Last Updated : 14 Dec, 2022 06:54 AM

1  

Published : 14 Dec 2022 06:54 AM
Last Updated : 14 Dec 2022 06:54 AM

மகா - நாடக மல்லுக்கட்டு: எல்லை மீறும் சச்சரவு!

மகாராஷ்டிரம் - கர்நாடகம் இடையிலான எல்லைப் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில், மகாராஷ்டிர எல்லையில் உள்ள கர்நாடக மாவட்டமான பெலகாவியை முன்வைத்து வன்முறை வெடித்தது; சற்றே தணிக்கப்பட்டிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய எரிமலையாகவே புகைந்துகொண்டிருக்கிறது இந்தச் சச்சரவு. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிப்பொறுப்பில் பாஜக இருக்கும் நிலையில், ஏன் இப்படி ஒரு மோதல் எனும் கேள்வி இயல்பாக எழுந்திருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே மொழி அடிப்படையிலான நில எல்லைப் பிரச்சினைகள் இந்தியாவுக்குள் இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகம் வழிவகுத்தது. முதன்முதலாக 1953இல் ஆந்திரம் தனி மாநிலமாக உருவானது; அதைத் தொடர்ந்து, பெலகாவி பிரச்சினையும் வெடித்தது.

1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பெலகாவி மாவட்டத்தில், 64.39% பேர் கன்னடம், 26.04% பேர் மராத்தி மொழியினர். ஒரே பகுதியில் வசித்த இரு தரப்புக்கும் இடையில் உருவான முரண், அடுத்தடுத்து வளர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பம்பாய் மாகாணத்தில் பெலகாவி இணைக்கப்பட்டது, கன்னடியர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியது. பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்படி 1956 இல் பெலகாவி ஒருங்கிணைந்த மைசூர் மாநிலத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால், மராத்தி மொழியினர் வசிக்கும் கிராமங்களை விட்டுத்தர முடியாது என பம்பாய் அரசு மத்திய அரசிடம் முறையிட்டது. 1966 இல் அமைக்கப்பட்ட மஹாஜன் குழு, பெலகாவியில் இருந்த சுமார் 200 கிராமங்களை மகாராஷ்டிரத்துடன் இணைக்கப் பரிந்துரைந்தது. அதேவேளை, பெலகாவியும் மேலும் 200 கிராமங்களும் கர்நாடகத்திலும் தொடர வேண்டும் என அக்குழு கூறியது. இதை ஏற்க கர்நாடகம் முன்வந்தாலும் மகாராஷ்டிரம் மறுத்துவிட்டது. பெலகாவி, அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள சுமார் 800 கிராமங்களை மகாராஷ்டிரம் சொந்தம் கொண்டாடுகிறது.

இதற்கிடையே, மராட்டியர்கள் சார்பில் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி (MES), கன்னடியர்கள் சார்பில் கர்நாடக ரக்ஷண வேதிகே (KRV) என உருவான அமைப்புகள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்கும். பல்வேறு காலகட்டத்தில் இரண்டு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். தீர்வுகோரி 2004இல் உச்ச நீதிமன்றம் சென்றது மகாராஷ்டிரம். இவற்றையும் மீறி பிரச்சினை உச்சம் பெறும்போது அது வன்முறையாக வடிவமெடுத்துவிடுகிறது. அப்படியான மோதலில்தான் மகாராஷ்டிரமும் கர்நாடகமும் தற்போது ஈடுபட்டுள்ளன.

வார்த்தை வம்பு: உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நெருங்கும் நிலையில், மகாராஷ்டிரத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஜத் தாலுகாவைக் கர்நாடகத்துடன் இணைக்கும் முயற்சி தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியது மராட்டியர்களைக் கோபத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையே, மகாராஷ்டிர அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டிலும் சம்புராஜ் தேசாயும் அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பெலகாவி மாவட்டத்துக்கு டிசம்பர் 3இல் வரவிருப்பதாகச் செய்திகள் வெளியானதும் கர்நாடகத்தில் கனல் வீசியது. இதையடுத்து, இருவரும் அங்கு செல்லத் தடைவிதிக்கப்பட்டது. இரண்டு மாநிலங்களிலும் பரஸ்பரம் வாகனங்கள் தாக்கப்பட்டன.

