஆட்சிகளோ கட்சிகளோ டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான சவால் என்றும் கூற முடியாது. ஆனால், டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் "நீ மகாராஜா என்றால், நான் மகாராணி" என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட - அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும். அதனால், அந்தப் போராட்டத்தைத் தொடர்வதே அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்!

- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x