Published : 07 Dec 2022 06:51 AM
Last Updated : 07 Dec 2022 06:51 AM

புதிய உச்சத்தைத் தொடும் தமிழ் விக்கிப்பீடியா

நீச்சல்காரன்

வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மொழிக்கும் தனது இருப்பைத் தக்கவைக்கக் கலைக்களஞ்சியம் என்பது இன்றியமையாதது. அவ்வகையில், தமிழுக்காகப் பெரியசாமித் தூரன் தலைமையில் 1954இல் வெளிவந்த ‘தமிழ்க் கலைக்களஞ்சியம்’ ஒரு மாபெரும் படைப்பாகும். அதன் பின்னர், அவ்வப்போது சில துறை சார்ந்த களஞ்சியங்கள் வெளிவந்திருந்தாலும், பெயர் சொல்லும் வகையில் அவை இல்லை.

கடல் நீரில் கால் நனைக்க முடியாமல் கண் கசியும் சக மனிதர்களுக்கெல்லாம் எப்படித் தொழில்நுட்பத்தின் உதவியால் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைந்ததோ, அதுபோல இணையம் என்ற தொழில்நுட்பம் அமைத்துக் கொடுத்த பாதைதான் விக்கிப்பீடியா.

உலக மொழிகள் அனைத்துக்கும் அந்தந்த மொழியினரே கலைக்களஞ்சியங்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை விக்கிப்பீடியா ஏற்படுத்தித் தருகிறது. இதை நிர்வகிப்பது யார்? அரசா, அமைப்பா என்றால், இரண்டும் இல்லை. காரணம், உலகின் எந்த மொழியையும் அரசோ அமைப்போ உருவாக்குவதில்லை. மக்களே மக்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் மக்கள் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியாவாகும். இதனால், எந்த அரசுக்கோ அமைப்புக்கோ சார்புநிலையிலோ கட்டுப்பட்ட நிலையிலோ இது இருப்பதில்லை. உள்ளதை உள்ளபடி எழுதிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது விக்கிப்பீடியா.

தமிழும் விக்கிப்பீடியாவும்: தற்போதைக்கு உலக அளவில் 318 மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டுள்ளது. ‘அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் பாரதியார் வாக்கின்படி, இணையத்தில் அந்தந்த மொழியினரின் முழுத் தன்னார்வ அறிவுப்பகிர்வின் அடிப்படையில் இவை உருவாக்கப்படுகின்றன. அரசியல் சண்டை, ரசிகர் சண்டை, வகுப்புவாதச் சண்டையிட்டு முட்டிக்கொள்ளும் இணையவாசிகளிடையே ஆக்கபூர்வமாகத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவோரும் உள்ளனர் என்பதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவே சான்று.

ஆம், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தமிழ்க் கட்டுரைகளைக் கடந்து புதிய மைல்கல்லைத் தமிழ் விக்கிப்பீடியா இப்போது எட்டியுள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்து அச்சு நூலாக உருவாக்கவும் அதை மேம்படுத்தவும் சாத்தியமில்லாத நிலையில்தான், தமிழின் தற்போதைய மாபெரும் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளுள் மூன்றாவது இடத்திலும், உலக மொழிகளுள் அறுபத்து ஒன்றாம் இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.

இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியில் 1.54 லட்சம் கட்டுரைகள் இருக்கும்போது தமிழ் மொழியில் 1.5 லட்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் 4.12 கோடி சொற்கள் உள்ளன. சுமார் 400 தொடர் பங்களிப்பாளர்கள் உழைத்திருக்கின்றனர். சுமார் 36 லட்சம் முறை தமிழ் விக்கிப்பீடியா திருத்தப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா என்னும் தளத்தை 2001இல் ஜிம்மி வேல்ஸும் லாரி சாங்கரும் இணைந்து உருவாக்கினார்கள். அதில் 2003 செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியா பக்கம் பெயர் அறியாத ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், இலங்கையைச் சேர்ந்த இ.மயூரநாதன் உட்படப் பலரால் வளர்த்தெடுக்கப்பட்டு, இரண்டாண்டுகளில் ஆயிரம் கட்டுரைகளை அடைந்தது. 2017 மே 8 அன்று ஒரு லட்சம் கட்டுரைகளாக விரிவடைந்து, இன்று 1.5 லட்சம் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இதில் வரலாறு, கலை, அறிவியல், பொது அறிவு என இல்லாத துறைகளே இல்லை எனலாம். தமிழகத்தின் பல கல்லூரிகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா பயிற்சி வகுப்புகளால் விக்கிப்பீடியா, அதன் துணைத் திட்டங்களில் கணிசமான மாணவர்கள் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள். இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் கூடுதலாக ஒவ்வொரு செய்தியைச் சேர்த்து மேம்படுத்தும் பல ஆசிரியர்களும் உள்ளனர். எந்தவொரு பிழையையும் சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளும் வசதியை இத்தளம் கொண்டுள்ளதால், உயிரோட்டமான ஒரு கலைக்களஞ்சியமாக இது உள்ளது.

இயங்குமுறையும் தாக்கமும்: இணையத்துக்கென்றே இருக்கக்கூடிய தன்மையான பல்லூடக வடிவு, தேடல் வசதி, வகைப்பாடு ஆகியவற்றைத் தாண்டி யாரும் எழுதக்கூடிய வகையில் இருப்பதே இதன் சிறப்பு. அதற்காக விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், அவர்களில் நிபுணர்கள் என எவருமில்லை என்கிற கூற்று மேம்போக்கானது. அனைவராலும் வளர்த்தெடுக்கக்கூடிய தன்மையைத்தான் கொண்டுள்ளதே அன்றி, தான்தோன்றித் தனமானதல்ல விக்கிப்பீடியா.

விரிவான கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் கொண்டு மேற்கோள்கள், ஆதாரங்கள் அடிப்படையில்ஒவ்வொரு நொடியும் பிழைகள் களையப்பட்டு, குறிப்பிடத்தக்க தன்மையற்ற கட்டுரைகள் நீக்கப்பட்டே வருகின்றன. முறையான உரையாடல்களும் நீண்ட மீளாய்வுகளும் இதன் தரத்தை மேம்படுத்த நடைபெற்றுவருகின்றன. அவதூறுகளும் தாக்குதல்களும் நடைபெறாமல் இருக்க உலக அளவில் கண்காணிப்புக் குழுவும் உள்ளது.

நூறு நிபுணர்களால் உருவாக்கக்கூடிய ஒரு கலைக்களஞ்சியம் சென்றடையக்கூடிய கரங்களைவிட, முகமறியா இணையவாசிகளால் உருவாகும் இக்களஞ்சியம் சென்றடையக்கூடிய கரங்கள் நிச்சயம் பல மடங்காகும். மேலும், நிபுணர்களால் உருவாக்கப்படும் ‘தமிழ்.விக்கி’ உட்பட பல களஞ்சியங்களும் இந்த விக்கிப்பீடியப் படைப்புகளைப் பெரிதும் பயன்படுத்துகின்றன என்பது தன்னார்வலர்களுக்குக் கிடைத்த வெற்றிஆகும்.

2010இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கெனத் தனிப் போட்டிகள் நடத்தப்பட்டு, இக்கூட்டுழைப்பைத் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்தது. 2016இல் தமிழக அரசின் சில துறைகளின் தரவுகள் பொதுவுரிமையில் அளிக்கப்பட்டு, அவை விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாகவும் ஆக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு கூகுள் உதவியுடன் இந்திய அளவில் நடந்த வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் கூட்டுழைப்பாகத் தமிழ் விக்கிப்பீடியா வெற்றி பெற்றுப் பெருமை சேர்த்தது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 1.5 லட்சம் கட்டுரைகள் நிறைந்து, இரண்டு லட்சம் கட்டுரைகளை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள நகர்வு என்பது 20 ஆண்டு கால முயற்சி மட்டுமல்ல, 2,000 ஆண்டு கால இலக்கியத் தொடர்ச்சியுமாகும். - நீச்சல்காரன் தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு: neechalkaran@gmail.com

To Read in English: Tamil Wikipedia touches a new high

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x