அரசியல் கணக்குகள்: அரசுப் பணியில் சேர கன்னட மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை 1986இல் அப்போதைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே பிறப்பித்தார். ஜனதா கட்சியைப் பலப்படுத்தும் இந்த முயற்சிக்கு மராட்டியர்களிடமிருந்து எதிர்ப்பு அதிகரித்ததும் எல்லையில் வசிப்பவர்களுக்கு அது பொருந்தாது என இறங்கிவந்தார் ஹெக்டே. பொதுவாக தேசியக் கட்சிகள் இவ்விஷயத்தில் சற்றே கவனத்துடன் செயல்படும். அவற்றுக்கு மகாராஷ்டிரம், கர்நாடகம் இரண்டும் முக்கியம்.

அதேவேளை, தேர்தல் நெருக்கத்தில் அந்தந்த மாநிலத் தலைவர்களுக்கு அஸ்திரமாக இந்த விவகாரம் கையில் சிக்கும். 2023இல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் பொம்மை கைக்குச் சென்றிருக்கிறது. இன்னொருபுறம், மாநிலக் கட்சி எனும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்த விவகாரத்தில் அனுகூலத்தை எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் துணை நின்றால் பெலகாவியின் ஒட்டுமொத்த ஆதரவும் அக்கட்சிக்குக் கிடைக்கும் எனத் தூண்டில் போடுகிறது கர்நாடக ரக்‌ஷன வேதிகே.

மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒரே குரலில் பேசுகின்றன. இவ்விஷயத்தில் பாஜகவைவிடவும் சிவசேனா தீவிரமாக இயங்குகிறது. ஒருவகையில் பெலகாவியில் சிவசேனாவின் வளர்ச்சி, மகாராஷ்டிர ஏகிகரண் சமிதியையே வலுவிழக்க வைத்துவிட்டது. பாஜகவின் வளர்ச்சியும் அதன் செல்வாக்கைக் குறைத்திருக்கிறது. இதனால் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டிய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படி, சிக்கல்களும் சிடுக்குகளும் நிறைந்த விவகாரம் இது.

தீர்த்துவைப்பாரா அமித் ஷா?: வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது கர்நாடகம் இப்படி நடந்துகொள்வதால், மத்திய அரசிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மகாராஷ்டிரத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ். இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றம் அல்ல, நாடாளுமன்றம்தான் என்கிறது கர்நாடகம். இப்படியான சூழலில், இரண்டு மாநில முதல்வர்களும் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவிருக்கின்றனர். இதற்கிடையே, மகா விகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களும் கர்நாடக பாஜக எம்.பிக்களும் அவரைத் தனித்தனியே சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

பிற எல்லைப் பிரச்சினைகள்: வடகிழக்கு மாநிலங்களிலும் எல்லை மோதல்கள் பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினைதான். இப்போது சிக்கல் மேலும் அதிகரித்திருக்கிறது. அசாமின் முக்ரு வனப் பகுதியில் மேகாலயாவைச் சேர்ந்த மரக் கடத்தல்காரர்களுக்கும் அசாம் வனத் துறையினருக்கும் இடையில் கடந்த மாதம் நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் பாஜக அரசுதான் அவசர கதியில் நடந்துகொண்டது என விமர்சனம் எழுந்தது.

இத்தனைக்கும் மேகாலயாவின் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி (NPP), பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. முன்னதாக, 2021 ஜூலை 26இல் அசாம் போலீஸாருக்கும் மிசோரம் போலீஸாருக்கும் இடையே மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற பெரிய அளவிலான மாநில மோதல் இதற்குமுன் அங்கு நிகழ்ந்ததில்லை. மிசோரத்திலும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியின் ஆட்சிதான் நடக்கிறது. அப்படியிருந்தும், இவ்விவகாரம் மோசமடைய பாஜகவின் அணுகுமுறையே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

‘ஏழு சகோதரிகள்’ எனும் பெயரில் ஒரே குடையின்கீழ் அமைதியாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில், பாஜகவின் வரவால் அமைதி குலைந்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்க எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு விவகாரங்களைக் கையில் எடுத்துக்கொள்கிறது. பெரும்பாலும் அந்தப் பிரச்சினைகள் முன்பு இருந்ததைவிட மோசமான நிலைக்கே செல்வதாக விமர்சனங்கள் உண்டு. பெலகாவியும் அதில் சேருமா என விரைவில் தெரியவரும்! - சந்தனார், தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x