Published : 12 Dec 2016 10:05 AM
Last Updated : 12 Dec 2016 10:05 AM
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் உருவான வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்காலிக ஏற்பாடாக நெடுஞ்செழியனிடம் ஆட்சிப் பொறுப்புகள் தரப்பட்டன. ஆனாலும், கட்சிக்கும் ஆட்சிக்கும் நிரந்தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது.
உண்மையில், தன் கலையுலக வாரிசாக பாக்யராஜை சுட்டிக்காட்டியிருந்த எம்ஜிஆர், தனது அரசியல் வாரிசு என்று எவரையும் ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை. ஆகவே, எம்ஜிஆரின் இடம் எனக்குத்தான் என்று கட்சிக்குள் பலரும் கனவுக்கோட்டை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
முதல்வராக ஜானகி
அதிமுக எம்எல்ஏக்கள் இருகூறுகளாகக் பிரிந்து கிடந்தனர். ஜானகி வசம் 97 எம்எல்ஏக்கள் என்றார்கள். ஜெயலலிதா பிரிவோ தங்கள் பக்கம் 70 பேர் என்றது. அதிமுகவின் மொத்த எம்எல்ஏக்களே 131 தான். தலைகளை எண்ணிப்பார்த்தபோது ஜானகி கையே ஓங்கியிருந்தது. விளைவு, ஜானகி முதல்வரானார்.
பெரும்பான்மையை நிரூபிக்க காங் கிரஸ் கைகொடுக்க வேண்டும். ஆனால், காங்கிரஸோ கண்மூடி நின்றது. பிரிந்துகிடக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், "ஜானகி அரசை ஆதரிக்கிறோம் என்று சொல்லுங்கள்… ஆட்சி தொடரட்டும். பிறகு, ஜானகி கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம்" என்று ராஜீவுக்கு ஆலோசனை கொடுத்தார் சோ ராமசாமி. ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லிவிட்டார் ராஜீவ்.
சேவலும் ஜோடிப் புறாவும்
சாட்சிக்காரனுக்குப் பதில் சண்டைக் காரனுடன் கைகுலுக்கத் தயாரானார் ஆர்எம்வீ. திமுகவின் ஆதரவைக் கோரினார். மறுத்துவிட்டார் கருணாநிதி. என்ன ஆனாலும் சரியென்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் ஜானகி. அப்போது, சட்டமன்றத்தில் காவலர்கள் நுழைந்து தடுக்கும் அளவுக்கு வன்முறை வெடித்தது. என்றாலும், ஜானகி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றக் கலவரத்தைக் காரணம் காட்டி, ஆட்சியைக் கலைத்தது ராஜீவ் அரசு.
அதிமுக ஜெ பிரிவின் பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அப்போதே அவருக்குப் 'புரட்சித் தலைவி' பட்டம் கொடுத்தது பொதுக் குழு. இரட்டை இலைச் சின்னத்துக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் இரு பிரிவினருமே உரிமை கோரினர்.
17 டிசம்பர் 1988-ல் இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம். ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம். ஜானகிக்கு ஜோடிப் புறா. ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த காங்கிரஸ், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித் தனித்துப் போட்டியிட்டது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் திமுக களமிறங்கியது.
இருபத்தேழுக்கு ஒன்று
அதிமுக ஜெ பிரிவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்தது. ஜானகி பிரிவுடன் நடிகர் சிவாஜியின் கட்சி கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் போடிநாயக்கனூரில் ஜெயலலிதா நின்றார். நான்முனைப் போட்டியில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டும் வென்றார். எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. பிரிந்துகிடந்தால் லாபமில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தின. விளைவு, பொதுவாழ்விலிருந்து விலகினார் ஜானகி. பிறகு, இருபிரிவுகளும் ஒன்றிணைந்தன. ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. இரட்டை இலை மீண்டும் கிடைத்தது. அதன் மகிமை மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்களில் வெளிப்பட்டது. அவற்றில் அதிமுக வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். அதன்மூலம், "திமுக அரசை அகற்றுவதற்கான புரட்சிப் பயணம் தொடங்கிவிட்டது" என்றார் ஜெயலலிதா.
25 மார்ச் 1989. முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டைப் படிக்க எழுந்தபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது நடந்த களேபரத்தில் முதலமைச்சர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி உடைந்ததாகவும் ஜெயலலிதாவின் சேலை இழுத்துக் கிழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. தலைவிரிகோலமாக சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. அத்தோடு, திமுக அரசுக்கு எதிராகத் தன்னுடைய அரசியலைத் தீவிரப்படுத்தினார்.
அதிமுகவின் மறுபிறவி
1989 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ராஜீவ் காந்தி. சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. அதற்கான பலனாக அந்தக் கூட்டணி நாகப்பட்டினம் தவிர, ஏனைய 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அதன்மூலம் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக மறுபிறவி எடுத்தது.
உள்கட்சி அரசியலைத் தாண்டி, திமுகவுக்கு எதிரான அரசியலைத் தீவிரப்படுத்திய ஜெயலலிதா, தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கு குறித்துத் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பினார். மத்தியில் விபிசிங் அரசு கவிழ்ந்து, சந்திரசேகர் அரசு அமைந்தபோது அவருக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தார் ஜெயலலிதா. பின்னர், பத்மநாபா படுகொலையை முன்வைத்து தமிழக அரசைக் கலைக்கக் கோரினார். அதற்காக பிரதமர், குடியரசுத் தலைவர், ராஜீவ் உள்ளிட்ட பலரையும் தொடர்ச்சியாகச் சந்தித்தார். ஒருகட்டத்தில், சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி, திமுக அரசைக் கலைத்தார் பிரதமர் சந்திரசேகர்.
எம்ஜிஆர் ஃபார்முலா
தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே அதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. எம்ஜிஆர் ஃபார்முலா படி அதிக இடங்களில் அதிமுக போட்டியிட்டது. திடீரென சந்திரசேகர் அரசும் கவிழவே, மக்களவைத் தேர்தலும் வந்தது. ஆக, சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.
பர்கூர், காங்கேயம் என்ற இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் ஜெயலலிதா. கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை ராஜீவுடன் ஒரே மேடையில் தொடங்கினார் ஜெயலலிதா. தமிழகம் முழுக்கச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.
ஜெவின் சாதனை
அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் வந்த ராஜீவ், திடீரென ஸ்ரீபெரும்புதூரில் வைத்துக் கொல்லப்பட்டார். அப்போது எழுந்த அனுதாப அலையில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா முதன்முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இயங்கவே முடியாது என்று ஆரூடங்கள் சொல்லப்பட்ட நிலையில், உருக்குலைந்துபோன கட்சியை ஆளுங்கட்சி என்ற உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்தது ஜெயலலிதாவின் ஆகப்பெரிய சாதனை!
- ஆர்.முத்துக்குமார். எழுத்தாளர். 'தமிழக அரசியல் வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT