Published : 12 Dec 2022 06:52 AM
Last Updated : 12 Dec 2022 06:52 AM
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி குறித்த பிரஸ்தாபங்கள் அதிகரித்திருக்கின்றன. கருத்துக்கணிப்புகளையும் விஞ்சிக் கிடைத்த அசகாய வெற்றி இது. பிரதமர் மோடிதான் இதற்குக் காரணம் என அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். டெல்லியில் குஜராத் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, ‘மோடி... மோடி!’ எனும் கோஷம் விண்ணை அதிரச் செய்தது.
ஆனால், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் முறையே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடம் பாஜக அடைந்திருக்கும் தோல்விகளும் ஐந்து மாநில இடைத்தேர்தல்களில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் கலவையான வெற்றிகளும் மோடியின் செல்வாக்கு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
தேர்தல் வெற்றியே இலக்கு: ‘‘நாம் ஐந்து ஆண்டுகளில் ஆட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் கொண்டவர்கள் அல்ல. நீண்டகால இலக்கைக் கொண்டு திட்டமிடுபவர்கள்’’ என குஜராத் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டார் மோடி. அந்த இலக்கு எல்லா மாநிலங்களிலும் பாஜகவை வெற்றிபெற வைப்பது. அதனால்தான், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை உறுதிசெய்த கையோடு குஜராத்துக்குப் பறந்தார் மோடி. அங்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.
2017இல் வெற்றிக்கு மிக அருகில் காங்கிரஸ் வந்ததை மோடி மறந்துவிடவில்லை. எனவே, இந்த முறை குஜராத்தில் கூடுதல் கவனம் குவித்தார். குஜராத் பாஜக அரசுமீது ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கவே செய்தன. ஊழல் அதிகரித்திருக்கிறது என 53% பேர் கருதுவதாக, லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி அதிகரித்திருப்பதாக 10இல் 9 பேர் கூறியிருந்தனர். கூடவே, மூன்று முறை முதல்வர்கள் மாற்றப்பட்டது, மோர்பி தொங்குபால விபத்து எனப் பல பிரச்சினைகள் இருந்தன. அவற்றைத் தன் செல்வாக்கால் தகர்த்தார் மோடி.
மண்ணின் மைந்தன் தந்த வெற்றி: பிரதமராகி டெல்லி சென்ற பின்னரும், குஜராத்துடனான பிணைப்பை மோடி ஒருபோதும் தளரவிடவில்லை. முதல்வராக யார் இருந்தாலும் ஆட்சியின் லகான் அவர் கையிலேயே இருந்தது.
உற்பத்தியில் சிறந்த மாநிலம் எனும் அந்தஸ்தை 2021இல் மகாராஷ்டிரத்திடமிருந்து குஜராத் கைப்பற்ற மோடி முக்கியக் காரணமாக இருந்தார். அதனால்தான் ‘வளர்ச்சியின் நாயகன்’ என குஜராத்திகள் அவரைப் புகழ்கிறார்கள். ‘இது நான் உருவாக்கிய குஜராத்’ என்று மோடி பெருமிதமாகக் குறிப்பிடுவதை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இத்தனை சாதகமான அம்சங்களையும் வீணாக்காமல் வாக்குகளாக அறுவடை செய்வதில் மோடி உறுதியாக இருந்தார். 30க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டார். காங்கிரஸ் தலைவர்கள் குஜராத்தில் அதிக கவனம் செலுத்தாதது, ஆம் ஆத்மி கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை களத்தில் இருந்ததால் வாக்குகள் பிரிந்தது எனப் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு பெரும் தாக்கம் செலுத்தியது.
2017 தேர்தலில் சரிவைச் சந்தித்த இடங்களில் இந்த முறை சொல்லியடித்து வென்றிருக்கிறது பாஜக. குஜராத் மக்கள்தொகையில் 14%ஆக இருக்கும் பழங்குடியினர், இதுவரை பாஜகவுக்குப் பெருவாரியான ஆதரவை அளித்ததில்லை. இந்தத் தேர்தலில் அது மாறியிருக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததன் மூலம், இடஒதுக்கீடு கோரிப் போராடிவந்த படிதார்களின் பேராதரவைப் பெற்றது, தாக்கூர் சேனா, அர்புதா சேனா போன்ற சாதி அமைப்புகளைப் பயன்படுத்தி வாக்குகளை வளைத்தது எனப் பல உத்திகள் பாஜகவுக்குக் கைகொடுத்தன.
இந்துத்துவப் பரிசோதனைக் கூடமாகக் கருதப்படும் குஜராத்தில், 2002 கலவரம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதை மோடியின் சாதனையாகச் சொல்லி வெற்றிபெறும் அஸ்திரம் பாஜகவிடம் இருக்கிறது. “2002இல் மோடி ஒரு பாடத்தைக் கற்பித்தார். அதன் பின்னர் தலைதூக்கிப் பார்க்க ஒருவருக்கும் தைரியம் வரவில்லை” எனத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகவே பேசினார் அமித் ஷா. மொத்தத்தில் குஜராத் தேர்தலின் மையமாக மோடியே இருந்தார்.
தோல்விக்குப் பின்னே...: ஆனால், இந்த மாயாஜாலம் பிற தேர்தல்களில் எதிரொலிக்கவில்லை. குஜராத்தின் பூபேந்திர படேலைப் போலவே, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும் செல்வாக்கு இல்லாதவர்தான். ஆனால், படேலின் பதவியைக் காபந்து செய்த மோடியால் தாக்கூரைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் வழக்கம். அதைத் தவிர்க்க ஆளுங்கட்சியான பாஜக எவ்வளவோ பிரயத்தனம் செய்துபார்த்தது.
ஆனால், இமாச்சலப் பிரதேச மக்கள் மட்டுமல்ல, பாஜகவினர் சிலரே மோடியின் பேச்சைக் கேட்கவில்லை. இந்த முறை வேட்பாளர் தேர்வில் பாஜக செய்த மாற்றத்தால், சீட் கிடைக்காமல் பலரும் அதிருப்தியடைந்து சுயேச்சையாகப் போட்டியிட்டனர். குறிப்பாக, ஃபதேபூர் தொகுதியில் கிருபால் பர்மார் போட்டியிட விருப்பம் தெரிவித்தபோது, பிரதமர் மோடியே நேரடியாக அவரை கைபேசியில் அழைத்து, போட்டியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக வெளியான காணொளி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், மோடி சொல்லியும் கேட்காமல் அவர் போட்டியிட்டார். அவர் தோல்வியடைந்தது வேறு விஷயம். ஆனால், அவரது செயல் ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதாக காங்கிரஸ் அளித்த உறுதிமொழி, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்சினைகள் போன்றவை பாஜகவைத் தோல்வியடையச் செய்திருக்கின்றன. இத்தனைக்கும் 68 தொகுதிகளே உள்ள அம்மாநிலத்தில் 10க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டார். “வேட்பாளர் யாரென்று பார்க்க வேண்டாம்; என்னை மனதில் வைத்து வாக்களியுங்கள்” என்றே பிரச்சாரம் செய்தார். ஆனால், வெற்றி கிட்டவில்லை.
பிற தோல்விகள்...: 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிவிட்டது. எனினும், ஊழலுக்கு எதிராக முழங்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மதுக்கொள்கை முறைகேடு உள்ளிட்ட விமர்சனங்களை முன்வைத்த பாஜக, 104 இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் மோடி நேரடியாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும், அவரது படத்தைப் பதாகைகளில் பிரதானமாகப் பயன்படுத்திக்கொண்டது பாஜக. ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை.
இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களின் பிரச்சினைகளே பிரதானக் காரணிகளாக இருந்தன. எனவே, உத்தரப் பிரதேசத்தில் (மட்டும்) பாஜக பெற்ற இரண்டு வெற்றிகள் மோடியின் கணக்கில் சேரா. அடுத்த ஆண்டில் கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
2024இல் மக்களவைத் தேர்தல் காத்திருக்கிறது. அந்தந்த மாநிலங்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பட்டினி அதிகரிப்பு எனத் தேசிய அளவில் பல பிரச்சினைகள் முன்நிற்கின்றன. அவற்றையெல்லாம் மீறி மோடி வென்றால், அவரது மந்திரக்கோல் குறித்த சந்தேகங்கள் நிச்சயம் அகலும்! - தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT